இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலோக் ஜோஷி,
- பதவி, முன்னாள் ஆசிரியர், சி.என்.பி.சி
(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
ஒரு நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையாக வளர்கிறது என்பது அதன் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியின் மதிப்பு குறைகிறது என்பதை காட்டுகிறது. இந்தியச் சூழலில் அதன் தாக்கங்கள் என்ன?
1990ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சுமார் 3.5 சதவீதமாக இருந்தது.
இது 'இந்து வளர்ச்சி விகிதம்' எனப்பட்டது. இந்த சொல்லாடலை உருவாக்கியவர் பேராசிரியர் ராஜ் கிருஷ்ணா.
அப்போது இதுகுறித்து யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால் அதன் பின்பு வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற பலரும் இந்த கருத்தாக்கத்தை கேள்விக்கு உட்படுத்தினர்.
இந்த விவாதம் சூடு பிடிக்கும் முன்பே பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு பதிலாக குறையத் தொடங்கியது.
ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியின் (ஜிடிபி) மதிப்பு வளர்ச்சி அடையாமல் தேக்க நிலையில் இருப்பது கூட தாங்கிக் கொள்ளக் கூடியதுதான்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு முதல் இந்தியா பொருளாதார மந்த நிலை குறைந்து விட்டது என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் இது பொருளாதார மந்தநிலை அல்ல பொருளாதார சரிவு மட்டுமே என்று ஓர் அறிஞர் பட்டாளம் கூறத் தொடங்கியுள்ளது.
ஆனால் விரைவில் இந்த விவாதமே அர்த்தமற்றதாக போகிறது என்று அவர்கள் யாரும் உணரவில்லை. அதற்கு காரணம் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மற்றும் அதன் காரணமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை.
இதைத்தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக எதிர்மறை வளர்ச்சி என்பதே பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது.
எதிர்மறை வளர்ச்சி என்றால் என்ன?
வளர்ச்சி என்றால் முன்னேறிச் செல்வது என்று பொருள். அதன்படி பார்த்தால் எதிர்மறை வளர்ச்சி என்பது அதற்கு எதிரான பொருளை தரக்கூடியதுதான்.
அதாவது பொருளாதாரம் சரிகிறது அல்லது பின்னோக்கிச் செல்கிறது என்று பொருள்.
இதைவைத்துப் பார்த்தோமானால் வளர்வதற்குப் பதிலாகத் தொழில்கள் அனைத்தும் சுருங்கி வருகின்றன.
தொழிலில் சரிவு ஏற்பட்டால் விற்பனை சரிவு மற்றும் லாபத்தில் சரிவு நிகழ்ந்துள்ளது என்று பொருள்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த மதிப்பு ஜிடிபி எனப்படுகிறது.
ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி அதிகரிக்கிறது என்றால் அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேறுகிறது என்று பொருள்.
இந்த வளர்ச்சி ஒருவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமமானதாக இல்லாமல் கூட போகலாம்.
ஆனாலும், அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமே நல்ல செய்திதான்.
அனைத்து பகுதிகளும் சம அளவில் முன்னேறவில்லை என்றாலும்கூட முன்பு இருந்த நிலையை விட தற்போதைய நிலையில் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் மேம்பட்டு இருக்கும்.
இதன் காரணமாக அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கும் செலவிடும் திறன் அதிகமாக இருக்கும்.
பொருளாதார ரீதியாக தேவையில் உள்ளவர்களுக்காக இந்த வரி வருவாய் மூலம் அரசால் அதிக பணத்தை செலவிட முடியும்.
பொருளாதாரம் எதிர்மறையாக வளர்ந்தால் என்ன செய்வது?
உதாரணமாக ஒரு கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் விற்கப்பட்டு அதன்மூலம் 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக பொருளீட்டப்பட்டிருந்தால், அந்தக் கடையில் லாப விகிதம் 15 சதவிகிதம் ஆகும்.
ஆனால், அதே மதிப்பிலான பொருட்கள் விற்கப்பட்டு அவற்றின் மூலம் கூடுதலாக கிடைக்கும் வருமானம் குறைகிறது என்றால் அந்த கடையின் லாபம் குறைந்து வருகிறது என்று பொருள்.
ஒருவேளை 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மட்டுமே விற்று அதே 15,000 ரூபாயை அந்த கடையின் உரிமையாளர் சம்பாதிக்க முடிகிறது என்றால் அவர் புத்திசாலித்தனமாக தொழில் செய்து மோசமான சூழல் எதுவும் தன்னை பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறார் என்று பொருள்.
ஆனால், பொதுவாக மேற்கண்ட இரண்டு சூழல்களும் தற்போது சரிவடைந்து வருவதை காண முடிகிறது.

பட மூலாதாரம், Reuters
ஒருமாத காலம் முழுவதும் ஒட்டுமொத்த சந்தையும் மூடப்பட்டு இருந்தால் அதன் விற்பனை லாபம் இரண்டுமே சரிவை சந்திக்கும்.
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவும் அந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. ஜூன் மாதம் முதலே தொழில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசு அனுமதி தெரிந்தாலும் விற்பனை இன்னும் பழைய நிலையை எட்டவில்லை. விரைவில் பழைய நிலையை எட்டுவது சாத்தியமானதாகத் தோன்றவில்லை.
இதன் காரணமாக இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்து வருகிறது.
அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் மற்றும் சேவைகளின் அளவு குறைந்து வருகிறது அல்லது குறையப் போகிறது என்பதையே இது காட்டுகிறது.
ஒப்புக்கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி
தற்போது எதிர்மறை வளர்ச்சி எந்த அளவு உள்ளது இந்தியாவின் பொருளாதார எதிர்மறையாக வளரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால் அது எந்த அளவு என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவிக்கவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் போது முடிவடையும் என்று யாராவது கணிக்க முடியும் என்றால், இந்த எதிர்மறை வளர்ச்சி எப்போது முடியும் என்பதை தம்மாலும் கணிக்க முடியும் என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்வது சரிதான் என்கிறார் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி எனும் அமைப்பின் தலைவர் மகேஷ் வியாஸ்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய பொருளாதாரத்துக்கு எவ்வளவு சேதாரம் ஆகி இருக்கும் என்பதை கணிப்பது மிகவும் சிரமமானது என்கிறார் அவர்.
5.5 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை இந்தியப் பொருளாதாரம் சுருங்கும் என இவரது அமைப்பு கணித்துள்ளது.
நிலைமை மோசமானால் சரிவு இதை விட அதிகமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
ஆனால் எப்படியும் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 5.5% எதிர்மறையாக வளர்ச்சியடையும் என்று அவர் கூறுகிறார்.
உலக வங்கி என்ன சொல்கிறது?
உலக வங்கியின் கணிப்பின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவிகிதம்தான் குறையும்.
அடுத்த சில மாதங்களில் உலக வங்கி வெளியிட இருக்கும் புதிய அறிக்கையில் ஒருவேளை இந்த சேதத்தின் மதிப்பு அதிகமானதாக இருக்கலாம்.
கடன் மதிப்பீட்டு நிறுவனமான க்ரிசில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 45 சதவீதம் வரை சரிவடையும் என்றும், ஒட்டுமொத்த நிதியாண்டில் இந்த சரிவு விகிதம் 5% ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்திய அரசு இன்று வெளியிட உள்ள ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவுகள் வைரஸ் காரணமாக உண்டான பாதிப்பின் முதல் அலுவல்பூர்வ.
சாமானியர்கள் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படும்?
ஜிடிபி வளர்ச்சி விகிதம் பெருமளவில் சரிவடைந்து, சாமானியர்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும், இந்திய அரசு இலக்கு வைத்துள்ள ஐந்து ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா மாறுவதில் அது எவ்வாறு தாக்கம் செலுத்தும், இந்த மோசமான சூழலில் இருந்து வெளிவருவது எப்படிபோன்ற கேள்விகள் எழுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்தால் அது நேரடியாக சாமானிய மக்களை பாதிக்கிறது என்று கூற முடியாது. சாமானிய மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஜிடிபி தரவுகள் காட்டுகின்றன என்று கூறுவதே சரி.
பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படுவது வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்க வைக்கும்.
தங்கள் வருவாய் குறையப் போகிறது என்று அறியும் மக்கள் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகப்படுத்துவார்கள். அரசாங்கங்களும் நிறுவனங்களும் கூட இதையே பின்பற்றுவார்கள்.
வேலை இழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாது.
சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி-இன் தரவுகளின்படி ஜூலை மாதம் மட்டும் இந்தியா முழுவதும் மாதச் சம்பளம் பெற்று வந்த சுமார் 50 லட்சம் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
இது ஒரு விஷச் சுழலை உண்டாக்குகிறது. வேலை வாய்ப்பை இழந்த மக்கள் வருமானம் இல்லாததால் செலவுகளை பெருமளவில் குறைப்பார்கள்.
இதன் காரணமாக தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கும்.
அவர்களின் விற்பனை பொருட்களுக்கான தட்டுப்பாடு குறையும். இதன் காரணமாக தொழில்துறை உற்பத்தியும் குறையும்.
வங்கியில் தங்கள் பணத்தை சேமிக்கும் மக்கள் அதற்காக குறைந்தளவிலான வட்டியே பெறுவார்கள்.
இன்னொரு பக்கம் வங்கிக் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறையும். தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் கடன்களைக் கூடத் திருப்பிச் செலுத்த மக்கள் தொடங்குவார்கள்.
வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவது என்பது நல்லது போல தோன்றலாம்.
ஆனால் இவை அனைத்தும் அச்சத்தின் காரணமாக நிகழ்பவை. தங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்காது என்பதை அறிந்த மக்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
இதன் காரணமாகத்தான் புதிதாக கடன் வாங்குவதும் குறைகிறது. ஏனென்றால் வரும் காலங்களில் கடனை திருப்பி செலுத்துவதற்கு தங்களிடம் போதிய வருமானம் இருக்குமா என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
இதே மாதிரியான போக்கு நிறுவனங்களிடையே நிகழ்வதையும் பார்க்கலாம். சமீப காலங்களில் கடன் வாங்கிய அல்லது தங்கள் கடனை திரும்ப செலுத்துவதற்காக தங்கள் பங்குகளை விற்ற நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ரிலையன்ஸ் நிறுவனம். தங்கள் நிறுவனம் கடனற்ற நிறுவனமாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் தங்களுக்கு இருந்த சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் கடனை பங்கு விற்பனை மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் திரும்பச் செலுத்தியுள்ளது.
ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம்
5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா மாறுவதை இது பாதிக்குமா? தற்போது இந்த கேள்வியைக் கேட்பது முட்டாள்தனமாகத் தோன்றலாம்.
ஆனால் அப்படி நினைத்தால் மனிதர்களால் எந்த பிரச்சனையிலிருந்தும்மீண்டு வர முடியாது.
நெருக்கடியான சூழ்நிலைகளில் வாய்ப்புகளை கண்டறிவது குறித்து பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். இத்தகைய வாய்ப்புகள் இதற்கு முன்னரும் இருந்தன.
சீனாவுக்கு செல்லும் முதலீடுகளை இந்தியா பெறுவது குறித்த பேச்சுகள் எழுவது இது முதல்முறை அல்ல.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவை நோக்கி வர வைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? அப்படி எடுத்தால் அந்த நிறுவனங்கள் இந்தியாவின் நடவடிக்கை தங்களுக்கு பலனளிக்கும் என்று நம்புமா?
ஒருவேளை வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கினால் அதன் காரணமாக பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அதன் மூலம் தற்போது உண்டாகி உள்ள பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியும்.
ஆனால் இது பெரிய கனவுகள் காண்பதற்கான நேரம் போலத் தெரியவில்லை.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் எனும் நோக்கில் இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமானது.
தற்போது நிலையை சமாளிக்க வல்லுநர்கள் பல ஆலோசனைகளைக் கூறி வருகிறார்கள். ஆனால் யார் முன்வைக்கும் தீர்வை செயல்படுத்துவது, எந்த ஆலோசனை செயல்திறன் மிக்கதாக இருக்கும் என்பதை கண்டறிவது மிகவும் சவாலான காரியம்.
பொருளாதாரத்தை மீள் கட்டமைக்க இன்னொரு நிதி உதவித் தொகுப்பை அறிவிப்பதற்கான சமிக்கைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதற்கு தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் முடிவடைய வேண்டும்.
இல்லாவிட்டால் அப்படி அளிக்கப்படும் உதவி தொகுப்பும் பயனற்றதாக போய்விடும் என்று இந்திய அரசு காத்திருக்கிறது.
இப்போது இருக்கும் பல கேள்விகளுக்கான பதில்கள் ஒன்றே ஒன்றுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. அது கொரோனா வைரஸ்.
பிற செய்திகள்:
- கொரோனா கால கடன், இ.எம்.ஐ - எப்போது கட்டுவது நல்லது?: பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் நேர்காணல்
- மோதியின் 'மன் கி பாத்' உரை: லட்சக் கணக்கில் டிஸ்லைக் செய்யும் நெட்டிசன்கள்
- தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள் - 20 முக்கிய தகவல்கள்
- சிறையில் சம்பாதித்த பணத்தில் மகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிய தந்தை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












