நரேந்திர மோதியின் 'மன் கி பாத்' உரையை யூடியூபில் டிஸ்லைக் செய்யும் நெட்டிசன்கள்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மன் கி பாத் உரையை யூடியூபில் ஏராளமான பயனர்கள் டிஸ்லைக் செய்து வருகின்றனர்.

#StudentsDislikePMModi என்ற ஹேஷ்டேகும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோதி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் மோதி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்.

மோதி

பட மூலாதாரம், Bharatiya Janata Party/ Youtube

தலையாட்டி பொம்மைகள்,ராஜபாளையம் நாய்கள்

இந்த நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் 68வது நிகழ்வில் நேற்று மோதி உரை நிகழ்த்தினார்.

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் மோதி தனது உரையில் பேசினார்.

அதேபோல் ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

"நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்," என்று தனது உரையில் குறிப்பிட்டார்

டிஸ்லைக் செய்த நெட்டிசன்ஸ்

மோதி

பட மூலாதாரம், Bharatiya Janata Party/ Youtube

நரேந்திர மோதியின் உரையை பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தது.

அந்தப் பக்கத்தை சுமார் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

ஏறத்தாழ 10 லட்சம் பேரால் அந்த காணொளி பார்க்கப்பட்டிருக்கிறது.

31 நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியை திங்கள்கிழமை காலை வரை 28,000 பேர் லைக் செய்துள்ளனர், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.

ஏறத்தாழ 52 ஆயிரம் கமெண்டுகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் ட்விட்டரிலும் மோதிக்கு எதிரான ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ஏன் டிஸ்லைக்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Bharatiya Janata Party/ Youtube

கமெண்டுகளை பார்க்கும் போது பலர் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெரிகிறது.

கொரோனா சமயத்தில் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்பது பரவலான கோரிக்கையாக இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, எதிர்க்கட்சிகள் ஆளும் ஆறு மாநிலங்களின் அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுவை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

 மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

 இதனைத் கடந்து கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்களும் மோதியின் உரையை நெட்டிசன்கள் டிஸ்லைக் செய்வதற்கு காரணமாக இருப்பது கமெண்டுகளை பார்க்கும் போது தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: