அமெரிக்கா: டாலரின் அதிகாரம் வீழ்கிறதா? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க நாணய மதிப்பான டாலர், "உலகளாவிய நாணயம்" என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. டாலர் மற்றும் யூரோ - சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுபவை. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் வைத்திருக்கும் அன்னிய செலாவணி இருப்பில் 64 சதவிகிதம், அமெரிக்க டாலர்களாகும்.
அத்தகைய சூழ்நிலையில், டாலரே உலகளாவிய நாணயமாக உள்ளது. இது, அதன் வலிமை மற்றும் அமெரிக்க பொருளாதார பலத்தின் அடையாளமாகும்.
சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (இண்டர்நேஷ்னல் ஸ்டாண்டர்ட் ஆர்கனைஸேஷன்) பட்டியலின்படி, உலகளவில் 185 நாணயங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நாணயங்களில் பெரும்பாலானவை, தனது நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் ஒரு நாணயம் எத்தனை பிரபலமாக உள்ளது என்பது, அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் வலுவை பொறுத்தது.
உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த நாணயம் யூரோ. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளின் அந்நிய செலாவணி இருப்புக்களில் 19.9 சதவீதம் யூரோ ஆகும்.
டாலரின் வலிமை மற்றும் அங்கீகாரம், அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமையை பிரதிபலிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. மொத்த டாலரின் 65 சதவீதம் , அமெரிக்காவிற்கு வெளியே பயன்படுத்தப்படுகிறது.
உலகளவில் 85 சதவிகித வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் உள்ளது. உலகில் 39 சதவிகித கடன்கள், டாலர்களில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, வெளிநாட்டு வங்கிகளுக்கு, சர்வதேச வர்த்தகத்திற்கு டாலர்கள் தேவை.
டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ரஷ்யாவும் சீனாவும் ஒன்றிணைந்து வருகின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு 'நிதி கூட்டணிக்கு' வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
டாலர் உலகளாவிய நாணயமாக இருப்பது ஏன்?
1944 ஆம் ஆண்டு, பிரெட்டன் உட்ஸ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டாலரின் நடப்பு வலுவடைதல் ஆரம்பமானது. அதற்கு முன், பெரும்பாலான நாடுகள் தங்கத்தை மட்டுமே ,சிறந்ததாகக் கருதின. அந்த நாடுகளின் அரசுகள் தங்கத்தின் தேவையின் மதிப்பின் அடிப்படையில், தங்கள் நாணயத்தை முடிவு செய்வதாக உறுதியளித்தன.

பட மூலாதாரம், Getty Images
நியூ ஹாம்ஷயரின், பிரெட்டன் உட்ஸில் உலகின் வளர்ந்த நாடுகள் கூடி, அமெரிக்க டாலருக்கு எதிரான அனைத்து நாணயங்களின் பரிமாற்ற வீதத்தை நிர்ணயித்தன. அந்த நேரத்தில், உலகின் மிக அதிக தங்க இருப்பு , அமெரிக்காவிடம் இருந்தது. தங்கத்திற்கு பதிலாக, டாலரின் மதிப்பிற்கு ஏற்ப தங்கள் நாணயத்தை முடிவு செய்ய, இந்த ஒப்பந்தம் மற்ற நாடுகளுக்கு அனுமதி அளித்தது.
1970 களின் முற்பகுதியில், பல நாடுகள் டாலருக்கு பதில் தங்கம் கோரத் தொடங்கின, ஏனெனில் ,பணவீக்கத்தை எதிர்த்துப் போராட இது தேவைப்பட்டது. அந்த நேரத்தில், அமெரிக்காவின் ஃபோர்ட் நாக்ஸ் (தங்க காப்பகம்), தனது இருப்புக்களை கலைக்க அனுமதிப்பதற்கு பதிலாக, டாலரை தங்கத்திலிருந்து பிரித்தார், அதிபர் நிக்சன்.
அதற்குள், டாலர் உலகின் மிகவும் பாதுகாப்பான நாணயமாக மாறியது.
சீனா மற்றும் ரஷ்யாவின் திட்டம்
ரஷ்யாவின் மத்திய வங்கி மற்றும் பெஃடரல் கஸ்டம் சர்வீஸ் மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் , ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் டாலரின் பங்கு , முதல் முறையாக 50 சதவீதத்திற்கும் கீழே சென்றுள்ளது என்று ஏஷியா நிக்கி ரெவ்யூவின் அறிக்கை தெரிவிக்கிறது.
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 46 சதவிகித வர்த்தகத்தில், டாலர் பயன்படுத்தப்பட்டது.. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் யூரோவின் பங்கு படிப்படியாக அதிகரித்து இப்போதுவரை 30 சதவீதத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் சொந்த நாணயங்களை பயன்படுத்தி 24 சதவிகித வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, இதுவரை இல்லாத மிக அதிக அளவாகும்.
கடந்த சில ஆண்டுகளாக, ரஷ்யாவும் சீனாவும் இருதரப்பு வர்த்தகத்தில் டாலர்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளன. 2015 ஆம் ஆண்டுவரை இரு நாடுகளுக்கும் இடையிலான 90 சதவிகித வர்த்தகத்தில், டாலர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போருக்குப் பின்னர், குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவின் டாலர்கள் மூலமான வர்த்தகத்தைக் குறைக்கும் சிந்தனைக் கொள்கையின் கீழ், 2019 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் 51 சதவீதம் மட்டுமே , டாலர்களில் இருந்தது.
ரஷ்ய அறிவியல் அகாடமியின் ஃபார் ஈஸ்ட்டரன் ஸ்டடீஸ் நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸே மஸ்லோவ், நிக்கி ஏசியன் ரிவியூவிடம் பேசுகையில்,டாலர்கள் மூலமான வர்த்தகத்தை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவரும் ரஷ்யா மற்றும் சீனாவின் திட்டம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை, ஒரு கூட்டணியாக மாற்றக்கூடிய சூழலை உருவாக்கும் என்று தெரிவித்தார்.
நிதித்துறையில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பானது , இரு நாடுகளும் இடையே ஒரு புதிய கூட்டணிக்கான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுவதை காட்டுகிறது என்று அலெக்ஸே மஸ்லோவ் குறிப்பிட்டார்.
"இது ஒரு ராணுவக் கூட்டணி அல்லது வணிக கூட்டணியாக இருக்கும் என்று பலர் நம்பினர், ஆனால், இப்போது அது வங்கி மற்றும் நிதி கூட்டணியின் திசையில் செல்கிறது. மேலும் இது இரு நாடுகளும் தங்கள் முடிவுகளை எடுப்பதன் சுதந்திரத்தையும் உறுதி செய்யும்", என்று அவர் கூறினார்.'
ரஷ்யா மற்றும் சீனாவைப் பொருத்தவரை, 2014 முதல் டாலர்களின் பயன்பாட்டைக் குறைப்பதே முன்னுரிமையாக உள்ளது. கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த பின்னர், மேற்கத்திய நாடுகளுடனான அதன் உறவு மோசமடைந்தது, அதன் பின்னர் ரஷ்யாவும் சீனாவும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கத் தொடங்கின. ரஷ்யா மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்கு, வர்த்தகத்தில் டாலர்களின் பயன்பாட்டை நிறுத்துவது அவசியமாகும்.

பட மூலாதாரம், Getty Images
"உலகில் டாலர் மூலமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் எங்கு நடந்தாலும், ஏதோ ஒரு வழியில் ஒரு அமெரிக்க வங்கி அதை அங்கீகரிக்கிறது. அதாவது சில பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் வங்கிக்கு உத்தரவிடக்கூடும்," என்று ஐ.என்.ஜி வங்கியின் ரஷ்யாவின் தலைமை பொருளாதார நிபுணர் டிமிட்ரி டோல்கின் தெரிவித்தார்.
உலகின் வலுவான நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பை அளவிடும் அமெரிக்க டாலர் குறியீடு, மார்ச் மாதத்தில் ஒன்பது சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2011 க்கு பிறகு, ஒரு மோசமான நிலையை அடையும் விளிம்பில் உள்ளது. .
கொரோனா தொற்றுநோய் மற்ற பொருளாதாரங்களை விட அமெரிக்க பொருளாதாரத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுவதால் டாலர் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
உலகின் மத்திய வங்கிகளும் அரசுகளும், தொடர்ந்து பொருளாதார நிவாரண உதவிகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பில், டாலரின் தொடர்ச்சியான பரிவர்த்தனைகள், சந்தை ஏற்றம் பெற வழிவகுக்கக்கூடும். ஆனால் டாலர் மேலும் சரிந்தால், அது ஐரோப்பாவிற்கும் ஜப்பானுக்கும் மோசமான செய்தியாக இருக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், டாலரின் மதிப்பு அதிகரிப்பதாகக்காணப்பட்டது, ஆனால் டாலரின் மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மூன்று சதவிகிதம் குறைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், டாலர் 10 சதவீதத்தை இழந்தது. டாலரின் மதிப்பில் குறைவு, அமெரிக்க ஏற்றுமதிக்கு நன்மை அளிக்கிறது. இது அமெரிக்க பன்னாட்டு நிறுவனம், தன் லாபத்தை,உள்நாட்டு நாணயமான டாலர்களாக மாற்றிக்கொண்டுவர உதவும். சமீபத்திய சில வாரங்களில் சரிவு காணப்பட்ட அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்றம் கொண்டுவரும் ஒரு நல்ல செய்தியாக இது இருக்கும்.
எஸ் அண்ட் பி 500 இன்டெக்ஸ் (அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 500 நிறுவனங்களின் நிலையை குறிப்பிடும் அமெரிக்க பங்குச் சந்தை குறியீடு) 2.6% வருமானத்தை அளித்துள்ளது. டாலரின் மதிப்பில் கடுமையான வீழ்ச்சி ; தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் மிகச் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையே, இது நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் பன்னாட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டாலரின் 10 சதவீத வீழ்ச்சியானது , 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பங்கிலும் மூன்று சதவிகித அதிகரிப்பை அளிக்கும் என்று கோல்ட்மேன் கூறுகிறது. அடுத்த 12 மாதங்களில் டாலர் மதிப்பு மேலும் ஐந்து சதவீதம் குறையும் என்று கோல்ட்மேனின் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, டாலர் மதிப்பின் வீழ்ச்சியால் எந்த அரசியல் நன்மையும் இருக்காது என்று தோன்றுகிறது. ஆயினும், அதிக டாலர் மதிப்பு காரணமாக அமெரிக்க தயாரிப்பாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுவதாக , டிரம்ப் எப்போதும் கூறிவருகிறார்.
"டாலரின் மதிப்பு குறைவின் நன்மை தொழில்துறையை அடைய குறைந்தது ஒரு வருடம் ஆகும், ஆகவே இது, நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு பயனளிக்காது." என்று டாய்ச்செ வங்கியின் சர்வதேச திட்டமிடல் பிரிவின் தலைவர் , ஆலன் ரஸ்கின் கூறியுள்ளார்
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுங்கள்: தலைவர்கள், சூழலியல் அமைப்பு கோரிக்கை
- சிறப்புக் குழந்தைகள்: ஊரடங்கு காலத்தில் பெற்றோர் செய்வது என்ன?
- அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; பிரணாப் தொடர்ந்து கவலைக்கிடம்
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மையில் எத்தனை மருத்துவர்கள் பலியானார்கள்?
- மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - கமலா ஹாரிஸின் தமிழக நாட்கள்
- மகேந்திர சிங் தோனியின் இடத்தை யார் நிரப்புவார்? - நிபுணர்கள் கூறுவது என்ன?
- உத்தர பிரதேசம்: 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












