உத்தர பிரதேசம்: 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு, கரும்புத் தோட்டத்தில் கிடைத்த சடலம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சமீராத்மஜ் மிஸ்ரா,
- பதவி, பிபிசி இந்திக்காக
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கீரியில், 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் பின்னர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, சடலம் கரும்பு வயலில் வீசப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகளைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
லக்கிம்பூர் கீரி காவல் கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "இது ஈசா நகர் காவல் நிலையப் பகுதியின் பக்ரியா கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம். வெள்ளிக்கிழமை பிற்பகலில் மலம் கழிக்க வெளியே சென்ற சிறுமி திரும்பி வராத நிலையில், குடும்பத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்." என்று கூறினார்.
காவல்துறையினர், உறவினர்களுடன் தேடுதல் பணியைத் தொடங்கியபோது, சிறுமியின் சடலம் கரும்பு வயலில் கண்டெடுக்கப்பட்டது. குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்ரியா கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று எஸ்.பி. சத்யேந்திர குமார் தெரிவித்தார். சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்குப் பிறகு அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் கண்களில் காயம் இருப்பதாகவும் அவரது மேலாடை கழுத்தில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததாகவும், இரண்டு கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.
ஆனால் குடும்ப உறுப்பினர்களின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த காவல்துறையினர், பிரேத பரிசோதனை அறிக்கையில் காயங்கள் மற்றும் கீறல்கள் இருப்பது உண்மை தான் என்றும், ஆனால் 'கண்கள் அகற்றப்பட்டோ நாக்கு வெட்டப்பட்டோ இருக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது என்எஸ்ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி கூறுகிறார்.
இந்த விவகாரத்தில், உ.பி.யின் முன்னாள் முதல்வர் மாயாவதி மாநில அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், "உத்தரப்பிரதேசத்தின் லக்கீம்பூர் கீரி என்ற கிராமத்தில் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்கும் வெட்கத்துக்கும் உரிய சம்பவம். இது போன்ற சம்பவங்கள் தொடர்வதால், சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கும் தற்போதைய பாஜக ஆட்சிக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள், இது பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை. " என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், டெல்லி அருகே ஹாப்பூரில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
ஹாப்பூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் கூறுகையில், "தல்பத் என்ற ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்குச் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஒரு காவலரிடமிருந்து ஒரு துப்பாக்கியைப் பறித்துத் தப்ப முயன்ற போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் காவல்துறையினர். அதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












