கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் முதலில் யாருக்கு கிடைக்கும்? மத்திய அரசு பதில்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி: கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் முதலில் யாருக்கு கிடைக்கும்?
கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்துவதற்காக 3 தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த சோதனைகள் வெற்றி பெறுகிற நிலையில் அவற்றின் உற்பத்தி தொடங்கி, இந்தியாவில் பொதுமக்களுக்கு கிடைக்க தொடங்கும். அந்த நாளைத்தான் நாடு ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவின் இடையே மத்திய சுகாதார இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே செய்தியாளர்களிடம் பேசுகையில், "கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கொண்டு வருவதில் நமது விஞ்ஞானிகள் கடினமாக உழைத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான 3 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட சோதனையில் உள்ளன. நாம் அதில் வெற்றி பெற்று விட்டால், கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் போடப்படும்" என குறிப்பிட்டார்.
எனவே தடுப்பூசி வந்த உடன் முதலில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு முதலில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "அரசின் தலைவராக 18 ஆண்டுகள் பதவி வகிக்கும் மோதி"

பட மூலாதாரம், Getty Images
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் நரேந்திர மோதி பதவி வகித்து வருவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசின் தலைவராக பிரதமர் மோதி பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேராதவர்களில் அதிக காலம் பிரதமராக பதவியை வகித்தவர் அவரே.
அதே வேளையில், மத்தியில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்பாக குஜராத்தில் 12 ஆண்டுகள் முதல்வர் பதவியை மோதி வகித்தார். இதன் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு 18 ஆண்டுகள் 306 நாள்களாக அவர் தலைவராக இருந்து வருகிறார். நாட்டின் வேறெந்த பிரதமரும் இவ்வளவு நீண்ட காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக இருந்ததில்லை.
நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக 16 ஆண்டுகள் 286 நாள்கள் இருந்தார். அவரின் மகளும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி 15 ஆண்டுகள் 350 நாள்களுக்கு அரசின் தலைவராக இருந்துள்ளார். ஆனால், இருவரும் மாநில முதல்வராக பதவி வகித்ததில்லை" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "தந்தை இறந்ததை வெளிக்காட்டாமல் அணிவகுப்பில் பங்கேற்ற பெண் காவலர்"

பட மூலாதாரம், Getty Images
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி அணிவகுப்பில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"காவல்துறை அணிவகுப்புக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை வகித்து, கம்பீரமாக வழிநடத்தினார். ஆனால், அந்நேரத்தில் அவரது மனம் பெரும்சோகத்தில் மூழ்கியிருந்தது. அதை அவர் துளியும் வெளிக்காட்டவில்லை.
அவரது 83 வயது தந்தை நாராயணசுவாமி முதல் நாள் இரவு (14-ம் தேதி) உடல் நலக்குறைவால் இறந்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு செல்ல வேண்டும். ஆனால், சுதந்திர தினவிழாவில் காவல்துறை அணிவகுப்பை வழி நடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஒருவார காலம் பயிற்சி எடுத்திருந்த நிலையில், திடீரென வேறு நபரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முடியாத சூழ்நிலை.
எனவே, மிகப்பெரிய சோகத்தை தன்னுள் மறைத்துக்கொண்டு, காவல்துறை அணிவகுப்பை சிறப்பாக வழிநடத்தினார். விழா நிறைவடைந்த பின்னர், தந்தையை நினைத்து அவரது கண்கள் கலங்கின. அதைப்பார்த்த மற்றவர்களும் விவரமறிந்து கண்கலங்கினர். தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த மகேஸ்வரி திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார். விழாவில் பங்கேற்ற அனைத்து அலுவலர்களும் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பிவைத்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












