மகேந்திர சிங் தோனி ஓய்வுக்கு பிறகு இந்திய அணிக்கு என்ன பாதிப்பு - நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
1990களின் பிற்பகுதி மற்றும் 2000-2010 தசாப்தத்தின் தொடக்கத்தில் உலகின் பல நாடுகளிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டிங்கால் அணியின் வெற்றியை பல போட்டிகளில் உறுதி செய்தனர்.
ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், ஆண்டி ஃபிளவர், குமார் சங்ககாரா, மொயீன் கான் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் தங்களின் அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.
அந்த காலகட்டத்தில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களான நயன் மோங்கியா, தீப் தாஸ் குப்தா, சபா கரீம் மற்றும் பார்த்தீவ் பட்டேல் போன்றோர் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், அவர்களால் தனி நபராக தங்கள் பேட்டிங்கால் அணிக்கு வெற்றி தேடி தர முடியாது என்று விமர்சிக்கப்பட்டது.
சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களால் தங்கள் கீப்பிங்கால் எதிரணி ரன்கள் எடுப்பதை குறைக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஒரு முன்னணி பேட்ஸ்மேன் போல விளையாடி அதிரடியாக ரன்கள் குவிக்கமுடியும். டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த சில விக்கெட்கீப்பர்கள் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர்.
இந்தியாவின் விக்கெட்கீப்பர் தேடல்
ஆனால் அவ்வாறான சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேடலில் தொடர்ந்து இந்திய அணிக்கு தோல்வியே கிடைத்தது. இந்திய அணியின் கீப்பர் பேட்ஸ்மேன்களால் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டையும் தொடர்ந்து சிறப்பாக செய்யமுடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் விக்கெட் கீப்பர் தேடலின் ஒரு பகுதியாக 2004-ஆம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் மகேந்திர சிங் தோனி என்ற இளம் வீரர் களமிறங்கினார்.
ரஞ்சி கோப்பை மற்றும் கிழக்கு மண்டலம் அணிக்காக தோனி விளையாடிய போட்டிகளில் அவர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்கள் குவித்தது அவர் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.
விசாகப்பட்டினத்தில் தொடங்கிய சாதனை பயணம்
ஆனால், தோனிக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது. முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் தோனி ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த இரு போட்டிகளிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் கீப்பிங்கும் விமர்சனத்துக்குள்ளானது.
அதற்கு அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரில் மீண்டும் அவர் இடம்பிடித்தார். முதல் போட்டியில் 3 ரன்களில் தோனி ஆட்டமிழக்க ரசிகர்களின் நம்பிக்கை குறைய தொடங்கியது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டி எல்லாவற்றையும் மாற்றியது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் சச்சின் டெண்டுல்கர் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்க வேண்டிய ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக தோனியை பேட்டிங் செய்ய அனுப்பினார் கேப்டன் சவுரவ் கங்குலி.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம் தோனியின் பேட்டிங் இருந்தது. மிக அற்புதமாக விளையாடிய அவர் 123 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உதவியுடன் 148 ரன்கள் எடுத்தார்.
இது அவரது முதல் சர்வதேச சதம். அடுத்த 16 ஆண்டுகளில் 16 சர்வதேச சதங்களை தோனி குவித்தார். டெஸ்ட்,, ஒருநாள் மற்றும் டி20 என தான் விளையாடிய அனைத்து சர்வதேச போட்டி வடிவங்களிலும் 108 அரை சதங்களை தோனி பதிவு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
பல ஆண்டுகளாக எதிரணி வீரர்களுக்கு தோனியின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகியவை சிம்ம சொப்பனமாக இருந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஒய்வு பெற்றுவிட்டதாக தோனி அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இந்நிலையில் தோனியின் ஒய்வு அறிவிப்பு இந்திய அணியில் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளரான விஜய் லோக்பாலி பிபிசி தமிழிடம் பேசினார்.
''தோனியின் ஒய்வு அறிவிப்பு எனக்கு வியப்பு அளிக்கவில்லை. கொரோனா பாதிப்பு மற்றும் முடக்கநிலைக்கு பிறகு, இனி அடுத்து எப்போது சர்வதேச போட்டியில் இந்தியா விளையாடும் என்று தெரியாத நிலையில் இந்த முடிவை தோனி எடுத்துள்ளார்'' என்று கூறினார்.
''சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட் தரும் அழுத்தம் மற்றும் விமர்சனங்களில் இருந்து விடுதலை பெற அவர் முடிவு செய்துள்ளார். ஏன் அவர் ஒய்வு பெறுவதில் சிலர் அவசரம் காட்டினர் என்று எனக்கு புரியவில்லை'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
''அதேவேளையில் வரும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவுள்ளார். தோனி இல்லாமல் சிஎஸ்கே அணியே இல்லை எனலாம்''
''அவர் நல்ல விக்கெட்கீப்பர். ஆனால் அவரது பேட்டிங் மிக சிறப்பாக இருந்துவந்ததால் அவரது பேட்டிங் பற்றிய பேச்சு கூடுதலாக இருந்தது. சச்சின், சேவாக், டிராவிட் , லக்ஷ்மன் போன்றவர்கள் போல தோனியும் தனக்கென தனியான பேட்டிங் பாணி கொண்டவர். அவர்களை போல தோனியும் பல் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்'' என்று கூறினார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றதற்கு தோனியின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் ஆகியவை கடந்த காலங்களில் விமரசிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, ''அவர் சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவு ரன்கள் குவிக்க முடியவில்லை என்பது உண்மை தான். ஆனால் ஓர் அணி தோல்வியுற்றால் அதற்கு கேப்டன் மட்டுமே காரணம் என்று கூற இயலாது.அனைத்து வீரர்களும் இதற்கு பொறுப்பு'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.
'தோனி ஒருவர் மட்டுமே'
தோனி ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், இது இந்திய அணியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், ''தோனி மிக சிறந்த வீரர். ஆனால், அதேவேளையில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் என முன்னணி வீரர்கள் ஓய்வுபெறும் போதெல்லாம் இனி யார் அவர் இடத்தை நிரப்ப முடியும்? இனி இந்திய அணியால் தாக்கு பிடிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன'' என்று நினைவுகூர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
''ஆனால் அவர்கள் இல்லாமல் தொடர்ந்து அணி விளையாடிக் கொண்டிக்கிறது வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் இப்போதும் போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். இனி வேறொரு வீரர் அவர் இடத்தில் விளையாடுவார்''
''அதேவேளையில் எப்படி இதுவரை ஒரு கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் சச்சின் மட்டுமே உள்ளனரோ, அதேபோல் தோனியும் ஒருவர் மட்டுமே. தனது மிக சிறந்த 16 ஆண்டுகளை இந்திய அணிக்காக தந்துள்ளதற்காக அவரை பாராட்டலாம்'' என்று கூறினார்.
தோனியின் ஒய்வு அறிவிப்பு மற்றும் அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும் என்பது குறித்து கிரிக்கெட் வீரர் மற்றும் விமர்சகர் ரகுராமன் பிபிசி தமிழிடம் பேசினார்.
''தோனியின் ஒய்வு அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றே. கோவிட்-19 தொற்றால் களத்தில் சில போட்டிகளில் விளையாடி ஓய்வுபெறும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால், தோனியின் சாதனைகள் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று'' என்றார்.
''தோனியின் இடத்தை நிரப்புவது என்பது அவருக்கு பதிலாக அணியில் விளையாடுவது அல்ல. அவரது பங்களிப்பை, தாக்கத்தை ஏற்படுத்துவது. அதற்கு நிச்சயம் அதிக காலம் தேவைப்படும்'' என்று குறிப்பிட்டார்.
''அடுத்த ஓராண்டில் ரிஷப் பந்த் எப்படி விளையாட போகிறார் என்பதை பொறுத்தே அவரது கிரிக்கெட் வாழ்க்கை அமையும். சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோனியின் சாதனைகளை சமன் செய்வது ஒரு நாளில் நடந்துவிடும் விஷயம் அல்ல. அதற்கு நிச்சயம் காலம் ஆகும்'' என்று மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தோனியின் இடத்தில் இவர்களில் யார்?
தற்போதைய நிலையில் சாஹா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரே கடந்த சில இரண்டு ஆண்டுகளில் ஏதாவது சர்வதேச போட்டி ஒன்றில் இந்திய அணியில் இடம்பெற்றவர்கள்.
சிறந்த விக்கெட்கீப்பர் என்று கூறப்படும் சாஹாவுக்கு 35 வயதாகிறது. அவரால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் தொடர்ந்து இடம்பெறமுடியுமா என விவாதிக்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு இதுவரை போதுமான அளவு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. வரும் மாதங்களில் அவர் எப்படி தயார் ஆகிறார் என்பதை பொறுத்தே அவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் அமையும்.
35 வயதாகும் தினேஷ் கார்த்திக், தோனி இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பே விளையாடியுள்ளார். நிஹாதாஸ் கோப்பை இறுதி போட்டி போன்ற சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவரால் தொடர்ச்சியாக சிறப்பான விக்கெட்கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்யமுடியவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
தோனிக்கு மாற்றாக அமையக்கூடும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்த போதிலும், ஒருநாள் போட்டிகளில் விரைவாக அவர் ஆட்டமிழந்துவிடுகிறார் என்று அண்மையில் விமர்சிக்கப்பட்டு உள்ளது
16 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக பங்களித்த தோனியின் இடத்தை இந்திய அணியில் நிரப்புவதும், அவரது அனுபவத்தை ஈடு செய்வதும் எளிதாக இருக்காது என்றும், சர்வதேச போட்டிகள் தொடங்கிய பிறகே இது குறித்து ஆராய முடியும் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












