'3 இடத்துக்கா இவ்வளவு மோதல்?' - திமுக - காங்கிரஸ் கசப்பு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?

திமுக, காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, தேர்தல்

பட மூலாதாரம், @mkstalin/X

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தி.மு.க - காங்கிரஸ் இடையே நீடித்து வந்த அதிகாரப் பகிர்வு சர்ச்சை, கூட்டணி உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் தி.மு.க ஒதுக்கியுள்ளது.

தி.மு.க காங்கிரஸ் இடையே ஏற்பட்ட 'அதிகார பகிர்வு' மோதலால் சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பு ஏற்படுமா?

தி.மு.க - காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு கையெழுத்தான பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, "தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்" என கூறினார்.

அருகில் இருந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், 'அதிகார பகிர்வு' நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். "அதைப் பற்றி பிறகு பேசுவோம்" என செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.

அதேநேரம், "இந்த எண்ணிக்கையில் பெரிதாக மகிழ்ச்சி இல்லை" என ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.

திமுக, காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, தேர்தல்

பட மூலாதாரம், Selvaperunthagai/Facebook

படக்குறிப்பு, தி.மு.க - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே பிப்ரவரி 4 ஆம் தேதியன்று கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

"எங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன. பெரிய கூட்டணி என வரும்போது எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய முடியாது. 28 என்ற எண்ணிக்கையில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால், தியாகம் செய்துதான் ஆக வேண்டும்" எனவும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு சர்ச்சை

திமுக, காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, தேர்தல்

பட மூலாதாரம், ManickamTagore/Facebook

படக்குறிப்பு, விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

தி.மு.க - காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டாலும், கடந்த சில மாதங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே பல்வேறு உரசல்கள் ஏற்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி ஒன்று பேசுபொருளாக மாறியது. செய்தி முகமை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்துப் பேசியிருந்தார்.

"தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக எங்கள் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாக்குறுதிகளை வழங்குவார்கள். அதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டியது அவசியம்" என அவர் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கடந்த ஜனவரி மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், 'கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. இப்போது அதிகாரம் மட்டுமல்லாமல் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' எனக் கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, தனது எக்ஸ் பக்கத்தில் இதனை வலியுறுத்தியிருந்தார்.

அவர் தனது பதிவில், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டில் காங்கிரஸின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இது தனித்துவமான விஷயம் அல்ல. ஜார்கண்ட், பிகார், கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே உள்ளது' எனத் தெரிவித்தார்.

'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக, காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்தநிலையில், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். கூட்டணியில் முறிவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் இதனைப் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பாக தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காதது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்தார்.

அதன்பிறகு தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்த பிறகு காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர், தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

'2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களை தி.மு.க ஒதுக்கியது. இந்த எண்ணிக்கையைவிட கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும்' காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.கவிடம் வலியுறுத்தி வந்தனர்.

'ஆனால், கடந்த தேர்தலைப் போலவே 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்குவதற்கு வாய்ப்பில்லை' எனத் தி.மு.க தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களை தி.மு.க ஒதுக்கியுள்ளது.

'தவெக உடன் பேச்சு...தி.மு.கவுக்கு சந்தேகம்'

திமுக, காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, தேர்தல்

பட மூலாதாரம், TVK

"த.வெ.க உடன் ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக தி.மு.க தலைமைக்கு சந்தேகம் ஏற்படுத்தப்பட்டு வந்தது. இது கூட்டணியின் நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது" எனக் கூறுகிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணா.

"இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி உடன்பாட்டின் மூலம் த.வெ.க ஆதரவு சக்திகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தலையிட்டு தேசிய நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலன்சார்ந்து கூட்டணியை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களை ஒதுக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதோ கூறிவிட்டதாகக் கூறும் ஆ.கோபண்ணா, "கூடுதலாக மூன்று இடங்களைப் பெறுவதற்கு இவ்வளவு மோதலா? தேவையற்ற மனவருத்தங்களை தவிர்த்திருக்க வேண்டும். இப்படியொரு சூழல் உருவானது துரதிஷ்டவசமானது" என்கிறார்.

'கசப்பு வளர்க்கப்பட்டுவிட்டது. ஆனால்?'

"வரும் நாட்களில் கூட்டணியை எவ்வாறு எடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பது முக்கியம். தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளதால் பிரச்னையை சரி செய்துவிட முடியும் என இரு கட்சிகளும் நம்புகின்றன" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

கடந்த கால தேர்தல்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது விடுதலைச் சிறுத்தைகள் உள்பட சில கட்சிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், "கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போது ஏற்படுகின்ற மனவருத்தம் காலப்போக்கில் மாறிவிடும்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "இந்தக் கசப்பு தேர்தல் பரப்புரையில் பிரதிபலிக்கும் என்று நான் கருதவில்லை" என்கிறார் அவர்.

"மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் எனக் கருதும் காங்கிரஸ் கட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் முக்கியமானதாக உள்ளது. இதில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டால்தான் 2029 தேர்தலில் சுமூகமான சூழல் ஏற்படும்" என்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே சுமூக சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை கட்சித் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணா.

"இரு கட்சிகளுக்கும் இடையே கசப்பு வளர்க்கப்பட்டுவிட்டது. சிலரின் அணுகுமுறையால் கூட்டணியில் கடும் வருத்தங்களை ஏற்படுத்திவிட்டது. அந்த வருத்தத்தைப் போக்க வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

திமுக, காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, தேர்தல்

பட மூலாதாரம், Selvaperunthagai/Facebook

'வாக்குகளை பெறவிட்டால் காங்கிரஸுக்கு சிக்கல்'

2011 சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தலைமை ஒதுக்கியது. அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.

2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களே ஒதுக்கப்பட்டன. இவற்றில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதுவே 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது.

தற்போது 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரித்துள்ளதா என்றால் அது கேள்விக்குறிதான்'' என தெரிவித்தார்.

"கடந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்தமுறை இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"தேர்தலில் பெரியளவுக்கு காங்கிரஸ் வேலை செய்யவில்லை என்றால் தங்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு வாக்கு உள்ளதாகக் கூறுவது பொய்த்துப் போய்விடும்" எனவும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கூடுதலாக 3 இடங்களை ஒதுக்கியது ஏன்?

தி.மு.க - காங்கிரஸ் இடையே கூட்டணி உறவு தொடர்ந்து நீடித்து வருவதாகக் கூறும் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "அதில் முறிவு வரக் கூடாது என்பதால் மூன்று இடங்களைக் கூடுதலாக கொடுத்துள்ளனர்" என்கிறார்.

"இரு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் இடையே மனவருத்தம் எதிரொலிக்கவே செய்யும். இருவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்ற புரிதல் வரவேண்டும்" என்கிறார் அவர்.

"சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவினர் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் பாடுபடுகிறார்களோ அதைவிட அதிகமாக காங்கிரஸ் கட்சியினர் உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணா.

பா.ஜ.க எதிர்ப்புதான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய விஷயமாக உள்ளதாகக் கூறும் ஆ.கோபண்ணா, "தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பலவீனம் அடைந்தால் அதனால் பலன் அடையப்போவது அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிதான். இதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்து வைத்துள்ளனர்" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு