'வீரப்பன் வழிபாடு' நடக்கக்கூடாது என எதிர்பார்க்கிறேன் - விஜயகுமார் பிபிசியிடம் பகிர்வு

"வீரப்பன் - சேசிங் தி ப்ரிகாண்ட்" என்ற பெயரில் அவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட அந்தப் புத்தகத்தில் இடம்பெறாத பல விஷயங்கள் குறித்தும் தேடுதல் வேட்டையின்போது தமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் குறித்தும், என்கவுன்ட்டர் இரவில் நடந்தது என்ன என்பது உட்பட பல விஷயங்களைப் பற்றி பிபிசியிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.

Getty images

பட மூலாதாரம், Getty Images

வீரப்பனுக்குப் பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் பற்றிய கதைகள் பயன் தராது என்பதால் அந்த அரசியல் குட்டையை வீரப்பன் வேட்டை தொடர்பாகத் தாம் எழுதிய புத்தகத்தில் கிளற விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

"காவல்துறை மாயாஜால நிபுணரின் உத்தி போல சாதாரணமாக எதிரிகளை வீழ்த்தி விடும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பு.

காவல்துறையிடம் பல காலம் சிக்காமல் தண்ணீர் காட்டியதால்தான் வீரப்பன் என்பவர் மிகப் பெரிய நபர் என்பது போன்ற பிரமை மக்களிடையே நிலவி வந்தது. அதுமட்டுமின்றி, தாம் மறைந்து வாழ்ந்த பகுதிகளில் வசிக்கும் சிலருக்கு உதவி செய்து வந்ததால், அவருக்கு உள்ளூர்வாசிகளின் ஆதரவு இருந்தது.

Getty images

பட மூலாதாரம், Getty Images

1997 முதல் 1999-ஆம் ஆண்டுகளில் பார்த்தீர்களேயானால், தனது ஐந்து பவுன் சங்கிலியைக் கூட வீரப்பன் அடகு வைக்கும் நிலை இருந்தது. அந்த மோசமான நிலையில் வீரப்பன் சரண் அடைவதற்கான கொள்கையை செயல்படுத்த அரசு முன்வந்தபோதும், அதை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு அமையவில்லை," என்றார் அவர்.

வீரப்பனும் தமிழும்

"அத்தகைய சூழலில் "தமிழ்" என்ற பெயரை வைத்துக் கொண்ட ஒரு இயக்கம் இணையதளம் ஒன்றின் மூலம் மிகப் பிரபலமானது. அந்த இயக்கத்தில் தானும் பங்கேற்பதாகக் கூறி வீரப்பன் செயல்படத் தொடங்கினார்.

வீரப்பனால் எந்த அளவுக்கு தமிழ் மொழியைப் பேச முடியும் அல்லது தமிழ் மீது அவருக்கு மிகப் பெரிய தாக்கம் இருந்ததா என்பது பற்றிய தர்க்கங்களுக்குள் எல்லாம் இப்போது நான் செல்ல விரும்பவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஆனால், முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்கள் அதிகம் வசித்த பகுதியாக இருந்த கொள்ளேகால் தாலுகா, 1956-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கர்நாடகத்தின் ஆளுகையின் கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்த சிலருக்கு கர்நாடக வனம் மற்றும் காவல்துறையினர் நெருக்கடி கொடுத்தபோது அவர்கள் வீரப்பனிடம் வந்தனர். அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக வீரப்பன் பயன்படுத்தத் தொடங்கினார்.

தாமதம் ஏன்?

வீரப்பன் வேட்டைக்கு பிறகு நான் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர், தேசிய காவல் பயிற்சி மையத்தில் இயக்குநர், மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறேன்.

Getty images

பட மூலாதாரம், Getty Images

தொடர்ச்சியாக என்வசம் இருந்த ஆயிரக்கணக்கான செய்திகள், தகவல்களை ஆகியவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக வடிவமைக்கும் நேரம் எனக்கு கிடைக்கவில்லை.

எனது நண்பரும் பத்திரிகையாளருமான விகாஸ் சிங் அந்தப் பணியில் எனக்கு உதவியாக இருந்ததால் இருவரும் சேர்ந்து புத்தகத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.

எனது தாமதத்துக்கு இவைதான் காரணமே தவிர, திட்டமிட்டோ, ஏதோ நோக்கத்துடனோ புத்தகத்தை தாமதித்து வெளியிடவில்லை. அது ஒரு இயல்பான தாமதம்.

புத்தகம் குறிப்பிடாத விஷயங்கள்

"வீரப்பன் - சேசிங் தி பிரிகாண்ட்" என ஆங்கிலத்தில் வெளியான எனது புத்தகத்தில் பதிவு செய்யத் தவறிய முதலாவது விஷயம், "எக்ஸ்" என்ற நபர் யார் என்பதை குறிப்பிடாமல் விட்டது.

அந்த நபர் வீரப்பன் இருக்கும் பகுதியில் இருந்து ஒரு நூறு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதியில் வசித்தவர். அதற்கு மேல் நான் அவரைப் பற்றி விளக்குவது சரியான நெறியாகவோ நியாயமாகவோ இருக்காது.

ஏனென்றால் அந்த புரிந்துணர்வுடன்தான் எங்கள் தேடுதல் வேட்டையின் இறுதிக்கட்டம் நடந்தது.

இரண்டாவது விஷயம், அதிகம் பயன் இருக்காது என்பதால் வீரப்பன் தேடுதல் வேட்டை தொடர்பான அரசியல் குட்டையை நான் அதிகம் கிளற விரும்பவில்லை.

Getty images

பட மூலாதாரம், Getty Images

காரணம், தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளுக்கும் மிகவும் சவாலான வகையில் வீரப்பனின் செயல்பாடு இருந்தது.

திமுக, அதிமுகவுக்கு தலைகுனிவு

இரு கட்சிகளின் தலைமையிலான ஆட்சிகள் நடைபெற்றபோதும், அவற்றை தலைகுனிய வைத்த ஒரு நபராக வீரப்பன் விளங்கினார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் சிறைப்பிடித்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தவர்கள், அரசு தனது கடமையை சரிவர செய்யத் தவறி விட்டது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

அடுத்த கட்சி, ஆட்சிக்கு வந்தபோதும் அதே சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது.

எனவேதான் எனது புத்தகம் ஒரு பரபரப்பாகவும், த்ரில்லர் கதை போலவும் இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கவனமாக அதை எழுதினேன்.

வீரப்பனை இயக்கியது யார்?

மேட்டூர் எம்எல்ஏ, அந்தியூர் எம்எல்ஏ, மேலும் ஒரு எம்எல்ஏ என மூவருமே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும், நாகப்பா மற்றும் கெளடா ஆகிய அரசியல்வாதிகள் எதிரெதிர் களத்தில் தேர்தலில் நின்றபோது, கொள்ளேகால் மக்களிடம் கெளடாவை ஆதரிக்குமாறு வீரப்பனை கேட்டுக் கொண்டதாகவும் தேர்தல் முடிவில் கெளடா வெற்றி பெற்றதாலும் வீரப்பனுக்கு அதுவரை அளித்து வந்த ஆதரவை தொடர்வதற்கு நாகப்பா தவறினார்.

அதனால் நாகப்பா மீது வீரப்பன் மிகவும் வெறுப்படைந்ததாகவும் எங்களுக்கு பலவிதமான செய்திகள் வந்தன.

Getty images

பட மூலாதாரம், Getty Images

வீரப்பனை வளர்த்து விட்டதில் முக்கிய பங்கு, அவரால் தனது வழிகாட்டி என்று கருதப்பட்ட சேவி கவுண்டர். இதுபோல, பலரும் வீரப்பனால் பயன் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்.

சட்டத்தை உடைக்கும் எந்தவொரு குற்றவாளியும் பலருடைய ஆதரவில்தான் வாழ்ந்தாக வேண்டும். அந்த பாதையில் நான் கவனம் செலுத்தி ஆராய்ச்சியில் ஈடுபடக் கூடிய தன்மையும் தேவையும் எனக்கு எழவில்லை.

"அதிரடிப்படை தலைவர்" என்ற முறையில் எனக்கு வழங்கப்பட்ட பணி, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நோக்கம், நாங்கள் சந்தித்த தடைகள், அவற்றை எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது பற்றிதான் நான் கவனம் செலுத்தினேன்.

அதிரடிப்படையினர் சந்தித்த பல பிரச்னைகள் பொதுமக்களுக்குத் தெரியாது. அவர்கள் அட்டூழியம் செய்தார்கள் என்பது போன்ற தோற்றம் ஊடகத்தால் ஏற்படுத்தப்பட்டது.

அதற்கான நான் ஊடகத்தை குறை கூற விரும்பவில்லை. ஊடகத்தின் பூரண ஒத்துழைப்புடன்தான் எங்களால் வீரப்பனை வீழ்த்த முடிந்தது. ஆகவேதான் மற்ற விஷயங்களுக்குள் செல்லாமல் எனக்கு வழங்கப்பட்ட பணியை மட்டுமே செய்தேன்.

மனித உரிமை மீறல்களுக்கு பதில் என்ன?

மனித உரிமைக அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள், அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றின் ஊகங்களுக்கு முரணாக பேச நான் விரும்பவில்லை.

அவை அவற்றின் கடமையை செய்கின்றன. இல்லாவிட்டால் அரசு இயந்திரங்கள் கடிவாளம் இல்லாமல் செயல்படுவது போல ஆகி விடும். என்னை பொறுத்தவரை, அதிரடிப்படையினர் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் மனித உரிமைகள் ஆணையம், உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் என முறையாக விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் சட்டத்தை உடைத்தோமா, வளைத்தோமா போன்ற குட்டி பட்டிமன்றங்கள் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அது பற்றி நான் குறைகூற விரும்பவில்லை. நாங்கள் நடத்தியது ஒரு வெளிப்படையான நடவடிக்கை.

அது பற்றிய பலவிதமான விவாதங்கள் சம்பவம் நடைபெற்ற நாளுக்கு மறுதினமான 2004, அக்டோபர் 19-ஆம் தேதியே பெரிய அளவில் தொடங்கி விட்டது.

bbc

இவ்வளவு நாட்களாக மூன்று மாநில அரசுகளுக்கு தண்ணீர் காட்டிய ஒரு நபரை வீழ்த்தி விட்டோம் என்ற செய்தி வரும்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது எனக்கு பெரிய அளவில் வியப்பை அளிக்கவில்லை.

வீரப்பனை உயிருடனோ அல்லது தவிர்க்க முடியாத நிலையில் அவரை பிடிக்கவோ வேண்டும் என எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அரசின் கருவியாக செயல்பட்டு எங்களுக்கு இடப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தோம்.

வீரப்பன் வழிபாடு

அதுபோல் நடக்கக் கூடாது என எதிர்பார்க்கிறேன். அதுபோன்ற தீய சக்திகளோ அல்லது மொழி அல்லது நாடு அல்லது இயக்கத்தின் பெயரால் அரசியலில் குற்றவாளிகள் கலக்கும் நிலை வரவே கூடாது.

எனவே, தான் சட்டத்தின் கைகளில் பிடிபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்துடன் மாறன் போன்ற குழுவினருடன் வீரப்பன் ஒரு புரிந்துணர்வுடன் செயல்பட்டார்.

மாறன் குழுவினருக்கு பயிற்சிக்காக ஒரு களம் தேவைப்பட்டது. அப்போது வீரப்பனிடம் பணம் இல்லை. அதனால் தான் ஆதிக்கம் செலுத்தி காட்டுப் பகுதியில் ஒரு கொடுக்கல் வாங்கல் முறை என்ற ஏற்பாட்டில் மாறன் குழுவினருக்கு பயிற்சிக் களத்துக்கான வாய்ப்பை வீரப்பன் ஏற்படுத்திக் கொடுத்தார்.

அந்த நேரத்தில்தான் சே குவேரா படம் பொறித்த தொப்பியை அணிந்து கொண்டு தமிழ் கொடியை ஏற்றுவது போல வீரப்பன் காட்சி கொடுத்த படங்கள் வெளியாகின. வீரப்பன் நினைவிடத்தை சிலர் வழிபடுவது போலவே, மத்திய பிரதேசத்தில் உள்ள சாம்பலில் ஒரு கொள்ளைக்காரருக்கு கோயிலை எழுப்பியுள்ளதையும் நீங்கள் பார்க்கலாம்.

1940 முதல் 1970-ஆம் ஆண்டுகள்வரை ஆதிக்கம் செலுத்தி வந்த அந்த கும்பலின் தலைவருக்கு கோயில் எழுப்பியிருந்தனர். கொலம்பியாவில் கூட எஸ்கோபார் என்ற போதை கடத்தல் மன்னன் ஒருவர் இருந்தார்.

அவர் மறைந்த பிறகு அவருக்கு பெரிய வழிபாட்டுத் தலமே அமைத்தனர்.

எனவே, காவல்துறையையோ அரசையோ யார் எதிர்த்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பொதுவாகவே ஒரு சிலர் மத்தியில் ஆதரவு காணப்படுவது இயல்புதான்.

நம்மால் செய்ய முடியாததை இந்த நபர் செய்கிறாரே என்ற ஆர்வத்தில் அவரது செயல்பாட்டால் ஏமாறக் கூடிய சிலர் இருக்கவே செய்கின்றனர்.

அவர்கள் பற்றி எல்லாம் கருத்து கூற விரும்பவில்லை. அவர்கள் மீது எனக்கு பெரிய வியப்பு ஒன்றும் ஏற்படவில்லை.

என்கவுன்ட்டர் இரவில் நடந்தது என்ன?

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டபோது முதல்வரின் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் இருந்தார்.

சம்பவம் நடந்த போது கிட்டத்தட்ட இரவு 11.10 மணி ஆகியிருந்தது. எனது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. படையின் அதிகாரி கண்ணனின் செல்போன் நீங்கலாக மற்ற அனைவரது செல்போன்களும் அணைக்கப்பட்டிருந்தன.

அவரது செல்போனை எடுத்துக் கொண்டு அருகே இருந்த ஐந்து அறைகள் கொண்ட ஒரு பள்ளியின் படிக்கட்டில் ஏறி ஒரு அறைக்குச் சென்று அங்கிருந்தபடி முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முயன்றேன்.

bbc

முதல்வருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் என்று ஷீலா பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தேன்.

ஆனால், அவர் ஓய்வெடுக்கச் சென்று விட்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் கூறும் விஷயத்தை கேட்டால் அவர் எழுந்து மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று நான் கூறினேன்.

உடனடியாக முதல்வருடன் எனக்கு இணைப்பு வழங்கப்பட்டதும், எனது தகவலை சுருக்கமாக தெரிவித்தேன்.

அப்போது வீரப்பன் உள்ளிட்டோரின் உயிர் பிரிந்து விட்ட அதிகாரப்பூர்வ தகவல் கூட இல்லாத நிலையில், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் சக அதிகாரிகளும் வீரர்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

எனது தகவலை கேட்ட முதல்வர், நீங்கள் எல்லாம் நலமாக இருக்கிறீர்களா என்றும், முதல்வராக பணியாற்றும் காலத்தில் எனக்கு நிறைவைத் தந்த தகவல் இது என்று மட்டும் கூறினார்.

அன்றைய இரவு, என்கவுன்ட்டரில் சுடப்பட்டது நான்கு பேர் என்பதும் அவர்கள் அடிபட்டார்கள் என்பதும்தான் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்டது.

வீரப்பன் உள்ளிட்டோர் இறந்து விட்டார்கள் என்ற விவரம் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டபோது எனக்கும் உறுதியாகத் தெரியவில்லை. அதனால் நானும் அதுபற்றி அவரிடம் உடனடியாகக் கூறவில்லை.

எங்கள் இருவரிடையே மிகவும் சுருக்கமாகவே உரையாடல் நடைபெற்றது. பின்னர் நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்பட்டதும், தமிழக அதிரடிப்படையினர் மட்டுமின்றி கர்நாடக அதிரடிப்படையினருக்கும் சேர்த்து முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் கர்நாடக அதிரடிப்படையினர் இல்லாவிட்டாலும், நாங்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து அன்றைய தினம் வீரப்பனை பிடிக்க காத்திருந்தோம்.

நாங்கள் இரண்டு குழுக்களாகவும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் மூன்று குழுக்களாகவும் பிரிந்து அன்றைய இரவு காத்திருந்தனர்.

சம்பவ நாள் இரவில் என்ன நடந்தது என்பதை ஏற்கெனவே நான் விளக்கியிருந்தாலும், அதில் பல கேள்விகள் இயல்பாகவே பலருக்கும் எழுவது இயல்புதான்.

இவ்வளவு காலமாக, காவல்துறையினரை குறி வைத்து வீரப்பன் தாக்கியபோதும், அதன் விளைவாக நாங்கள் அடிபட்டபோதும் பொதுமக்கள் 124 பேரும் 44 வனத்துறையினரும் போலீசாரும் அவரால் கொல்லப்பட்ட போதும், வீரப்பனால் எவ்வாறு அப்படி செயல்பட முடிந்தது என்ற கேள்வி மக்கள் மனதில் நீடித்து வந்தது.

ஆனால், எங்களுக்கு கடைசி முறையாக வீரப்பனை பிடிக்க கிடைத்த அந்த வாய்ப்பு கனிந்தபோது அதை மிகவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டோம்.

அன்றைய தினம் (2012, அக்டோபர் 18) கை தூக்கி சரண் அடைய வீரப்பன் முனைந்திருந்தால் நிச்சயம் அவரை நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்திருப்போம் என்றுதான் நினைக்கிறேன்.

அரசியலுக்கு ஏன் வரவில்லை?

காவல் பணி மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, ஒரு வேட்கையோடு அந்தப் பணியில்தான் இருக்க வேண்டும் என கருதி ஒரு வேள்வி போல 1975-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இதிலேயே நீடித்து வருகிறேன். அரசியல் எனக்கு தெரிந்த பணி அல்ல.

காவல்துறை என்பது உள்நாட்டு பாதுகாவலர்களாக இருப்பவர்கள். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் எல்லையில் உள்ள காவலர்களுக்கும் உள்நாட்டில் இருக்கும் காவலர்களுக்கும் இடையே வேறுபாடில்லாத நிலை உள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படும் தாக்கங்களின் விளைவு இங்கும் எதிரொலிக்கக் கூடிய நிலை தற்போது நிலவுகிறது.

அதனால் பாரம்பரிய முறையில் எல்லையில் இருக்கும் வீரர்கள் ஆற்றி வரும் பாதுகாப்புப் பணியை நாட்டுக்கு உள்ளேயும் செய்ய வேண்டிய பொறுப்பு காவலர்களுக்கு உள்ளது. காவல் பணி என்பது எளிதானது அல்ல.

bbc

பல்வேறு இடர்பாடுகள், சிக்கல்கள், பிரச்னைகள் நிறைந்த அந்தப் பணியை சரியாக செய்து முடிக்கும்போது, உங்களுக்குள் மிகப் பெரிய மன நிறைவு ஏற்படும்.

வளர்ச்சி என்பது சரியான பாதுகாப்பு இருந்தால் மட்டுமே ஏற்படும். அத்தகைய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றுதான் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் எங்கு வேண்டுமானாலும் அச்சமின்றி சென்று வரக் கூடிய உணர்வை காவல்துறையால் மட்டுமே கொடுக்க முடியும். இது ஒரு புனிதமான தொழில்.

தேசப்பற்றை நிரூபிக்க வேறு எதிலும் சேராமல் காவல்துறையில் சேர்ந்தாலே போதும், எல்லாவித தேசப் பொறுப்பும் அதிலேயே நிறைந்துள்ளது.

பணி கடினமாக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் இந்தப் பணியில் மட்டுமே கிடைக்கும்.

இந்திய காவல் பணி மட்டுமின்றி மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, ஆகியவற்றில் உதவி ஆய்வாளர் பதவி மட்டுமின்றி காவலர் போன்ற பொறுப்புகளிலும் மன நிறைவைத் தரும் பணியை ஆற்ற முடியும்.

நீங்கள் எந்த நிலையில் பணியாற்றுகிறீர்கள் என்பது காவல்துறையில் முக்கியமில்லை.

உங்கள் பணியை எத்தகைய தரத்துடன் செய்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

bbc

உங்களைச் சுற்றி தவறுகள் நடந்தாலும் உங்களுக்குள் நல்லவராக இருந்தால் நம்பிக்கையுடன் உங்கள் பணியை வெற்றிகரமாக செய்ய முடியும்

வீரப்பன் கைரேகை பதிவு செய்யாதது ஏன்?

எவ்வளவு சிரமப்பட்டு வீரப்பனை வீழ்த்தினோம் என்பது பற்றித்தான் எனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

நான்தான் தலைமையானவன் என்ற தொணியில் அல்லாது காவல் பணியில் அனைவருக்கும் தலைமைப் பண்பு இருக்க வேண்டிய அவசியத்தை விளக்கும் விதமாக புத்தகம் எழுதப்பட்டது.

எனக்கு முன்பு வீரப்பன் தேடுதல் வேட்டையில் திறம்பட பணியாற்றியவரும் வீரப்பன் கூட்டத்தில் பலரை அழித்தவருமான கர்நாடகத்தைச் சேர்ந்த உயரதிகாரி சங்கர் பித்ரி, வால்டர் தேவாரம், சஞ்சய் அரோரா போன்ற பலரும் மிகவும் முதிர்ச்சியாக தேடுதல் வேட்டையைக் கையாண்டனர்.

பிற செய்திகள்

150-க்கும் அதிகமான வீரப்பன் குழுவினரை சுருங்கச் செய்ததில் அவர்கள் வழங்கிய பங்களிப்பின் தொடர்ச்சியாக வீரப்பன் சகாப்தத்தை முடித்து வைத்தபோது அவருடன் நான்கு பேர் மட்டுமே இருந்தனர்.

முந்தைய காலகட்டத்தில் எதை செய்ய முடியவில்லையோ அதை அறிந்து உளவு சேகரிப்பை மேம்படுத்தி வீரப்பனை காட்டை விட்டு வெளியே வரச் செய்து அவரது சகாப்தம் முடிவடைய உதவியாக மட்டுமே எனது பணி அமைந்தது.

தமிழில் புத்தகம் எப்போது?

ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் எனது புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிடுவது குறித்து பேச்சு நடத்தி வருகிறேன்.

அவ்வாறு வெளியிடும்போது கூடுதல் விவரங்களை சேர்க்க முடியுமா என்பது பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்.

கூடுதல் தகவல்கள் என்றால் அது பற்றிய ஆராய்ச்சியும் நிறையவே தேவை. பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஏதாவது சேர்க்க முடியுமா என்பது பற்றி யோசிக்கிறேன்" என்று தமது பேட்டியில் விஜய்குமார் கூறியிருக்கிறார்.

பிபிசி ஃபேஸ்புக்கில் விஜய்குமாரின் நேரலை பேட்டியை காண:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :