1,26,000 பவுண்டு ஏலம் போன ஒரு டைட்டானிக் பயணியின் கடிதம்

பட மூலாதாரம், Henry Aldridge & Son
டைட்டானிக் கப்பலில் எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று, ஏலத்தில் உலகசாதனை படைத்து.
ஆஸ்கர் ஹோல்வர்சன் என்ற அந்த அமெரிக்க பயணி இருந்து எழுதிய இந்த கடிதம் 1,26,000 பவுண்டுகள் ஏலம் போனது. இந்த கடிதம் 1912 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எழுதப்பட்டது. அதற்கு அடுத்த நாள், டைட்டானிக் பெரிய பனிப்பாறையில் மோதியது.
இந்த கடிதம், டைட்டானிக் கப்பலின் பெயர் பொறித்த குறிப்புத் தாளில் எழுதப்பட்டு, கடலில் மூழ்கி பின்பு கண்டெடுக்கப்பட்டது.
வில்ட்ஷைரில் நடந்த ஏலத்தில் தொலைபேசி மூலமாக பங்கெடுத்த ஒரு பிரிட்டன் வாசியால் இந்த கடல் நீரால் கரைபட்ட இந்தக் கடிதம் வாங்கப்பட்டுள்ளது.
கடித்ததை வாங்கியவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர், `வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை சேகரிப்பவர்` என்று குறிப்பிடுகிறார் ஏலம் நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ்.
வெற்றிகரமான விற்பனையாளராக இருந்த ஹோல்வர்சன், மனைவி மேரியுடனான டைட்டானிக் பயணத்தின் போது, தனது தாய்க்கு இந்த கடிதத்தை எழுதினார்.
சவுத்ஹாம்டன் பகுதியில் டைட்டானிக்கில் ஏறிய இந்த தம்பதி, நியூயார்க்கில் உள்ள தங்களின் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தது.

பட மூலாதாரம், Henry Aldridge & Son
இந்த கப்பல் மிகவும் பெரியதாகவும், ஆடம்பர விடுதியைப் போல அலங்கரிக்கப்பட்டும் இருந்ததாக அவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த காலகட்டத்தில், உலகின் மிகப்பெரிய செல்வந்தரான ஜான் ஜேகப் ஆஸ்டர் இந்த கப்பலில் தனது மனைவியுடன் பயணிப்பதாக எழுதியுள்ளார்.
"அவ்வளவு பணம் இருந்தாலும், அவரும் மற்ற மனிதர்களை போலவே உள்ளார். மற்ற எல்லோருடனும் இணைந்து அவரும் இங்கு கப்பல்தளத்தில் அமருகிறார்", என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் 60ஆயிரம் பவுண்டு முதல் 80 ஆயிரம் பவுண்டு வரையிலான குறைந்தபட்ச விலையைக் கொண்டிருந்தது.
அல்ட்ரிட்ஜ் கூறுகையில், "அந்த கடிதம் கிட்டத்தட்ட காலியாக இருந்தாலும், அந்த காகிதத்தின் இயல்பு, அதில் உள்ள குறியீடுகள் மற்றும் அதன் வரலாறே, அதை பலருக்கும் விருப்பமானதாக ஆக்கும் " என்றார்.
ஹோல்வர்சன் எழுதியதில் மெய்யாகாமல் போன போன ஒரே விஷயம், "அனைத்தும் நல்லமுறையில் நடந்தால், நாங்கள் புதன்கிழமை காலை, நியூயார்க் நகரை அடைவோம்" , என்பதுதான்.

பட மூலாதாரம், Henry Aldridge & Son
டைட்டானிக் மூழ்கிய போது, 1,500 மக்களுடன் சேர்ந்து ஹோல்வர்சன், ஆஸ்டர் ஆகியோரும் இறந்து போனார்கள்.
ஆனால், மேரி ஹோல்வர்சன் பிழைத்தார்.
ஹோல்வர்சனின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, இந்த கடிதம் அவரின் சிறிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
டைட்டானிக் கடிதம் இன்னும், அந்த உப்புத்தண்ணீரின் கரையையும், ஒயிட் ஸ்டார் ஷிப்பிங் நிறுவனத்தின் குறியீட்டையும் கொண்டுள்ளது.
அந்த கடிதம் கடைசியாக அவரின் தாயின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
"டைட்டானிக்கில் பயணித்த ஒருவரால் எழுதப்பட்டு, தபால்தலையின் உதவியே இல்லாமல், சென்றடைய வேண்டியவரின் கைகளுக்கு சென்ற ஒரே கடிதம் இதுவாக தான் இருக்கும்", என்கிறார் ஆல்ட்ரிட்ஜ்.
(23 அக்டோபர் 2017 பிபிசி தமிழ் தளத்தில் வெளியான கட்டுரை இது)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












