ஒரே நாளில் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த தம்பதி

பட மூலாதாரம், PSA
உலக விளையாட்டு வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெரும் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் கணவனும், பெண்கள் பிரிவில் மனைவியும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்கா ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் அலி ப்ராங் என்பவரும் அதே போட்டியின் பெண்கள் பிரிவில் அவரது மனைவி நௌர் எல் தயெப் என்பவரு பட்டம் வென்றனர். இரண்டு பிரிவின் இறுதிப் போட்டியும் ஒரே நாளில் நடந்தது.
சனிக்கிழமை நடந்த போட்டியில் 24 வயதான எல் தயெப், மகளிர் பிரிவில் ரணீம் எல் வெளிலியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
அதே நாளில், அவர் கணவரான 25 வயதான ப்ராங், சில மணிநேரங்கள் வித்தியாசத்தில், ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் முகமது எல் ஷோற்பகியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இந்த எகிப்திய தம்பதியினருக்கு இதுதான் முதல் மாபெரும் உலகளாவிய போட்டி.

பட மூலாதாரம், PSA
"என்னுடைய போட்டியை முடித்த பின்னர், நான் அவர் விளையாடுவதை பார்ப்பதில் ஆர்வமாக இருந்தேன். மேலும், நான் பரப்பரப்பாக உணர்ந்தேன்" என்று கூறினார் எல் தயெப்.
"இது ஒரு கனவு போன்ற அனுபவம் - அவர் தினமும் கடினமாக உழைப்பதை பார்த்திருக்கிறேன். உலகத் தொடர் போட்டிகளில் எங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் கிடைத்த இந்த முதல் வெற்றி மிகவும் சிறப்பான அனுபவம்."
இதைவிட ஒரு சிறந்த வாரத்தை நாங்கள் அனுபவித்திருக்க முடியாது என்று ப்ராங் கூறினார். நாங்களிருவரும் இணைந்து பெறப்போகும் பல வெற்றிகளில் இது முதலாவது என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












