வழியில் திருமணம், படையில் பொது மக்கள் – சோமநாத் கோவிலை காக்க கிளம்பிய 'வீரனின்' வரலாற்று கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெய்தீப் வசந்த்
- பதவி, பிபிசி குஜராத்தி
சோம்நாத் கோவில் பண்டைய காலத்திலும் இடைக்காலத்திலும் பலமுறை அழிக்கப்பட்டு, மீண்டும் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.
சோம்நாத் கோவில் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம், அதனுடன் தொடர்புடைய சில வரலாற்றுப் பாத்திரங்களும் தவறாமல் குறிப்பிடப்படுகிறார்கள்.
வரலாற்றின் பக்கங்களில் உள்ள இவர்களில் சில பெயர்கள் சோம்நாத் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவை. சில பெயர்கள் அதன் புனரமைப்பு அல்லது சீரமைப்புடன் தொடர்புடையவை.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டது. அதில் அப்போதைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் கனையாலால் முன்ஷி உள்ளிட்ட தலைவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
இருப்பினும், ஹமிர்ஜி கோஹில் என்ற பெயர் வேறொரு காரணத்திற்காக நினைவுகூரப்படுகிறது. அதற்குக் காரணம், அவர் 'சோம்நாத் மடத்திற்கு' சென்று அங்கேயே உயிர் நீத்தார்.
ஹமிர்ஜி கோஹிலின் கதை நாட்டுப்புறக் கதைகள், நாட்குறிப்புகள், புனைவுகள், புத்தகங்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் எனப் பல வடிவங்களில் சொல்லப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள கோஹிலோ மற்றும் கோஹில்வாட்
குஜராத்தி கலைக் களஞ்சியத்தில் 'கோஹிலோ' பற்றி கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, 'குஹில்புத்ரா', 'குஹிலுத்', 'குஹிலோட்' ஆகியவை 'குஹில்' என்ற சொல்லில் இருந்து உருவானவை.
'கெஹிலோட்', 'கெய்லோட்' ஆகிய சொற்களும் புழக்கத்தில் உள்ளன.
'கோபில்', 'கௌஹில்யா', 'கோகில்' போன்ற வழித்தோன்றல் குடும்பப் பெயர்களும் பல்வேறு கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இந்த வம்சத்தை நிறுவியவர் குஹதத்தா அல்லது குஹ பிராமணர்.
அவரும் அவரது வாரிசுகளும் மேவார் (தற்போதைய ராஜஸ்தான்) பகுதியின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.
கி.பி 977, கி.பி 1270, கி.பி 1285 ஆகிய ஆண்டுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளின்படி குஹில் அல்லது குஹதத்தா, பிராமணத்துக்கு பதில் ஷத்திரிய தர்மத்தை ஏற்றுக்கொண்டனர் .
பின்னர், கோஹில் ஆட்சியாளர்கள் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தென்னிந்தியா மற்றும் நேபாளத்தில்கூட ராஜ்ஜியங்களை நிறுவினர். சௌராஷ்டிராவின் தென்கிழக்குப் பகுதி 'கோகில்வாட்' என்று அழைக்கப்படுகிறது.
பாவ்நகர், பாலிதானா, லாதி, வால் ஆகிய சமஸ்தானங்கள் கோஹில் வம்சத்தின் கீழ் இருந்தன. கோஹில்வாட்டின் மூதாதையர் சேஜக்ஜி ஆவார்.

பட மூலாதாரம், Puneet Barnala/BBC
லூனி நதிக்கரையில் அமைந்துள்ள கெர்கர் மீது ரத்தோர் வம்சத்தினர் தாக்குதல் நடத்திய பிறகு, சேஜக்ஜி, அவரது குடும்பத்தினர் மற்றும் எஞ்சியிருந்த கோஹில்கள் வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர முடிவு செய்தனர்.
கி.பி 1250இல் சேஜக்ஜியின் தலைமையில் கோஹில்கள் முதன்முதலில் கத்தியவாருக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில், ஜூனாகத் அரியணையை மோஹோதாஸ் (அல்லது மூன்றாம் மஹிபால்) ஆட்சி செய்து வந்தார்.
அவர் சேஜக்ஜிக்கு அரசாங்கத்தில் ஒரு முக்கியமான பதவியை வழங்கினார். அதுமட்டுமின்றி, பாஞ்சால், ஷாபூர் உள்பட 12 கிராமங்களின் ஜாகீர் (நிர்வாக உரிமை) சேஜக்ஜிக்கு வழங்கப்பட்டது.
சேஜக்ஜியின் மகள் வாலம்குன்வர்பா, ஜூனாகத்தின் 'ரா குன்வர் கெங்கர்' என்பவருக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். இதன் மூலம் அவரது பதவியும் அந்தஸ்தும் வலுவடைந்தது.
ஜூனாகத் மன்னர் சேஜக்ஜியின் வாரிசுகளுக்கு மேலும் பல கிராமங்களின் நிலங்களை வழங்கியிருந்தார். அவர்களும் சொந்த முயற்சியில் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தினர்.
சேஜக்ஜியின் மூன்று மகன்களில், ராணோஜியின் வாரிசுகள் பாவ்நகரிலும், ஷாஜியின் வாரிசுகள் பாலிதானாவிலும், சாரங்ஜியின் வாரிசுகள் லாதியிலும் தங்களது தனித்தனி ராஜ்ஜியங்களை நிறுவினர்.

பட மூலாதாரம், Social Media
சோம்நாத் நோக்கி பயணம்
லாதியில் விரிவடைந்து கொண்டிருந்த கோஹில் வம்சத்தின் கிளையில்தான் ஹமிர்ஜி கோஹில் பிறந்தார். பிற்காலத்தில் இதே கிளையில்தான் சுர்சின்ஜி தக்த்சின்ஜி கோஹில், அதாவது கவிஞர் 'கலாபி' பிறந்தார்.
'சௌராஷ்டிரா வரலாறு' (பக்கம் 252-253) எனும் புத்தகத்தில் ஷம்புபிரசாத் தேசாய் பின்வருமாறு எழுதியுள்ளார்: கி.பி 1490ஆம் ஆண்டில், குஜராத்தின் சுல்தான் முகமது பெகடாவுக்கு, சோம்நாத் கோவில் புதுப்பிக்கப்பட்டு அங்கு வழிபாடுகள் நடப்பதாகத் தகவல் கிடைத்தது.
எனவே, 'காஸி' என்ற பட்டத்தைப் பெறுவதற்காக அவர் சோம்நாத் நோக்கிச் சென்றார்.
சுர்சின்ஜி தக்த்சின்ஜி கோஹிலின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பேராசிரியர் நவல்ராம் திரிவேதி, தனது 'கலாபி' என்ற புத்தகத்தில், சுபா ஜாபர் கான் சோம்நாத் பட்டணத்தை அழித்ததாகவும், கோவிலைப் பாதுகாக்கும்போது ஹமிர்ஜி உயிர் நீத்ததாகவும் எழுதியுள்ளார்.
'பம்பாய் பிரசிடென்சி கெசட்டியர்: கத்தியவார்' (பக்கம் 450-451) நூலில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, சாரங்ஜியின் வாரிசான துடோஜி, ஆரதிலாவை (லாதிக்கு முந்தைய தலைநகரம்) ஆட்சி செய்து வந்தார்.
ஒருநாள், துடோஜியின் மனைவியும் அவரது மைத்துனரான ஹமிர்ஜியும் பேசிக் கொண்டிருந்தபோது, சோம்நாத் நோக்கிய படையெடுப்பு குறித்து விவாதித்தனர்.
அப்போது ஹமிர்ஜியின் அண்ணி அவரைப் பார்த்து, "வேறு உண்மையான ஷத்திரியர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு கோழை. நீங்கள் ஒரு வீரன் என்றால், ஏன் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறீர்கள்?" என்று கூறினார்.
அந்தக் கருத்தால் உத்வேகம் பெற்ற ஹமிர்ஜி, உடனடியாகத் தனது நண்பர்கள் சுமார் இருநூறு பேருடன் சோம்நாத் மடத்தை நோக்கிப் புறப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஷம்புபிரசாத் தேசாய் தனது புத்தகத்தில், ஹமிர்ஜி சோம்நாத் புனிதப் பயணத்திற்காகப் புறப்பட்டதை அறிந்த மன்னர் வேக்டா பில்லின் ராஜ்ஜியத்தை மக்களும் அவருடன் சேர முடிவெடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், திருமணமாகாத ஹமிர்ஜி போர்க்களத்தில் இறந்தால் அவரது ஆத்மா சாந்தியடையாது என்று நம்பிய மன்னர் வேக்டா பில், தனது மகளை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.

சாவேர்ச்சந்த் மேகானி தனது 'ரா கங்காஜலியோ' புனைவின் முன்னுரையில் வரலாற்று நூல்களை மேற்கோள் காட்டி, 'ஹமிர்ஜி தனது பில்-கன்னியாவுடன் ஒரு இரவு தங்கியிருந்து போதையில் ஆழ்ந்திருந்தார்' என்று பதிவு செய்துள்ளார்.
''ஹமிர்ஜி சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்தார். அதன் பிறகு, ஹமிர்ஜி தனது தோழர்கள் மற்றும் வேக்டா பில் மக்களுடன் சோம்நாத் கோவிலுக்குச் சென்றார்.'' என்கிறது குஜராத்தி கலைக் களஞ்சியம்.
''அதன் பிறகு, படையெடுப்பாளர்களுக்கு எதிராகப் போராடி ஹமிர்ஜியும் வேக்டா பில் மக்களும் வீர மரணம் அடைந்தனர். அந்த பில்-கன்னியாவின் வயிற்றில் பிறந்த வாரிசுகள், கோஹில்களிடம் இருந்து ஒரு தனி வம்சமாக விரிவடைந்தனர்.''
தனது சகோதரரின் மரணத்திற்குப் பிறகு, துடோஜியும் குஜராத் சுல்தானுக்கு எதிராகப் போராடத் தொடங்கினார். எனவே, அவரைக் கட்டுப்படுத்தும் பணியை சுல்தான் ஜூனாகத்தின் 'ரா மண்டலிக்' என்பவரிடம் ஒப்படைத்தார். துடோஜியின் படை தோற்கடிக்கப்பட்டது.
இன்று, சோம்நாத்தின் பழைய கோவிலுக்கு அருகில் ஹமிர்ஜி, வேக்டா பில் ஆகியோருக்கான நினைவிடங்கள் அமைந்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












