
சந்தனக் கடத்தல் வீரப்பன்
ஐனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரையும் மறு உத்தரவு வரும் வரை தூக்கிலிடக் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த பாலாறு கண்ணிவெடித் தாக்குதல் வழக்கு தொடர்பில் இந்த நால்வர் மீதும் கடந்த 2004 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதன் பிறகு தண்டனைபெற்ற ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோர் தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ஜனாதிபதி நிராகரித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், அதிலும் கடந்த 9 ஆண்டுகளாக கருணை மனு மீதான முடிவு தெரியாமல் அவர்கள் காத்திருந்ததாகவும் இது அவர்களின் உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் அந்த நால்வர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புல்லரும் கருணை மனு மீது முடிவெடுக்க பல ஆண்டுகளானதை சுட்டிக் காட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் மற்றுமொரு பெஞ்சால் விசாரிக்கப்படும் நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு முடியும் வரை, அதாவது ஆறு வாரங்களுக்கு இவ்வழக்கை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.







