முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி; இணையத்தில் கொண்டாடும் தொண்டர்கள்

உடல்நலமின்றி ஓய்வெடுத்துவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வியாழக்கிழமையன்று இரவு முரசொலி அலுவலகத்திற்குச் சென்று பார்வையிட்டது தி.மு.க. தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான உற்சாகத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மீம்ஸ்

பட மூலாதாரம், Facebook

நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி, வியாழக்கிழமையன்று இரவில், கட்சி நாளிதழான முரசொலியின் அலுவலகத்திற்கு வந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானது முதல், அவரது கட்சித் தொண்டர்களும் அபிமானிகளும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளியிட்டுவருகின்றனர்.

இந்துக் கடவுளான கிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளி என கொண்டாடப்படுவதாக கதை ஒன்று கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு தீபாவளியையொட்டி, தமிழகத்தில் திராவிட இயக்க சிந்தனையுடையவர்கள் நரகாசுரனை தமிழராக குறிப்பிட்டு, இதற்கென #varalamvaanarakasura என்ற ஹேஷ்டாகை உருவாக்கியிருந்தனர்.

மீம்ஸ்

பட மூலாதாரம், Facebook

இந்த நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாள் கருணாநிதி நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியில் வந்ததை கொண்டாடும் விதமாக, அதே #varalamvaanarakasura என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி கருணாநிதி குறித்த செய்திகளைப் பதிவுசெய்தனர். கருணாநிதியை பா.ஜ.கவுக்கு எதிரான நரகாசுரனாகவும் குறிப்பிட்டனர்.

காவிகளின் கலியுக நரகாசுரன் என்றும் அவரைக் குறிப்பிட்டனர். உடனடியாக கருணாநிதியின் வருகையை வைத்து மீம்களும் உருவாக்கப்பட்டன.

ஜெயலலிதா உடல் நலமின்றி இருந்த காலகட்டத்தில், அவரது புகைப்படம்கூட வெளியிடப்படாதையும் சிலர் சுட்டிக்காட்டி கருணாநிதியின் வருகை குறித்து மகிழ்ந்தனர்.

பதிவு

பட மூலாதாரம், Facebook

இதற்கிடையில், கருணாநிதி முரசொலி அலுவலகத்தில் உள்ள கண்காட்சியைச் சுற்றிப் பார்த்த காட்சிகளை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் ஊடகங்களிடம் பேசிய கருணாநிதியின் மருத்துவரான டாக்டர் கோபால், "இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் மேலும் சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்" என்றும் கூறியிருப்பது தொண்டர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :