கொரோனாவில் இருந்து மீண்ட 906 இலங்கை கடற்படையினர்

கொரோனாவில் இருந்து மீண்ட 906 இலங்கை கடற்படையினர்

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

இலங்கை கடற்படையின் 906 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டனர்

இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவாதமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,998ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் 2,860 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் தற்போது 126 சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 12 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு கண்காணிப்பு நிலையங்களிலுள்ள 1021 பேரும், சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்காணிப்பு நிலையங்களிலிருந்த 78 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், கடற்படையைச் சேர்ந்த 906 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது பூரண குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்ட காலப் பகுதியில் பாதுகாப்பு பிரிவினர் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.

அவ்வாறு கடமைகளில் ஈடுபட்டிருந்த வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, வெலிசர முகாம் முழுமையாக முடப்பட்டு, அங்கிருந்த சிப்பாய்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சுமார் 906 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

பாதுகாப்பு படைகளுக்குள் ஊடுருவிய கொரோனா தொற்று தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட படையினர் அனைவரும் பூரண குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு குணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கடமைகளுக்கு திரும்பியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். ஏனைய படைகளைச் சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்ட அதேவேளை, அவர்களும் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 36 வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 576 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், வெலிகட சிறைச்சாலையிலிருந்து ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது சமூகங்களுக்கு இடையிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களில் பெரும்பாலானோரே கொரோனா தொற்றினால் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர்.

இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் 7286 பேர் தனி;மைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள பின்னணியிலேயே, கடந்த 5ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தெற்காசியாவில் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடத்திய நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: