கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையைச் சுத்தம் செய்த புதுச்சேரி அமைச்சர்

சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
படக்குறிப்பு, சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி கோவிட் மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையை புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சுத்தம் செய்தார்.

குறிப்பாக, கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளிகள், அங்குள்ள கழிவறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாக இருப்பதாக புகார் எழுப்பினர்.

பின்னர், இது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர், கழிவறை சுத்தமாகப் பராமரிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை முறையாகப் பராமரிக்கத் தொடங்கியது.

கழிவறையை சுத்தம் செய்யும் அமைச்சர்.
படக்குறிப்பு, கொரோனா நோயாளிகள் கழிவறையை சுத்தம் செய்யும் அமைச்சர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆய்விற்குச் செல்லும் சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்தும், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறதா என்று ஆய்வு செய்து வந்தார்.

இந்த நிலையில், வழக்கம் போல நேற்று (சனிக்கிழமை)‌ ஆய்விற்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கழிவறை அசுத்தமாக இருப்பதைக் கண்டு, அவரே சுத்தம் செய்யத் தொடங்கினார். மேலும், அங்கிருந்த தூய்மை பணியாளரிடம் இதைப் போன்று சுத்தமாகப் பாரமரிக்கும்படி அறிவுறுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: