"பாஜக கட்டுப்பாட்டில் வாட்சாப்?" - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி: "பா.ஜ.க. கட்டுப்பாட்டில் வாட்சாப்?" - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
ஆளும் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் வாட்சாப் இருப்பதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்தியாவில் 'வாட்சாப் செயலி, மத்தியில் ஆளும் பாஜக அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது' என்று அமெரிக்காவின் 'டைம்' பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. அதில் 'வாட்சாப்'பின் மூத்த நிர்வாகி சிவநாத் துக்ரால், ஆளும் பாஜகவின் தடையில்லா பக்தர், அவர் தொழில் முறை நடத்தையில் பாரபட்சமாக நடந்து கொண்டு உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையை இப்போது காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. இதையொட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பவன் கெரா, பிரவிண் சக்கரவர்த்தி ஆகியோர், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது, "ஒரு அரசியல் கட்சியால் (பாஜக) மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகிற வாட்சாப்பை 40 கோடி இந்தியர்கள் நம்ப முடியுமா? வாட்சாப்பை பயன்படுத்தும் 40 கோடி இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்கள், பரிமாற்ற விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை பா.ஜ.க.வுடன் பகிரப்படவில்லை, தவறாக பயன்படுத்தப்படவிலலை என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?" என கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "சிவகாசி அருகே 1,200 ஆண்டுகள் பழமையான குடவரைக் கோயில்"
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான குடவரை கோயில் கண்டறியப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் காளையார்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த சொக்கலிங்காபுரத்தில் அர்ஜுனா ஆற்றின் கரையில் சுரங்கப்பாதையுடன் குடவரை கோயில் உள்ளதாக, அவ்வூர் மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி சாந்தலிங்கம், வரலாற்றுப் பேராசிரியர் மகாலிங்கம் உள்ளிட்டோர் சொக்கலிங்காபுரம் வந்து குடவரை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் சாந்தலிங்கம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை செவல்பட்டி, மூவரைவென்றான், திருச்சுழி ஆகிய இடங்களில் குடவரை கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. குடவரை என்பது பாறைகளை குடைந்து கோயில் அமைப்பதாகும். கி.பி.7ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு, பல்லவ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் மொத்தம் 80 குடவரை கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிவகாசி அருகே சொக்கலிங்காபுரத்தில் உள்ள இந்த குடவரை கோயில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆற்றங்கரையோரம் உள்ள இக்கோயில் முற்றிலும் சுண்ணாம்புக் கல்லால் ஆனது. இந்த கோயிலில் 2 பிரகாரங்கள் இருப்பது அபூர்வமானதாகும். மிகவும் அரிதான கட்டுமானத்துடன் உள்ளது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "44 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆகஸ்டில் மழைப்பொழிவு"

பட மூலாதாரம், Slavica
கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆகஸ்டு மாதத்தில் நாட்டில் 25 சதவீதம் கூடுதலாக மழைப் பொழிவு இருந்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழைக் கொடுப்பது தென் மேற்கு பருவமழையாகும். ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி நாடுமுழுவதும் பரவலாக பருவமழையால் மழை கிடைக்கும். அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் வழக்கத்தைவிட 25 சதவீதம் கூடுதலாக மழை கிடைத்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 17 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவும், ஜூலை மாதத்தில் 10 சதவீதம் பற்றாக்குறை மழையும் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.
கடைசியாக கடந்த 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 23.8 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு நாட்டில் இருந்தது. அதன்பின் 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 25 சதவீதம் மழை பொழிவு கிடைத்துள்ளது. ஆனால், 1976-ம் ஆண்டு ஆகஸ்டில் 28.4 சதவீதம் கூடுதல் மழை கிடைத்தது. இந்த அளவை முறியடிக்கவில்லை. இருப்பினும் 44 ஆண்டுகளுக்குப்பின் ஆகஸ்டு மாதத்தில் கிடைத்த அதிகபட்ச மழை இதுவாகும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












