வசந்தகுமார் இறுதி அஞ்சலி: காற்றில் பறந்த விதிகள் - விதிமீறலா, அலட்சியமா?

பட மூலாதாரம், கே.எஸ். அழகிரி
கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் உயிரிழந்த தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான வசந்தகுமாரின் உடல் சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு அவரது கன்னியாகுமரில் உள்ள அவரது சொந்த ஊரான அகத்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முன்னதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவரது மரணம் தொடர்பாக வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து வித மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், வசந்தகுமாரின் நிலைமை மோசமடைந்து படிப்படியாக கோவிட் நிமோனியா சிக்கல்களால் அவர் உயிரிழந்தார்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சென்னை தி.நகர் இல்லத்திலும், பிறகு மாநில காங்கிரஸ் தலைமையகம் அமைந்த சத்தியமூர்த்தி பவன் முகப்புப் பக்கத்திலும் வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தி.நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்படாமல், காமராஜர் அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்கள் அங்கிருந்த பிறகு, அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் காலகட்டத்தில் வசந்தகுமார் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தபோதும், அவரது உடல் பொதுவெளியில் கொண்டு செல்லப்பட்டது மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், "கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது அப்பாவுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. அதனால் மீண்டும் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை வந்தது. மருத்துவர்கள் போராடியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை" என்றார்.
"நேற்று வெள்ளிக்கிழமை காலை, இரண்டாவது முறையாக அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. அதனால் கொரோனாவால் அப்பா இறக்கவில்லை" என்று விஜய் வசந்த் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.
விதிகள் மீறப்பட்டதாக விமர்சனம்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவரும், சிகிச்சை முடிந்து தொற்று இல்லை என்று அறிவிக்கப்படுபவரும் குறைந்தபட்சம் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை வீட்டுத்தனிமைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஆகியவை வழங்கியுள்ளன.
அதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. சமீபத்திய கட்டுப்பாடுகளின்படி உயிரிழப்போரின் இறுதி நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே பங்கெடுக்க வேண்டும் என்றும், அதுவே கொரோனா உயிரிழப்பாக பதிவாகியிருந்தால் அதற்குரிய வழிகாட்டுதல்களை அரசுத்துறை மேற்பார்வையில் நல்லடக்கமோ, தகனமோ செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் உயிரிழந்த விவகாரத்தில், கொரோனா சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை அரசு, அரசுத்துறைகள், அரசியல் கட்சிகள், தனி நபர்கள் பின்பற்றவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பட மூலாதாரம், அப்பல்லோ
வசந்தகுமாரின் கொரோனா பரிசோதனை ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 10.44 மணிக்கு நடத்தப்பட்டு, மாலை 6.32 மணியளவில் முடிவுகள் வெளியிடப்பட்டதாக பிபிசிக்கு கிடைத்தள்ள அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில், அவருக்கு கோவிட்-19 கண்டறிவதற்காக "சளி மாதிரி" சேகரிக்கப்பட்டதில், முடிவு நெகட்டிவ் ஆக வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் குறிப்பில், நெகட்டிவ் என வந்தாலும் அது கோவிட்-19 இல்லை என முழுமையாகாது என்றும் அது நோயாளியின் மருத்துவ சிகிச்சை நிலைகள், சிகிச்சை வரலாறு, தொற்றுப்பரவல் தகவல் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நெகட்டிவ் என்ற முடிவை வைத்து மட்டும் பரிசோதனையோ, நோயாளியை கையாளும் பிற முடிவுகளையோ எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வசந்த குமார் உடல் வைக்கப்பட்டிருந்த பேழைக்கு அருகேயும், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகவும் நூற்றுக்கணக்கில் மக்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கும் வந்த விவகாரத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாதது குறித்து அதிகாரிகள் ஏன் அலட்சியம் காட்டினார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது ஒரு தவறான முன்னுதாரணமாகலாம் என்று கூறும், மருத்துவரும் சமூக ஆர்வலருமான ரவீந்திரநாத், வசந்தகுமாரின் சென்னை இறுதி அஞ்சலி நிகழ்வில் சமூக இடைவெளி மற்றும் பொதுமுடக்க விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்துள்ளது என்றார்.
''கொரோனா காலத்தில் மக்கள் கூட்டமாக ஒரு இடத்தில் இருப்பதை தவிர்க்கவேண்டும் என்பது விதி. இன்றைய நிகழ்வில் இதனை அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. வசந்தகுமாரின் குடும்பத்தாருக்கு இந்த சமயம் மிகவும் துயரமானதாக இருக்கும். அஞ்சலி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரத்தில் அரசியல் தலைவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மறுத்துவிட்டனர் என்பது வெளிப்படையாக தொலைக்காட்சி நேரலை காட்சிகளில் தெரிந்தது,'' என்கிறார் ரவீந்திரநாத்.
செல்வாக்குக்கு தக்கபடி விதிகளா?
கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றால் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உயிரிழந்தபோது, அவரது உடல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில், குடும்ப உறுப்பினர்கள் ஒரு சில மணித்துளிகள் மட்டும் அஞ்சலி செலுத்திய பிறகு கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போதும் விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இது குறித்து பெயரை வெளிப்படுத்த விரும்பாத தமிழக அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, ''வசந்தகுமாரின் சென்னை இறுதி அஞ்சலி நிகழ்வில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கொரோனா இல்லாத நபராக இருந்தாலும், இறுதி அஞ்சலி கூட்டத்தில் இவ்வளவு பேர் ஒன்று கூடுவது தவறு. இதுபோன்ற நேரங்களில் பணம் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இது பிரச்சனையாக வாய்ப்புள்ளது என்பதை தொலைக்காட்சிகளில் பார்த்ததும் தெரிந்து கொண்டேன். தற்போது என்னால் வெளிப்படையாகப் பேசமுடியவில்லை,'' என்றார் அந்த அமைச்சர்.
இதேபோல, சென்னையில் வசந்தகுமாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு தொடர்பாக பேசிய பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ''புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் என தலைவர்கள் ஒருபுறம், தொண்டர்கள் மறுபுறமும் அங்கு குவிந்துவிட்டனர். எங்களால் வருபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை,'' என கவலை தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜே. அன்பழகனின் இறுதி அஞ்சலி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுகவின் மூத்த மாநிலங்களவை உறுப்பினர், ஒருவர்,''அன்பழகனுக்கு கொரோனா தாக்கம் இருந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தனர். இறுதி சடங்கு விதிமுறைகள்படி நடத்தவேண்டும் என்று கூறி அங்கிருந்தே அவரது உடலை அவர்களே எடுத்துச்சென்றனர். வசந்தகுமாரை பொறுத்தவரை, அவரிடம் பணியாற்றிய ஊழியர்கள் ஆர்வமிகுதியால் இறுதி அஞ்சலி செலுத்த கூடிவிட்டார்கள். காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை விதிமீறல்களை கண்டுகொள்ளவில்லை என்பது உண்மை. நோய் தொற்று பரவுவதற்கு இந்த கூட்டமே ஒரு காரணமாகிவிடகூடாது என்பதை அதிகாரிகள் பொது மக்களுக்கு உணர்த்தவில்லை'' என்றார்.
கொரோனா பரவல் தமிழ்நாட்டில் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த வசந்த குமாரின் மறைவு காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவருக்கு இரங்கல் தெரிவித்து தலைவர்களும் அக்கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவர் கொரோனா சிக்கல்களால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை கூறிய அதே வேளை, அவருக்கு முன்தினமே பரிசோதனை முடிவு நெகட்டிவ் ஆக வந்துள்ளது என்று அவரது மகன் இறுதி அஞ்சலிக்கு முன்பாக ஊடகங்களிடம் அளித்த பேட்டி முரண்படுகின்றன.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கூட, தற்போதைய வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள காலத்தில் அவரது இறுதி நிகழ்வை அரசுத்துறையினரும் அரசியல் கட்சியினரும் அலட்சியப்படுத்திய செயல்பாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


பிற செய்திகள்:
- கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன?
- அமித் ஷா: எய்ம்ஸில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? பிரணாப் முகர்ஜி உடல்நிலை என்ன?
- அதிமுக Vs பாஜக: யார் தலைமையில் கூட்டணி? தொடரும் சர்ச்சை
- பிரான்சில் இதுவரை இல்லாத அளவு தீவிரமடையும் கொரோனா பரவல்: மீண்டும் பொது முடக்கமா?
- இந்தர்ஜித் கௌர்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர்
- ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












