அழிவின் விளிம்பில் பத்து லட்சம் உயிரினங்கள் - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

பட மூலாதாரம், Getty Images
இயற்கையின் அழிவு என்பது மனித குலத்தினை அழிவினை நோக்கியே வழி நடத்தும் என்பதனை நிறுவும் விதமாக , பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை (IPBES) அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
"இயற்கையால் மனிதர்களின் தேவையினை மட்டுமே நிறைவு செய்ய இயலும்,பேராசையினை அல்ல" என்றார் காந்தி. அதன் சான்றாக உள்ளன இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள். குறிப்பாக, 1 மில்லியன் உயிரினங்கள் உலகில் இருந்து அழியும் தருவாயில் உள்ளன, தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மனித இனம் தோன்றுவதற்கும் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பிருந்து இந்த மண்ணில் வாழ்ந்த 10 லட்சம் உயிரினங்கள் உலகில் இருந்து முற்றிலும் அழிந்து போய்விடும் என்கின்றது இந்த அறிக்கை. இங்கு நடைபெறும் சூழலியல் சிதைவுகளும், உயிர்களின் அழிவிற்கும் மனித செயல்பாடுகளே முதன்மை காரணம் எனக் கூறும் இந்த அறிக்கையில் உள்ள சில அவசிய தகவல்களை தொகுத்து அளிக்கிறோம்.
புவியில் மனித இனம் நிலைத்திருப்பதற்கும், வளமானதொரு வாழ்வை வாழவும் முதன்மை ஆதாரமாக இருப்பது இயற்கையும், அது அள்ளித்தரும் வளங்களும்தான். மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையிலும் அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவும், நன்னீரும், உயிர்க்காற்றும் கிடைத்துக்கொண்டே இருப்பதன் காரணம் தொடர்ந்து இயற்கை வலிமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டும் , புதுப்பித்துக் கொண்டும் மனிதர்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்கிக் கொண்டே இருந்திருக்கின்றது. ஆனால், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கையும், பல்லுயிர்களும் பெரும் அழுத்தங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
இயற்கையின் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவு தான், ஏனெனில் இயற்கை வளங்களை எந்த தொழில்நுட்பத்தினைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது.இயற்கைவளங்களின் துணையின்றி மனிதகுலம் வாழ்வதும் சாத்தியமில்லை. சுமார் 200 கோடி மக்கள் தங்களது முதன்மை ஆற்றல் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கான எரிபொருள் தேவைக்காக மரங்களை நம்பியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஏறக்குறைய 400 கோடி மக்களின் மருத்துவத்தேவையினை நிறைவு செய்வது இயற்கைதான், எடுத்துக்காட்டாக புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் 70 சதவீத மருந்துகள் இயற்கையாக கிடைப்பவை, அல்லது இயற்கை மூலப் பொருட்களை கொண்டு உருவாக்கப்படுபவை.
75 சதவீதத்திற்கும் மேலான உணவுப் பயிர்களின் மகரந்தசேர்க்கை பறவைகள் மற்றும் விலங்குகளின் உதவியோடுதான் நடைபெறுகின்றது. மனித செயல்பாடுகளால் அளவில்லாமல் உமிழப்படும் கரியமில வாயுவினை உட்கிரகித்துக் கொள்வது நிலப்பரப்பில் உள்ள சூழல் அமைப்பும், கடல்பரப்பும் தான்.
மனிதர்களுக்கு தேவையான வளங்களை இயற்கை நிலையாக வழங்கிக் கொண்டே இருந்தாலும், இயற்கையின் பங்களிப்பினை பகிர்ந்து கொள்வதில் மனிதக்குழுக்களுக்கு இடையில் நிலவும் சமத்துவமின்மைதான் இன்றைய பல சிக்கல்களுக்கு காரணம். இயற்கையின் பங்களிப்புகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மக்கள் அல்லது நாடுகளுக்கு அதிகமாகவும், ஒரு சிலருக்கு குறைவாகவும் பங்கிடப்படுகின்றது.
உலக உணவுத் தேவையினை திருப்தி செய்யுமளவிற்கு உணவு உற்பத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, எனினும் உலக மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதத்தினர் ஊட்டசத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் மேலும் 20 சதவீத இளவயது மரணங்கள் உணவு தொடர்பான நோய்களால் தான் நிகழ்கின்றது. 1970க்கு பிறகு உணவு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்திருக்கின்றது. உணவு பற்றாக்குறை ஏற்படுவதன் காரணம் இயற்கை அல்ல, மனிதர்கள் தான்.

பட மூலாதாரம், Getty Images
மர அறுவடை 45 சதவீதம் அதிகரித்துள்ளது, வனங்களினால் 13.2 மில்லியன் மக்களால் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர். ஆனால், இப்பொழுது மகரந்த சேர்க்கையினை நிகழ்த்தும் உயிரினங்கள் அழிந்து கொண்டே வருவதாலும், நிலப் பயன்பாடு மாற்றத்தாலும் பயிர்கள் உற்பத்தி பெரிய அளவில் குறைந்து வருகின்றது. இது மிகப்பெரிய உணவுப் பஞ்சத்திற்கு வழிசெய்யும்.
கடலோரப் பகுதிகளில், கடற்கரை சோலைகளும் , பவளப்பாறைகளும் அழிக்கப்படுவதால் புயல் பாதிப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது, 100மில்லியன் - 300 மில்லியன் மக்கள் புயல் மையங்களுக்குள்தான் வாழ்கின்றனர். தொடர்ந்து கடலோரத்தில் நடக்கும் சூழலியல் சிதைவுகளால் அந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
மனிதர்கள், இயற்கை அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதால் ,75 சதவீத நிலப்பரப்பு அதன் இயற்கை தன்மையினை இழந்து விட்டது. 66 சதவீத கடல் பகுதி பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது. 85 சதவீத ஏரி, குளம் போன்ற நீராதாரங்கள் தொலைந்து போய்விட்டன.
2010ல் இருந்து 2015க்கு உள்ளாக, 32 ஹெக்டேர் பரப்புள்ள உயிரிப்பன்மையம் நிறைந்த அடர்ந்த காடுகள் அழிந்து போய்விட்டன.
ஒவ்வொரு பகுதியிலும் அந்த மண்ணுக்கே உரிய தாவரங்கள் அழிக்கப்பட்டு, அயல் தாவரங்கள் பெருகி வருவதால் மரபு தாவரங்கள் பாதிப்புக்கு உள்ளாவது மட்டுமல்லாது அங்கு வாழும் மக்களும் வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கட்டுப்பாடில்லாத பணப்பயிர்கள் விளைவித்தலும் , தாவரப்பன்மையம் அழிவதற்கான முதன்மை காரணங்களுள் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images
2016ம் ஆண்டில் , உணவிற்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்ட 6,190 வகையான வளர்ப்பு நாட்டு விலங்கினங்களில் 55 வகையான நாட்டு ரக விலங்கினங்கள் அழிந்து விட்டன, 1000 க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு , கடந்த 50 வருடங்களில் இயற்கை சிதைக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கான அடிப்படைக் காரணங்கள், நிலம் மற்றும் கடல் பரப்பினை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள மாற்றம், உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அதன் அழிவுக்கு வழிசெய்தல், பருவநிலை மாற்றம், சூழல் மாசுபாடு, அயல் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஊடுருவல் , உற்பத்தி மற்றும் நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம், மக்கள் தொகை பெருக்கம், தொழில் நுட்பம் என மனித செயல்பாடுகளின் விளைவுகளே.
அளவில்லாமல் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் , சுத்திகரிக்கப்படாத ஊரக- நகர்ப்புற கழிவுகள், தொழிற்சாலை மாசுகள், சுரங்கங்கள் தோண்டுதல், விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், எண்ணெய் கசிவுகள், நச்சு கழிவுகள் குவிப்பு ஆகிய சிக்கல்களால் மண்ணும், நீரும் பாழ்பட்டுள்ளது.
கடந்த 50 வருடங்களில் மக்கள்தொகை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது, உலகப் பொருளாதாரம் நான்கு மடங்கு வளர்ந்துள்ளது, உலக வணிக சந்தை 10 மடங்கு பெருகியுள்ளது, இவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஆற்றல் தேவைகளை அதிகரித்துள்ளது.
பழங்குடிகள் அல்லது மண்சார்ந்த மக்கள் வாழும் பகுதிகள் எடுத்துக்காட்டாக மீனவர்கள், வனப் பழங்குடிகள் ஆகியோர் வாழ்கின்ற பகுதிகளில் இயற்கை சுரண்டல்கள் நடைபெற்றதில்லை , அவர்களின் வாழ்வியல் இயற்கையோடு இயைந்ததாக இருந்தது. ஆனால், தற்போது மண்சார்ந்த மக்களின் வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் முதலில் மண்சார்ந்த மக்களின் வாழ்வில் தான் தாக்கங்களை ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images
ஆக, இந்த அறிக்கையின் படி மண், நன்னீர், கடல் என இயற்கை அமைப்புகள் தொடங்கி புழு, பூச்சி இனங்கள், ஊர்வன, மீன்கள், பறவைகள், பாலூட்டிகள் என பல்வகை உயிர்களில் இருந்து பழங்குடிகள் வரை அழிவை சந்திக்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது. இதற்கான முதன்மை காரணம், மனிதர்களின் முறையாக திட்டமிடப் படாத வளர்ச்சி தொழில் நுட்பங்களும், மீநுகர்வு போக்கும், இயற்கை வளங்களை நியாயமாக பகிர்ந்து கொள்ளாத சுரண்டல் மனப்பான்மையும் தான் என்கின்ற இந்த அறிக்கையினை தயாரித்த குழு உலகம் முழுக்க உள்ள அரசுகள் ஒன்றிணைந்து நிலைத்த சமூக பொருளாதார வளர்ச்சி கொள்கைகளை திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி திட்ட கொள்கை வரைவுக்கான அறிவுரைகள் அடங்கிய அறிக்கையினை தயாரித்துள்ளது.
தொடர்ந்து இயற்கையும், இயற்கை சார்ந்து வாழும் உயிர்களும் அழிக்கப்பட்டு கொண்டே வருவதால் , மனித இனம் மிகப்பெரிய, நினைத்து பார்க்க இயலாத அளவிற்கு ஆபத்துக்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் உலக அரசுகள் ஒன்றிணைந்து, நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் , என்றும், அரசுகள் வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களையும் கொள்கை வகுப்பாளர்களுக்கான அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றம்.
பிற செய்திகள் :
- கொரோனா வைரஸ்: சீனாவை காட்டிலும் இத்தாலியில் இரட்டிப்பான உயிரிழப்பு - மற்ற நாடுகளில் என்ன நிலை?
- கொரோனா வைரஸ்: இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு குறித்து உரையாற்றவுள்ள மோதி - முக்கிய அறிவிப்பு வெளியீடு?
- கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட பேராசிரியர் கூறுவது என்ன? - நம்பிக்கை பகிர்வு
- கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளிவைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












