கொரோனா வைரஸ்: சீனாவை காட்டிலும் இத்தாலியில் இரட்டிப்பான உயிரிழப்பு - மற்ற நாடுகளில் என்ன நிலை? Coronavirus World updates

கொரோனா வைரஸ்:

பட மூலாதாரம், Hagen Hopkins/getty Images

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78, 601-ஆக உயந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

அதேவேளையில் இதுவரை 16,505 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் 6,077 பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்று நோயின் தொடக்கமான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 1 மடங்கு அதிகம்.

கொரோனா தொற்று பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகள்

  • இத்தாலி: 6,077
  • ஹுபே மாகாணம் சீனா: 3,153
  • ஸ்பெயின்: 2,311
  • இரான்: 1,812
  • பிரான்ஸ்: 860
  • அமெரிக்கா: 515
  • பிரிட்டன்: 335
  • நெதர்லாந்து: 213
  • ஜெர்மனி: 123
  • ஸ்விட்சர்லாந்து: 120

தீவிரமடைகிறது கொரோனா வைரஸ்: எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்

டெட்ரோஸ்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கோவிட்-19 கண்டறியப்பட்டு 67 நாட்களில் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது. அதன் பிறகு 11 நாட்களில் 2 லட்சத்தை கடந்தது. இப்போது நான்கு நாட்களில் 3 லட்சத்தை கடந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த நிலையை மாற்றும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

மீண்டும் திறக்கப்பட்ட சீன வனவிலங்கு பூங்கா

கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கியுள்ள நிலையில், சீனாவில் பெய்ஜிங் நகரத்தில் உள்ள வனவிலங்கு பூங்கா ஒன்று 58 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இது பற்றி செய்தி வெளியிட்டிருந்த உள்ளூர் ஊடகமொன்று கொரோனா வைரஸ் தொற்றால் நீண்ட காலமாக இந்த வனவிலங்கு பூங்கா மூடப்பட்டிருந்த நிலையிலும், இங்குள்ள விலங்குகள் நல்ல உடல்நிலையுடன் ஆரோக்யமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

'இந்தியாவில் பரவுவதை வைத்தே கொரோனாவின் தீவிரத்தை அறிய முடியும் '

டாக்டர். மைக்கேல் ஜெ ரியான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை வைத்தே அதன் தீவிரத்தை அறிய முடியும். இதனால் இந்தியா மக்கள் சுகாதாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய அம்மை மற்றும் போலியோ போன்ற உலகை அழித்து கொண்டிருந்த நோய்களை ஒழிக்க உலகத்திற்கு இந்தியாதான் வழிகாட்டியது. இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இதை ஒழிக்க வழி அறியும் திறன் இருக்கிறது என உலக சுகாதர நிறுவன செயல் இயக்குனர் டாக்டர். மைக்கேல் ஜெ ரியான் கூறியுள்ளார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைப்பு

ஒலிம்பிக்

பட மூலாதாரம், Justin Setterfield/getty Images

கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் கூறியுள்ளார்.

பிரிட்டன் ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்ததும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைப்பினர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவும், கனடாவும் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

நான்கு வாரங்களுக்குள் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து அடுத்த முடிவு எடுக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால் விரைவிலேயே இது குறித்து அடுத்த அறிவிப்பு வெளிவரும் என டிக் பௌண்ட் கூறியுள்ளார்.

மற்ற நாடுகளில் நிலை என்ன?

  • மியான்மரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இப்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சென்று வந்த ஒருவருக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்நாட்டில் உறுதி செய்யப்பட்ட முதல் தொற்று என்பது குறிப்பிடத்தக்கது.
  • நியூசிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 40 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 155 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை யாரும் அங்கே உயிரிழக்கவில்லை.
  • கொரோனா தொற்றால் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளை அடுத்து தற்போது ஜெர்மனியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • ஜெர்மனியில் நேற்று ஒரேநாளில் புதிதாக 4764 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜெர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,436-ஆகி உயர்ந்துள்ளது. மேலும் ஜெர்மனியில் இதுவரை 28 பேர் இறந்துள்ளனர்.
பயணிகள் கப்பல்

பட மூலாதாரம், Getty Images

  • சிட்னியில் நின்றிருந்த பயணிகள் கப்பலில் இருந்த 70 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார். கடந்த வெள்ளியன்று கப்பலில் இருந்தவர்களில் உறுதி செய்யப்பட்ட மூவரில் ஒருவர்.

2700 பயணிகள் கொண்ட கப்பலில் அனைவரையும் பரிசோதனை செய்யாமல் கடந்த வாரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதில் பலர் வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய மருத்துவ உபகரணங்களை டெலிவரி செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸுடன் இணைந்து செயல்படுகிறது அமேசான் நிறுவனம்.

கொரோனா வைரஸ்

கேட்ஸ் ஃப்வுண்டேஷன் நிறுவிய சியாட்டல் கொரோனாவைரஸ் அசெஸ்மென்ட் நெட்வொர்க்( எஸ்சிஏஎன்) வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை தெரிந்துகொள்ள சியாட்டலில் இருப்பவர்களுக்கு பரிசோதனை கருவி கொடுத்து வருகிறது.

அமேசான் கேர் மக்களுக்கு அதை கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக செய்ல்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: