கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளிவைப்பு மற்றும் பிற செய்திகள்

ஒலிம்பிக்

பட மூலாதாரம், Reuters

கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் கூறியுள்ளார்.

பிரிட்டன் ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்ததும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைப்பினர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவும் கனடாவும் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான்கு வாரங்களுக்குள் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து அடுத்த முடிவு எடுக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால் விரைவிலேயே இது குறித்து அடுத்த அறிவிப்பு வெளிவரும் என டிக் பௌண்ட் கூறியுள்ளார்.

Presentational grey line

கொரோனா வைரஸ்: மலேசியாவில் அதிகரிக்கும் எண்ணிக்கை. ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. அங்கு நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 14ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 23)ஒரே நாளில் புதிதாக 212 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது 1,518ஆக உள்ளது என மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மலேசியாவில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.இதற்கு முன்பு கடந்த 15ஆம் தேதி 190 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே நேற்றும் இன்றுமாக நான்கு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 70 வயது ஆடவர்கள் இருவர், 49 வயது மலேசிய குடிமகன் மற்றும் 51 வயது மலேசியப் பெண்மணியும் அடங்குவர்.

Presentational grey line

டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா?

டைனோசர்கள்

பட மூலாதாரம், MARK GARLICK/SCIENCE PHOTO LIBRARY

கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள்.

மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஒரு மிகப் பெரிய குறுங்கோள் பூமியில் வந்து விழுந்த சில நொடிகள் முதல் சில மணிநேரங்களில் இந்த படிமங்கள் உண்டாகின.

அதாவது, உலகின் மிகப் பெரிய விலங்குகளாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து, பாலூட்டிகளின் காலம் வளரத் தொடங்கியதே இந்த காலம்.

இந்த பேரழிவின் உயர் தெளிவுத்திறன் மிக்க தரவுகள் இங்கிலாந்து / அமெரிக்கா தலைமையிலான குழுவினரால் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

Presentational grey line

கொரோனா வைரஸ்: ஊரடங்கு உத்தரவுக்கும் 144 தடை உத்தரவுக்கும் என்ன வேறுபாடு?

ஊரடங்கு உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டும் காலங்களில் தேவைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவை இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி அரசு காவல்துறை மூலம் அமல்படுத்தும். 144 தடை உத்தரவின் நீடித்த நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை குறிப்பிடலாம். இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்றாலும், சூழ்நிலை, நேரம், காலத்துக்கு தக்கவாறு நடவடிக்கையின் தன்மை அமையும்.

ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன?

அசாதாரணமான சூழ்நிலைகளில் பதற்றத்தை தணிக்க முடியாத நிலை எழும்போது, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இனம் அல்லது சமுதாயம், ஜாதி கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, நோய் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான தேவையின்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாக தலைவரான மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு நிர்வாகம் - அமைதியை நிலைநாட்ட முடியாத சூழலில் பயன்படுத்தும்.

டெல்லி சாலை

பட மூலாதாரம், Getty Images

மக்களின் எவ்வித நடமாட்டத்தையோ, கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்படும். அத்தியாவசிய சேவைகளான காவல்துறை, அவசர ஊர்தி வாகனங்கள், தீயணைப்புத்துறை ஆகியவை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

144 பிரிவு என்ன கூறுகிறது

இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 144-ஆவது பிரிவே, 144 தடை உத்தரவு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

இந்த தண்டனை சட்டப்பிரிவின்படி பொதுமக்கள், நான்கு அல்லது அதற்கு மேலானோர், பொது இடத்திலோ, மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியிலோ கூடுவது குற்றமாக கருதப்படும்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் அல்லது காவல்துறை வரையறுத்துள்ள இடங்களில் நான்கு அல்லது அதற்கு மேலானோர் கூடுவதற்கு இந்த சட்டப்பிரிவு தடை விதிக்கும் அதே சமயம், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவசர தேவைக்காக செல்வதை இந்த சட்டப்பிரிவு தடுக்காது.

Presentational grey line

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல்

முகமூடி

பட மூலாதாரம், EPA

மார்ச் 11 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?

ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: