இயற்கை பாதுகாப்பு: உலகின் கடைசி இடத்தை காக்க போராடும் பெண்

சுற்றுச்சூழல் ஆர்வலர் பர்விசா ஃபர்ஹான்

பட மூலாதாரம், WFN

படக்குறிப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் பர்விசா ஃபர்ஹான்
    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, பிபிசி

ஒராங்குட்டான்கள், காண்டா மிருகங்கள், யானைகள், புலிகள் இவையனைத்தும் இணைந்து வாழும் காடு உலகில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் பர்விசா ஃபர்ஹான் சுமத்ராவிலுள்ள லுசர் என்னும் வனப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடுகிறார்.

இவருக்கு சொந்தமான தன்னார்வ தொண்டு நிறுவனமான யாயசன் ஹக்கா, கடந்த 2012ஆம் ஆண்டு இந்த வனப்பகுதியில் பனை எண்ணெய்யை எடுப்பதற்கு சட்டவிரோதமாக அனுமதி வாங்கிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து அதற்கெதிராக போராடியது.

வனங்களின் வாழ்வியலை பற்றி எவரும் கவலைகொள்வதில்லை என்ற அநியாயத்தின் காரணமாக தாம் உந்தப்படுவதாக அவர் கூறுகிறார்.

மழைக்காடுகள் ஏன் மிகவும் முக்கியமானது?

"ஒரு மிகப் பெரிய விதானத்தின் கீழே நின்றுகொண்டு நீங்கள் மேல்நோக்கி பார்ப்பதைப்போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களால் மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் ஹார்ன்பில் பறவை கத்திக்கொண்டு இருப்பதை கேட்க முடியும். நீங்கள் இன்னமும் சுற்றி பார்த்தால் தனது காட்டின் எல்லைகளை பாதுகாக்கும் கிப்பன் என்னும் ஒருவகை சிறிய மனித குரங்குகளின் எதிரொலிக்கும் ஒலியை கேட்க முடியும்," என சுமத்ராவிலுள்ள லுசர் வனப்பகுதியின் தனித்துவத்தை பர்விசா விளக்குகிறார்.

சுமத்ராவிலுள்ள பெரிய ஆண் ஒராங்குட்டான்

பட மூலாதாரம், PAUL HILTON

படக்குறிப்பு, சுமத்ராவிலுள்ள பெரிய ஆண் ஒராங்குட்டான்

"ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தனது குட்டியை கட்டிக்கொண்டு தாவும் ஒராங்குட்டான்களையும், உங்களை பார்த்தவுடன் சத்தமாக கத்தும் குட்டை வால் குரங்குகளையும் அங்கு காண முடியும். ஆனால், நீங்கள் அமைதி காக்க கூடாத நேரத்தில் தொடர்ந்து அமைதி காத்தீர்களானால், சிறிது காலத்தில் அந்த காட்டிலிருந்து எந்த ஒலியும் கேட்காமல் போகலாம்."

"விலங்குகளின் ஒலிகளுக்கு பதிலாக, சிலநேரங்களில் தூரத்தில் மரங்களை அறுக்கும் ரம்பங்களின் சத்தத்தை நீங்கள் கேட்க நேரிடலாம். இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை உங்களால் தடுக்க முடியும். ரம்பங்கள் வனப்பகுதிகளின் மையப்பகுதிவரை விரிவடைந்து இயற்கை வாழிடத்தை அழிப்பதை உங்களால் தடுக்க முடியும்," என்று பர்விசா கூறுகிறார்.

இயற்கையுடன் காதலில் விழுந்தபோது...

"பிபிசியின் ப்ளூ பிளானட் நிகழ்ச்சிகளை அதிகளவில் பார்த்ததே நான் அடிப்படையில் சுற்றுச்சூழல் ஆர்வலராவதற்கு காரணம். என்னுடைய சிறு வயதிலேயே கடல் மீதும், பவளப்பாறைகள் மீதும் காதலில் விழுந்தேன். அதைத்தொடர்ந்து, இதைத்தான் என் வாழ்நாள் முழுவதும் செய்யப்போகிறேன் என்று இதயத்தில் குறித்து வைத்தேன்" என்று இயற்கையின் மீதான தனது ஆர்வம் குறித்து பர்விசா விளக்குகிறார்.

உலகின் கடைசி இடத்தை காக்க போற்றப்படும் ஒற்றை பெண்

பட மூலாதாரம், ARC CENTRE OF EXCELLENCE FOR CORAL REEF STUDIES

"அதன்பிறகு, என் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, கடல்சார் உயிரியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு, நான் முதன்முதலாக பவளப்பாறைகள் மீது காதலில் விழுந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சியும், கோபமும் எனக்கு ஏற்பட்டது. நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த இயற்கையான வாழிடம், அப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக மொத்தமாக அழிந்திருந்தது" என்று பர்விசா தனது வாழ்க்கையை திருப்பிப்போட்ட தருணத்தை விளக்குகிறார்.

அப்போது எதுவும் செய்வதறியாது தவித்த தான் காடுகளை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டதாக அவர் மேலும் கூறுகிறார்.

அச்சுறுத்தலுக்கு காரணம் என்ன?

"சுரண்டலும், நிலையற்ற வளர்ச்சி திட்டங்களும் லுசர் சூழியல் அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உலகின் மிகவும் லாபகரமான பயிர்களில் ஒன்றான பனை எண்ணெயை இங்கு உற்பத்தி செய்வதற்கு மிகப் பெரிய நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. அப்படி நடக்குமானால் மிகவும் மோசமான நிலையிலுள்ள வனப்பகுதிகள் முழுமையாக அழிவுறும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

உலகின் கடைசி இடத்தை காக்க போற்றப்படும் ஒற்றை பெண்

பட மூலாதாரம், WFN

"பனை எண்ணெய் தயாரிப்பை மையமாக கொண்ட இந்த பிரச்சனை உலகிலுள்ள மற்ற காடுகள் அனுபவிக்கும் பிரச்சனையை விட சற்றே சிக்கலானது, வித்தியாசமானது. 'பனை எண்ணெய்யை வாங்காதீர்கள், அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற எண்ணெய்யை வாங்குங்கள்' அல்லது அனைத்தையுமே புறக்கணியுங்கள் என்று கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தை கையாள முடியாது. ஏனெனில், பொதுவாக வெறும் லாபகரமான பயிராக பார்க்கப்படும் பனை எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளதே, தற்போது இதுபோன்ற வனப்பகுதிகளுக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தலுக்கு காரணம்," என்று பர்விசா விளக்குகிறார்.

"பனை எண்ணெய்யின் தேவையையும், உற்பத்தியையும் நிர்வகிப்பதிலுள்ள பிரச்சனையே இதற்கு அடிப்படை காரணம். பனை எண்ணெயை பெரும்பாலும் பயன்படுத்தும் வளர்ந்த நாடுகளை சேர்ந்த மக்கள் குறைந்த விலைக்கு வாங்க நினைப்பதே நிறுவனங்கள் இதுபோன்ற இடங்களில் குறுக்கு வழிகளை பயன்படுத்தி தொழிற்சாலைகளை அமைக்க நினைப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களுக்காக காலத்துக்கேற்றவாறு பணம் கொடுக்க தொடங்கினால் அதுவே மாற்றத்தின் தொடக்கம்," என்ற இந்த விவகாரத்தின் மற்றொரு பக்கத்தை பர்விசா விளக்குகிறார்.

நுகர்வோரின் பங்கு என்ன?

"தகவல்கள் குவிந்துள்ள காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதற்கு முந்தைய காலங்களில் அதிகம் படியுங்கள் அல்லது தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஆனால், இப்போது மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வேறுபட்ட அனுபவங்களை பெறுவதற்கு உறுதி ஏற்கவேண்டுமென்று நான் கேட்டுகொள்கிறேன்."

உலகின் கடைசி இடத்தை காக்க போற்றப்படும் ஒற்றை பெண்

பட மூலாதாரம், PAUL HILTON

"குறிப்பாக சுமத்ரா, அமேசான், மடகாஸ்கர் போன்ற அச்சுறுத்தலின் கீழ் உள்ள இடங்களுக்கு சென்று மக்கள் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். ஏனெனில், நீங்கள் தற்போது இயற்கையாக உள்ள ஓரிடத்திற்கு சென்று அதுகுறித்து தெரிந்துகொண்ட பிறகு, எதிர்காலத்தில் அவ்விடத்திற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன் உங்களால் அதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்."

பிரிட்டனில் இயற்கையை பாதுகாக்க போராடுபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பிற்குரிய 'விட்லே அவார்ட்' என்ற விருதை கடந்த 2016ஆம் ஆண்டு பர்விசா ஃபர்ஹான் வென்றிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :