ஏரல்: மரணம் அடைந்த ஒரு கடலை காடாக மாற்ற முயலும் மக்கள் - வியக்க வைக்கும் முயற்சி

- எழுதியவர், ரஸ்டம் கோபில் & பால் ஹாரிஸ்
- பதவி, பிபிசி உஸ்பெக்
(மத்திய ஆசியாவில் உள்ள ஏரல் கடலை அழித்தது மிகப்பெரிய சூழலியல் பேரழிவு. அழிந்த போன அந்த கடலினுள் உள்ள நச்சுக் கழிவுகள் மிகமோசமான சுகாதார பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இதனை சரி செய்ய வேண்டுமென்றால், பாலையாக மாறிவிட்ட அந்த கடல் பகுதியை சோலையாக மாற்ற வேண்டும். எங்கும் பச்சயம் வாசனை பரப்ப வேண்டும்.)
கரகல்பாக் மக்கள் அப்படியான ஒரு முயற்சியில்தான் இறங்கி இருக்கிறார்கள். அந்த கடற்பரப்பில் லட்சகணக்கான மரங்களை நடும் பணியில் இறங்கி இருக்கிறார்கள். இந்த உன்னத முயற்சி உஸ்பகிஸ்தானில் உள்ள கரகல்பாக் மக்களை காப்பாற்றுமா?
சாட்சியாக நிற்கும் துருப்பிடித்த படகுகள்
அல்மாஸ் டொல்வஸேவுக்கு எழுப்பத்து எட்டு வயது இருக்கும். ஒரு காலத்தில் மீன் பிடிக்க பயன்பட்ட துருப்பிடித்த பெரிய கப்பலை நோக்கி நடந்து செல்கிறார்.
அங்கு நிற்கும் பத்திற்கும் மேற்பட்ட துருப்பிடித்த கப்பல்கள், உடைந்து போன ஒரு கலங்கரை விளக்கம் - இவை அனைத்தும் ஒரு வரலாற்று சாட்சி.

ஒரு காலத்தில் இந்த பகுதி உயிர்ப்போடு இயங்கி இருக்கிறது. மீன்பிடி தொழிலுக்கு ஏரல் கடல் ஆதாரமாக இருந்திருக்கிறது என்ற கதையை இந்த காட்சிகள் விவரிக்கின்றன.
"கரகல்பாக் மக்களின் வரலாறு இந்த கடலோடுதான் தொடங்குகிறது" என்று தன் நினைவுகளை உருதிரட்டி பேச தொடங்குகிறார் அந்த முன்னாள் மீனவர் அல்மாஸ்.
"மீன்பிடிப்பதுதான் இந்தப் பகுதியில் ஒரு தகப்பன் தன் மகனுக்கு சொல்லிதரும் முதல் விஷயம்" என்கிறார்.
அவர் இந்த பகுதி என்று குறிப்பிடுவது மொய்னாக் பகுதியை. இந்த பகுதி கரகல்பக்ஸ்தான் பகுதியின் மத்தியில் இருக்கிறது. உஸ்பகிஸ்தானில் உள்ள முழு தன்னாட்சி இல்லாத ஒரு பகுதி இது.
செழிப்பாக இருந்த காலக்கட்டத்தில், உஸ்பகிஸ்தானில் நுகரப்படும் 98 சதவீத மீனும் இந்தப் பகுதியிலிருந்துதான் சென்றிருக்கிறது.
"இந்த பகுதியில் முதல் முஸ்லிம் கப்பல் கேப்டன் நான்தான். பொதுவாக ரஷ்ய இனத்தினர்தான் கப்பல் கேப்டனாக இருப்பார்கள்" என்று பெருமையாக சொல்கிறார் அல்மாஸ்.
"அப்போது இந்த பகுதியில் 250 கப்பல்கள் இருந்தன. நான் தினமும் 600 முதல் 700 கிலோ வரை மீன் பிடிப்பேன்" என்று அந்த நாட்களை அசைப்போடுகிறார் அல்மாஸ்.
கடல் சுருங்குமா?
கடல் சுருங்குமா? ஆம் சுருங்க தொடங்கியது. ஏரல் கடலில் கலக்கும் இரண்டு நதிகளை 1960 ஆம் ஆண்டு வேறு பக்கம் திருப்பிவிட்டது சோவியத் அரசு . புதிதாக அமைக்கப்பட்ட பருத்தி பண்ணைகளின் பாசனத்திற்காக இவ்வாறாக செய்தது.

பருத்தி உற்பத்தியில் ஒரு பெரும் புரட்சி நிகழ்ந்து கொண்டிருந்த, அதே தருணத்தில் மெல்ல மெல்ல ஏரல் நதியின் பரப்பும் சுருங்க தொடங்கியது. இது ஒரு பிரச்சனையாக கூட அரசு அங்கீகரிக்கவில்லை.
கடல் பரப்பு குறைந்துக் கொண்டே வருவதை அரசுக்கு உணர்த்துவதற்காக. காய்ந்து போன கடற்பரப்பில் கொடிகளை நட்டனர் அப்பகுதி மக்கள்.
நீர் அளவு குறைய குறைய, உப்பின் செறிவு அதிகமாகிக் கொண்டே போனது. இதனால் கடலின் அனைத்து வளங்களும் விஷமானது.
"மீன் வளமும் குறைந்தது. அதைவிட துயரமான ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு நாள் கடலில் நாங்கள் வலை வீசிய போது எங்கள் வலையில் சிக்கியவை அனைத்தும் செத்த மீன்கள்தான். அதன்பின், இளைஞர்கள் அனைவரும் வேறு நாடுகளுக்கு தங்கள் வாழ்வாதாரத்திற்காக செல்ல தொடங்கினர்." என்கிறார் அல்மாஸ் துயர் மிகுந்த குரலில்.
ஏரல் கடலில் அளவு பத்து சதவீதமாக சுருங்கியது. இன்னும் புரிந்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டுமென்றால், ஐர்லாந்து அளவிலான தனது பரப்பை இழந்தது ஏரல் கடல். இதனால், அந்த பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டும் பாதிக்கப்படவில்லை. சூழலியல் மீதும் பெரும் தாக்கத்தையும் இது உண்டாக்கியது.
"பருவநிலை மோசமாகியது. காற்று தூசியால் நிரம்பியது." என்கிறார் அல்மாஸ்.
ஆபத்தில் வாழ்வு
மருத்துவர் யுஸ்டாஸ்பே டொஸிமொவ் மொய்னாக் மருத்துவமனைக்கு 1980 ஆம் ஆண்டு பணிபுரிய வந்தார். அப்போது ஏரல் கடல் எல்லை அந்த மருத்துவமனையிலிருந்து 12 மைல் தூரத்தில் இருந்தது.
"அப்போது இந்த பகுதியில் மூச்சுத் திணறல், காசநோய் மற்றும் சீறுநீரக பிரச்சனைகள் அனைத்தும் பரவலாக இருந்தது." என்கிறார் டொஸிமொவ்.

மேலும் அவர், "சமீபகாலம் வரை, வயிற்றுப் போக்கால் பல குழந்தைகள் இறந்திருக்கின்றனர்" என்கிறார்.
உஸ்பகிஸ்தான், கஜகஸ்தான் என்று தனது பருத்தி உற்பத்தியை விரிவுப்படுத்திய சோவியத் அரசு, பூச்சிக் கொல்லி மற்றும் களைக் கொல்லி மருந்துகள் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கணிக்காமல் போய்விட்டன. நதிகளில் கலந்த அந்த பூச்சிக் கொல்லி விஷம், இறுதியாக ஏரல் கடலில் கலந்து ஒரு கடலுக்கு இரங்கல் பா எழுத காரணமாகிவிட்டது.
இந்த விஷம் அந்தப் பகுதியின் நீர் வளத்தை கெடுத்தது. இதனால் பல பிரச்சனைகள் எழுந்தன.
கடல் வற்ற வற்ற, பருத்தி ஆலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நச்சு ரசாயனங்கள் கடல் படுகையில் படியத் தொடங்கின.
மணற்புயல்களால் இது வளிமண்டலத்தில் கலந்தது. மாசடைந்த இந்த காற்றைதான் அந்தப் பகுதி மக்கள் சுவாசித்தனர்.
இதனால் பலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. புற்று நோயும் பரவலாகியது.
ஓர் ஆய்வானது, இது குறித்து தெளிவாக விளக்குகிறது. அதாவது 1981 - 1991 இடையிலான காலக்கட்டத்தில் இந்தப் பகுதியில் நுரையீரல் புற்றுநோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது என்கிறது அந்த ஆய்வு.
குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகரித்தது என்கிறது மற்றொரு ஆய்வு. அதாவது 1990 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆயிரத்திற்கு 60 - 110 என்ற எண்ணிக்கையில் குழந்தைகள் இறப்பு விகிதம் இருந்ததாக அந்த ஆய்வு விளக்குகிறது. உஸ்பகிஸ்தானில் குழந்தைகள் இறப்பு விகித சராசரி ஆயிரத்திற்கு 48 குழந்தைகள், ரஷ்யாவில் அயிரத்திற்கு 24 குழந்தைகள். இதனுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதன் வீரியம் புரியும்.

பல தசாப்தங்களாக, இந்த தகவலானது அனைவரும் அறிந்த ரகசியமாக இருக்கிறது.
சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்தான் ஏரல் நதியின் மரணம் அதிகாரிகளின் கண்களுக்கு தெரிய தொடங்கியது.
இந்த பிரச்சனையின் வீரியம் புரிந்ததும், அரசும் அதிகாரிகளும் இதற்கான தீர்வை தேடினர். கடல் படுகை முழுவதும் மரங்களை நட முடிவு செய்தனர்.
இந்த முடிவானது கரகல்பாக் மக்களின் நல்வாழ்வில் ஒரு பெரும்பங்காற்றும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மருத்துவர் டொசிமோவ்.
கடற்படுகை காடுகள்
நாங்கள் சென்ற போது, இரண்டு டிராக்டர்கள் ஏரல் கடற்படுகைகளில் பணியாற்றிக் கொண்டு இருந்தன.
பல இளைஞர்கள் அங்கு மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார்கள்.

மெலிதான அகழிகள் கடற்படுகைகளில் வெட்டப்பட்டுள்ளன. டிராக்டர்களில் அமர்ந்து விதைகளை அந்த அகழிகளில் தூவுகிறார்கள் அந்த இளைஞர்கள்.
"மழையோ, வெயிலோ, எது குறித்தும் கவலை இல்லை. எங்களுக்கு இரண்டு வாரங்கள் உள்ளன. இந்த காலக்கட்ட்த்தில் நாங்கள் 2.4 ஏக்கர் பரப்பில் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளோம்." என்கிறார் ஒரு இளைஞர்.

மத்திய ஆசியாவில் பாலை நிலத்தில் வளரும் ஒரு சாக்சல் செடியை அங்கு நடுகிறார்கள்.
முழுமையாக வளர்ந்த ஒரு சாக்சல் மரத்தின் வேர் 10 டன் மண்ணை காக்கும் என்கிறார் காடு வளர்ப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒராஸ்பே.
நடப்பட்ட இரண்டு மரங்களில் ஒன்று பிழைத்துக் கொள்கிறது, உப்பு தண்ணீரையும், வெப்பத்தையும் இது எதிர்கொள்லும் என்பதால்தான் இந்த மரத்தை நாங்கள் நட்டு இருக்கிறோம் என்கிறார் அவர்.
ஆனால், பணிகள் மிக வேகமாக நடக்கின்றன. இதே வேகத்தில் பணிகள் நடந்தால், இங்கு ஒரு காடு உருவாக 150 ஆண்டுகள் ஆகும்.

இதனை ஒராஸ்பெவும் ஒப்புக் கொள்கிறார். "நாங்கள் எங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்" என்கிறார்.
இதற்கு அதிக பணமும், வெளிநாட்டு உதவிகளும் தேவை என்றும் தெரிவிக்கிறார்.
மீனவர் அல்மாஸ் தெரிவித்ததையே ஒராஸ்பேவும் கூறுகிறார், "இறந்த ஏரல் கடலை மீண்டும் உயிர்பிக்க முடியாது. ஆனால், அதனை காடாக்கி சூழலியலையும், அந்த பகுதி மக்களின் உடல்நலத்தையுமாவது காக்க முடியும்" என்கிறார்.
(4 ஜூன் 2018 பிபிசி தமிழில் பிரசுரமான கட்டுரையின் மீள் பதிவு இது)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













