தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் 14417 உதவி எண் நிலை என்ன? பாலியல் புகார்கள் கையாளப்படுவது எப்படி?

பள்ளிக் குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பள்ளிக் குழந்தைகள்
    • எழுதியவர், பாம்பன் மு.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரசு சார்பில் இயங்கி வரும் புகார் மையத்தில் குழந்தைகளின் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூட ஆளில்லாமல் இருப்பதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அரசு தரப்பு சொல்வதும், செயல்பாட்டாளர்கள் முன்வைக்கும் தீர்வுகளும் என்ன?

கல்வி தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் எந்தவிதமான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்து கொள்ள கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு 24 மணி நேர இலவச வழிகாட்டி மையம் தொடங்கப்பட்டது. 14417 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து மாணவர்கள் விளக்கங்களைப் பெறலாம் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

பெரும்பாலும் கல்வி உதவித்தொகை, மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றுக்காக இந்த மையத்துக்கு அழைப்புகள் வருவது வழக்கம்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

பாலியல் புகார்களும் கூறலாம்

தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், கோவையைச் சேர்ந்த ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "கல்வி வழிகாட்டி மையத்துக்கான 14417 என்ற இலவச எண்ணிலேயே மாணவ மாணவிகள் 24 மணி நேரமும் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்த அறிவிப்புக்குப் பிறகு, அதிகமான எண்ணிக்கையில் புகார்கள் வருவதாகவும், குறிப்பாக 'பாலியல் குற்றச்சாட்டுகளுடன்' மாணவிகள் புகாரளிப்பதாகவும் வழிகாட்டி மையத்தைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"ஆறுதல் மட்டுமே தரமுடிகிறது"

அத்துடன், இந்த மையத்தில் தற்போது பணியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லாததால் புகார்களை முறையாகக் கையாள முடியவில்லை என்றும் எல்லா அழைப்புகளுக்கும் பதிலளிக்க இயலவில்லை என்றும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

மேலும் , "இதுவரையில், கல்வி ஆலோசனைகள் மட்டுமே கொடுத்து வந்த அமைப்பால் பாலியல் புகார்களோடு வரும் குற்றச்சாட்டுகளுக்கு வெறும் ஆறுதல் மட்டுமே தரமுடிகிறது" என்றும் பணியாளர்கள் வருத்தத்தைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், "அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஓர் அறிவிப்பா?" என்றும் "காவல்துறை அதிகாரிகள் ஒருவர் கூட இல்லாமல் இந்தக் குழு இருக்கிறதே" என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

"கேள்விக்கு பதிலில்லை"

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இதற்கிடையில், 14417 என்ற புகார் எண்ணை பரவலாக்க வேண்டும் என்றும் பாடப் நூல்களில் பிரசுரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் பேசினார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் அண்ணா நூலகத்தில் நடந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

ஆனால், புகார் மையங்களில் முறையான, உடனடி நீதிக்கான கையாளுகைக்கு தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்கிற கேள்வி இன்னும் கேள்வியாகவே நிற்கிறது.

இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்ற விவரங்களைக் கேட்டு, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோருக்கு பிபிசி தமிழ் அனுப்பிய மின்னஞ்சலுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அவர்களிடம் இருந்து பதில் வந்தால் அது இந்தச் செய்தியில் சேர்க்கப்படும்.

"தயாராகி வருகிறோம்"

பள்ளிக் குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பள்ளிக் குழந்தைகள்

இதுகுறித்து திமுகவின் செய்தித் தொடர்பாளரும், பாலியல் குற்ற வழக்கு நிபுணருமான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, "பாலியல் குற்றங்களை முளையிலேயே கிள்ளி எறிய இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம். ஆனால், இவை இன்னும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 14417 மையத்துக்கு இப்போது நான் அழைத்துப் பேசினேன். உடனடியாக போன் எடுத்த அதிகாரியிடம், அழைப்புகளுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று கேட்டேன்."

"அதற்கு ஒவ்வோர் அழைப்புக்கும் கோரிக்கைக்கும் ஏற்றாற்போல அந்தந்த மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்களுக்கோ, காவல்துறைக்கோ ரகசியமாகத் தகவல் கொடுப்பதாக பதிலளித்தனர்," என்று தெரிவித்தார்.

மேலும் "மையத்தில் ஆட்களை அதிகரிப்பது, குழுக்களில் மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள், இளம்சிறார் நீதிச் சட்ட செயற்பாட்டாளர்களை இணைப்பது போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராக உள்ளனர்" என்றும் தெரிவித்தார்.

ஆள் பற்றாக்குறை குற்றச்சாட்டு?

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமை

14417 சேவை மையத்தின் திட்ட தலைமை இயக்குநர் பால் ராபின்சனிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, "2018-லிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் 14417 அழைப்பு மையத்தில் பாலியல் புகார்களையும் கையாளமுடியும் என்ற வரைவை முன்பே அமைச்சரிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கியிருந்தோம்."

"இதற்கிடையில், எதிர்பாராதவிதமாக கோவை, கரூர் ஆகிய ஊர்களில் நடந்த நிகழ்வுகள் காரணமாக, அமைச்சர் முன்கூட்டியே வெளியிட வேண்டியதாகிவிட்டது. தொடங்கும்போது ஆறு மனநல ஆலோசகர்கள், 14 டெலிகாலர்கள் என இருந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று ஆலோசகர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆள் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டு தவறானது," என்று தெரிவித்தார்.

மேலும் "எங்கள் கையாளும் முறைமையில் மாற்றம் வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, மற்றும் காவல்துறைக்கும் இனி தகவல் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்" என்றும் தெரிவித்தார்.

சமவயது குழு முறை

அதேசமயம், மீண்டும் மீண்டும் புகார்களை பெற மையங்களையே அறிவிக்கிறார்கள். தீர்வுக்கான வழி என்ன, என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர்கள்

இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் சங்க, மாநிலத்தலைவர், பி.கே.இளமாறன், "அதிகாரிகளை வைத்து மாணவர்களை கையாள முடியும் என்பதே தவறு. தீர்வு என்றால், பள்ளிகளில் ஒத்த வயதுள்ள மாணவர் குழுக்கள்தான் தேவை. உறவுகளிடம் சொல்ல பயப்படுவதை, ஒத்த வயதுள்ளவர்களிடம் பெரும்பாலும் மாணவர்கள் சொல்வார்கள். சங்கடம் ஏதுமின்றி உடனடியாக தெரிவதற்கும் இது வசதியாக இருக்கும்."

"இக்குழு வாரத்திற்கு ஒருமுறை கூடி பள்ளியிலேயே வெளிப்படையாக பேசுவது மனதளவில் மாணவர்களிடையே தைரியத்தை வளர்க்கும். மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவார்கள். இந்தக் குழுவை தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் குழு கண்காணிக்க வேண்டும்."

"முதற்கட்டமாக, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நன்னெறி கல்வியினை ஒரு பாடமாகவே அறிமுகப்படுத்த வேண்டும். வட்டாரக்கல்வி அளவில் மாநிலம் முழுவதும் உளவியல் நிபுணர்களை நியமனம் செய்யப் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

"தொடர் கண்காணிப்பு அவசியம்"

சட்டம்

பட மூலாதாரம், Getty Images

பள்ளிகளில் உள்விவகாரப் புகார் குழுக்கள் (Internal Complaint Committee) அமைப்பது தொடர்பாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் கல்வியாளர் ஈஸ்வரனிடம் கேட்டது பிபிசி தமிழ். "எல்லாப் பள்ளிகளிலும் இந்தக் குழு அமைக்கப்பட வேண்டும். குழுவில் 50% பெண் ஆசிரியர்களும், உள்ளூர் சமூக செயல்பாட்டாளரும், மாணவ மாணவிகளும் இடம்பெற வேண்டும்.

இந்தக் குழுவுக்கு வரும் புகார்கள் மற்றும் அது கையாளப்பட்ட விதம் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை முறையாக ஆவணப்படுத்தப்பட்டு சமூகநலத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்," என்கிறார் அவர்.

மாணவர்களிடையே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குழந்தைகள் மத்தியில் இணக்கமான சூழல் உருவாக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த முறைமை தொடர்வதை அரசுத்தரப்பு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் ஈஸ்வரன்.

"அம்மா, அப்பா, நண்பர்கள் என யாரிடமும் சொல்லாத குழந்தை அரசு சொல்லும் ஒரு திடீர் எண்ணில் மட்டும் எப்படி சொல்லும்? அதற்கு இணக்கமான சூழல் வேண்டும்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :