தோலும் தோலும் உரசாவிட்டால் பாலியல் குற்றமில்லை என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் - முழு விவரம்

A campaign against child sexual abuse in India

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது, இந்த விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகின்றன

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட சிறுமியுடன் "தோலுடன் தோல் தொடர்பு கொள்ளவில்லை" என்பதால் அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி முன்பு தீர்ப்பளித்திருந்தது மும்பை உயர் நீதிமன்றம். சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பிறப்பித்த இந்த தீர்ப்பு நாடு தழுவிய அளவில் பரவலான கவனத்தை ஈர்த்தது.

பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இது ஒரு "ஆபத்தான முன்னுதாரணத்தை" அமைக்கும் என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.

இதுபோன்ற தீர்ப்பால் தாங்கள் அனுபவிக்க நேரும் துஷ்பிரயோகம் குறித்து புகாரளிக்கும் ஊக்கத்தை குழந்தைகள் அல்லது சிறார்கள் இழப்பார்கள் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், எஸ். ரவீந்திரா, பேலா எம். திரிவேதி அடங்கிய அமர்வு இது தொடர்பான வழக்கை விசாரித்து வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், "நீதிமன்றங்கள் பாலியல் நோக்கத்தைப் பார்க்க வேண்டுமே தவிர தோலுக்கும் தோலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை அல்ல," என்று கூறியது.

"தோலும் தோலும் தொடர்புபடுதல் என்ற வகையில் ஒரு பாலியல் குற்றத்தை சுருக்குவது ஒரு குறுகிய மற்றும் மிதமிஞ்சிய விளக்கமாக மட்டும் அமையாமல் சட்டப்பிரிவை அபத்தமாக பொருள்பட்டுத் கொள்வதாகவும் அமையும்" என்று சட்ட இணையதளமான லைவ்லா தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பயன்படுத்திய வலுவான வார்த்தைகளின்படி, மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பு 'உணர்ச்சியற்ற முறையில் பாலியல் நடத்தையை சட்டபூர்வமாக்கியுள்ளது' என்றும், 'சட்டத்தின் நோக்கம் குற்றவாளியை சட்டத்தின் விதிகளுக்கு வெளியே பதுங்கி கொள்ள அனுமதித்து விடக்கூடாது' என்றும் கூறப்பட்டுள்ளது.

வழக்கு என்ன?

2016ஆம் ஆண்டு டிசம்பரில், 39 வயது நபர் ஒருவர் 12 வயது சிறுமியை தடவி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டார். அந்த சிறுமியின் தாய், "குற்றம்சாட்டப்பட்ட நபர் தனது மகளை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமியின் மார்பகத்தை அழுத்தியும், அவளது பைஜாமாவின் அடிப்பகுதியை அகற்றவும் முயன்றார்," என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த நபர் மீது போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்தது.

ஆனால் ஜனவரி 12ஆம் தேதியன்று, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா, "சிறுமியின் மார்பகத்தை அகற்றாமல் அழுத்துவது பாலியல் வன்கொடுமை அல்ல, ஏனெனில் தோலுக்கும் தோலுக்கும் தொடர்பு இல்லை, மேலும் இது பாலியல் வன்கொடுமைக்கான குறைந்த குற்றச்சாட்டாகவே அமையும்," என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார். அத்துடன் வழக்கில் இருந்தும் அந்த நபரை நீதிபதி விடுவித்தார்.

An adult holding a child's hand

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயர் நீதிமன்ற பெண் நீதிபதியின் இந்தத் தீர்ப்பு குழந்தைகள் சுரண்டப்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்தன.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பரவலான கண்டனத்தைப் பெற்றது. இதையடுத்து அந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை ஜனவரி 27ஆம் தேதி பரிசீலித்த இந்திய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்வரை உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட நபர் அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மூன்று ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

வழக்கின் சவால்கள் என்ன?

A campaign poster on child abuse

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் போக்சோ சட்டத்தின் கீழ் 43,000 குற்றங்கள் இந்தியாவில் பதிவானதாக கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்களில் ஒருவரான இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், உயர் நீதிமன்ற தீர்ப்பை "மூர்க்கத்தனமானது" என்று அழைத்தார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு மாற்றப்படாவிட்டால், அது "மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்" என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தபோது குறிப்பிட்டார்.

மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றம் என்பது தோலுடன் தோலுடன் தொடர்பு கொள்வதற்கு "அவசியமான மூலப்பொருள் அல்ல" என்று அவர் வாதிட்டார்.

"இது அனுமதிக்கப்படுமானால் நாளையே, ஒரு நபர் ஒரு ஜோடி அறுவை சிகிச்சை கையுறைகளை அணிந்து, ஒரு பெண்ணின் முழு உடலையும் தடவி உணர்ந்தால், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அவர் பாலியல் வன்கொடுமைக்காக தண்டிக்கப்பட உகந்தவர் ஆக மாட்டார். அந்த வகையில் அது ஒரு மூர்க்கத்தனமான தீர்ப்பு," என்று அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறினார்.

"குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுமியின் சல்வாரை [பைஜாமா கீழாடை] கீழே இறக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டபோதும், அவருக்கு பிணை வழங்கப்பட்டது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

செயல்பாட்டாளர்கள் எதிர்வினை

An image depicting child abuse

பட மூலாதாரம், iStock

ஒரு பெண் நீதிபதியால் வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பு, "அருவருப்பானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் விமர்சித்தனர்.

பெரும்பாலும் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ள முடியாத குழந்தைகளை அணுகும் விதத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பு குறைபாடுடையதாக அமைந்து விட்டது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகும் வேளையில், நாட்டில் பாலியல் சுரண்டலுக்கு குழந்தைகள் ஆளாகும் ஆபத்தை இது அதிகரிக்கச் செய்யலாம் என்று பலரு கவலை தெரிவித்தனர்.

2007 ஆம் ஆண்டின் அரசாங்க ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் இருவர் உடல்ரீதியாக தவறாக நடத்தப்பட்டுள்ளனர் மற்றும் கணக்கெடுக்கப்பட்ட சுமார் 12,300 குழந்தைகளில் 53% பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டதாக புகார் பதிவாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் போக்சோ சட்டத்தின் கீழ் 43,000 குற்றங்கள் இந்தியாவில் பதிவானதாக கூறியுள்ளது. அதாவது சராசரியாக ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு வழக்கு பதிவாவதாக அர்த்தம்.

மேலும், துஷ்பிரயோகம் செய்தவர்கள் குடும்ப அங்கத்தினராகவோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ இருந்தால் கூட அந்த சம்பவங்கள் புகாராக பதிவாவதில்லை. இதனால், அரசுத்துறை பதிவு செய்த எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகம் என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :