காஷ்மீர் பூஞ்ச் என்கவுன்டர்: இறந்த படையினரின் குடும்பத்தினர் எழுப்பும் விடையில்லா கேள்விகள்

ராணுவம்

பட மூலாதாரம், TWITTER/ADGPI

    • எழுதியவர், ராகவேந்திர ராவ் & மோஹித் கந்தாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்கள்

"எங்கள் மனதில் உள்ள கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அங்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று கூட நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. என்கவுன்டர் நீண்ட நாட்களுக்கு நீடித்தது விசித்திரமாக உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபடவில்லை. யாரும் கொல்லப்படவில்லை. இந்த என்கவுன்டர் பற்றி தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அரசு ஏன் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை?"

அக்டோபர் 11-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் கஜன் சிங்கின் நெருங்கிய உறவினர் தில்பாக் சிங் கூறுவது இது. பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் காடுகளில் நடந்த இந்த என்கவுன்டரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த நாயக் சுபேதார் உட்பட 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 14 அன்று, அதே பகுதிக்கு அருகிலுள்ள மெந்தெர் என்ற இடத்தில் நடந்த மற்றொரு மோதலில் ஒரு ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி உட்பட மேலும் நான்கு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இரண்டு மோதல்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் தீவிரவாதிகள் பிடிபட்டது அல்லது கொல்லப்பட்டது குறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் இல்லை.

அக்டோபர் 11 என்கவுன்டரில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் மன்தீப் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் குர்விந்தர் சிங் , "குடும்பத்தினர் மனதில் பல கேள்விகள் உள்ளன. இது எப்படி நடந்தது என்பதுபற்றித்தான் வீட்டில் பேச்சு நடக்கிறது.

அரசு மற்றும் அரசு அமைப்புகள் முழுமையாக தகவல் தருவதில்லை. இந்த சம்பவம் நடந்த பிறகும் என்கவுன்டர் தொடர்ந்தது. இதைப் பற்றி எங்கள் மனதில் எழும் கேள்விகள் அவர்களின் பதில் கிடைக்கும் வரை ஓயாது,"என்றார்.

நான்கு வாரங்கள் நீடித்த நடவடிக்கை

இந்த இரண்டு மோதல்களுக்குப்பிறகு, இந்திய ராணுவம் பூஞ்ச் பகுதியில் நடவடிக்கையைத் தொடங்கியது. இது சுமார் நான்கு வாரங்கள் நீடித்தது.

ஜேசிஓ உட்பட ஐந்து வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அக்டோபர் 11 ஆம் தேதி சூரன்கோட் காட்டில் தொடங்கிய இந்த நடவடிக்கை, தப்பியோடிய தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக, பின்னர் மெந்தெர் வரை நீட்டிக்கப்பட்டது.

ராணுவத்தின் நடவடிக்கை நடந்த பகுதிகள் 10 முதல் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள அடர்ந்த காடாகும்.

இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர் நடந்து வருவதாக குறைந்தது மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு செய்திகள் வெளியாயின. இந்த என்கவுண்டர்தான் இதுவரை நடந்தவைகளில் மிகவும் நீண்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால், இத்தனை நாட்கள் ஆகியும் தீவிரவாதிகள் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு இந்த என்கவுன்டர் நிறுத்தப்பட்டது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் சுதீர் சாமோலி என்கவுன்டர் நிறுத்தப்பட்டதை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். ஆனால் பூஞ்ச் வனப்பகுதியில் இன்னும் தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார். என்கவுன்டர் என்றைக்கு நிறுத்தப்பட்டது என்பதை இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளரிடம் பிபிசி கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார். ஆனால், இந்த மோதல்கள் அடர்ந்த பெரிய வனப் பகுதியில் நடந்ததாகவும், எதிரில் இருந்து யாரேனும் துப்பாக்கியால் சுட்டால் ஒழிய அவர்களை தேடிக்கண்டுபிடிப்பது எளிதல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும், என்கவுன்டரின்போது தாக்குதல் நடத்தியவர்களுடன் எந்த தொடர்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

என்கவுன்டர் தொடர்பான சில கேள்விகள்

ராணுவம்

பட மூலாதாரம், ANI

இந்த நிலையில் என்கவுன்டர் தொடர்பான பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.

ரஜோரி-பூஞ்ச் ரேஞ்ச் துணைக் காவல் கண்காணிப்பாளர் விவேக் குப்தா சில வாரங்களுக்கு முன்பு, "இரண்டு முதல் மூன்று மாதங்களாக அப்பகுதியில், ஊடுருவல்காரர்கள் இருந்தனர். ஜூலை 8 முதல் அப்பகுதியில் நடவடிக்கை நடந்து வருகிறது" என்றார்.

ஊடுருவல்காரர்கள் இரண்டு மூன்று மாதங்களாக அப்பகுதியில் இருந்திருந்தால், அவர்கள் காடுகளில் மறைவிடங்களை உருவாக்கி இருக்கமாட்டார்களா?

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக பலத்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் இந்திய ராணுவத்தினர் பலர் உயிரிழந்துள்ளனர், ஆனால் ஏன் ஓர் ஊடுருவல்காரரைக் கூட கொல்ல முடியவில்லை?

பெரிய தேடுதல் வேட்டைக்குப்பிறகு பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தது என்ன?

மற்றொரு பெரிய கேள்வி என்னவென்றால், ஊடுருவல்காரர்கள் இன்னமும் காடுகளில் மறைந்திருந்தால், அவர்களுக்கு எங்கிருந்து தளவாடங்கள் கிடைக்கின்றன? பாதுகாப்புப் படையினரின் கண்களுக்கு தென்படாமல் இருப்பதை எப்படி உறுதிசெய்கிறார்கள்?

என்கவுன்டர் தொடங்கியதில் இருந்தே பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்திருந்தனர். அப்படியானால், பாதுகாப்புப் படையினரை ஏமாற்றி ஊடுருவல்காரர்கள் தப்புவது சாத்தியமா?

என்கவுன்டரில் விசாரணை கைதியின் மரணம்

ராணுவ வீரர்

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/AFP

இதற்கிடையில், என்கவுன்டரின் போது ஒரு விசாரணை கைதி தோட்டா காயங்களால் இறந்ததாக அக்டோபர் 24 அன்று செய்தி வந்தது.

தீவிரவாதிகளின் மறைவிடத்தை அடையாளம் காணும் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் தீவிரவாதி ஜியா முஸ்தஃபா, பட்டா துரியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காஷ்மீரி பண்டிட்கள் மீதான நதிமர்க் படுகொலைகளுக்கு முக்கிய திட்டம் தீட்டியவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் ஜியா முஸ்தஃபா கைது செய்யப்பட்டார். முஸ்தஃபா கடந்த 18 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தார்.

ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்திற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சிறைக்குள் இருந்தபடியே முஸ்தஃபா தொடர்பு கொண்டிருந்ததாகவும், காடுகளில் பாதையை கண்டுபிடிக்க இந்த ஊடுருவல்காரர்களுக்கு முஸ்தஃபா உதவினார் என்றும் காவல்துறை தெரிவித்தது..

காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் அடங்கிய கூட்டுக் குழு மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது முஸ்தஃபா இறந்தார் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 2 போலீசார் மற்றும் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தனர்.

ஒருபுறம் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பல நாட்களாக எந்த நேரடி மோதலும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நேருக்கு நேர் மோதல் நிகழ்ந்தபோது விசாரணை கைதி கொல்லப்பட்டுள்ளார்.

முஸ்தஃபாவின் மரணத்துடன், 2003 நதிமர்க் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையும் முடிவுக்கு வந்துவிட்டதாக, அவரின் மரணத்திற்குப் பிறகு பல ஊடக செய்திகள் சுட்டிக்காட்டின.

பூஞ்ச் பகுதியில் இருந்து ஊடுருவல்காரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் நுழைந்துவிட்டார்களா?

ராணுவ வீரர்

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/AFP

இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி.அஸ்தானா, ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது ஆபரேஷன் விஜய்யிலும் அவர் பங்கேற்றார்.

"பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு பொது மக்களின் ஆதரவு இல்லை. பீர் பஞ்சால் மலைகள் வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் நுழைவதற்கு இந்த பகுதியை பயங்கரவாதிகள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த பயங்கரவாதிகள் பீர் பஞ்சால் பகுதியை கடந்து தெற்கு காஷ்மீருக்குள் நுழைந்து அங்குள்ள மக்களுடன் கலந்து மறைந்திருக்க வாய்ப்பு உள்ளது," என்கிறார் மேஜர் ஜெனரல் அஸ்தானா.

காஷ்மீர் பள்ளத்தாக்கை விட ஜம்முவில் உள்ள பூஞ்ச் போன்ற பகுதிகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், இதை சாதகமாக பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்த வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் நுழைய முயற்சிப்பதாகவும் மேஜர் ஜெனரல் அஸ்தானா கூறினார்.

பல வாரங்களாக நீடித்த ராணுவ நடவடிக்கை குறித்து பேசிய அஸ்தானா, இந்த காடுகளில் தீவிரவாதிகள் முகாம்களை அமைக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம் என்றும் மேலும் தேடுதல் பணி வனப்பகுதியில் நடப்பதால் அதற்கு அதிக காலம் ஆவது நியாமானதே என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் மக்களின் ஆதரவு?

ராணுவம்

பட மூலாதாரம், MOHIT KANDHARI/BBC

ஜம்முவில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி போன்ற பகுதிகளில் பொது மக்களின் ஆதரவை தீவிரவாதிகள் பெறுவதில்லை என்று பாதுகாப்பு அமைப்புகள் நம்புகின்றன.

ஆனால் இந்த சமீபத்திய என்கவுன்டருக்குப் பிறகு, ஊடுருவல்காரர்களுக்கு உள்ளூர் மக்கள் தங்குமிடம் மற்றும் தளவாடங்களை வழங்கினார்களா என்பதையும் பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தெர் தாலுகாவில் பட்டா துரியனின் அடர்ந்த காடுகளில் ஊடுருவிய ஒரு குழுவிற்கு தளவாட உதவி வழங்கியதற்காக மொத்தம் நான்கு பேரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது என்று பிபிசிக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

"இந்த நடவடிக்கையின் போது, இரண்டு பெண்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் யாசிர் அராஃபத், குர்ஷீத் அகமது, வாஹித் இக்பால் மற்றும் மற்றொருவர் ," என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தையின்பேரில் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் பட்டா துரியனில் வசிப்பவர்கள் என்றும், அவர்களில் ஒருவர் 16 வயதுக்கு குறைவானவர் என்பதால், அவரது பெயரைக் குறிப்பிடாமல், மற்றொருவர் என்று கூறப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி, தூண்டுதல் மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆயுத தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாசிர் அராஃபத், செளதி அரேபியாவுக்குச் செல்லும் வழியில் காத்மாண்டுவில் இருந்து அக்டோபர் 25 ஆம் தேதி பிடிபட்டார் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூறுகிறது. அராஃபத் செளதி அரேபியாவில் பணிபுரிந்து வந்ததாகவும், ஊடுருவல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டா துரியன் காடுகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு யாசர் அராஃபத், உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

2003ஐ நினைவுபடுத்துகிறதா?

ராணுவம்

பட மூலாதாரம், ANI

இந்த என்கவுண்டர், பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை மணியை எழுப்பியதுடன், 2003ல் பூஞ்ச் திடீரென தீவிரவாதத்தின் கோட்டையாக உருவெடுத்து, தீவிரவாதிகளை ஒழிக்க ஆபரேஷன் "சர்ப் வினாஷ்" தொடங்கப்பட்டதையும் நினைவுபடுத்தியுள்ளது.

1999 கார்கில் போருக்கு பிறகில் இருந்து, டஜன் கணக்கான பாகிஸ்தான் தீவிரவாதிகள் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக ஊடுருவி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சூரன்கோட்டில் உள்ள ஹில்காகாவில் முகாமிடத் தொடங்கினர்.

2003 ஆம் ஆண்டுக்குள், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஹில்காக்காவை வலுப்படுத்தி, பல மாதங்களுக்கான உணவுப் பொருட்களை சேகரித்தனர்.

இறுதியில், இரண்டு வாரங்கள் நீடித்த "சர்ப் வினாஷ்" நடவடிக்கையின் போது இந்திய ராணுவம், 62 தீவிரவாதிகளைக் கொன்று ஏராளமான வெடிமருந்து பொருட்களையும் கைப்பற்றியது.

அக்டோபர் 11, 14 ஆகிய தேதிகளில் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் எண்ணிக்கை 6 முதல் 8 வரை மட்டுமே என்று பாதுகாப்புப் படையினர் நம்புகிறார்கள். ஆனால் இந்த ஊடுருவல்காரர்கள் இதுவரை இந்திய பாதுகாப்புப் படையினரிடம் சிக்காமல் இருப்பது பற்றி பல கேள்விகள் எழுந்துள்ளன.

ராணுவத்தில் சேவையாற்றிய மகன்களை இழந்த சோகத்தில் மூழ்கியிருக்கும் ஒன்பது குடும்பங்கள், இந்தக்கேள்விகளுக்கான பதில்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

(மோஹித் கந்தாரியின் உள்ளீடுகளுடன்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :