'ஆண்ட பரம்பரையில் வந்த நாம் அடுத்தவர்களை துதிபாடுகிறோம்' - ராமதாஸ்

ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக வேண்டும். கடலூரில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால், இந்த பதவிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மாடு மேய்க்கும் சிறுவனான, படிக்காத ஒருவனுக்கு இந்த மாவட்ட பொறுப்புகளை கொடுத்துவிடுவேன்," என்று கடலூரில் நடைபெற்ற பாமக ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

கடலூர் மாவட்ட பாமக ஒருங்கிணைந்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் மேலும் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வெற்றி பெறாமல் செய்தவர்கள் நம்முடைய கட்சிக்காரர்கள். அதிலும் பொறுப்பில் இருக்கிறவர்கள் மற்றும் இருந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஏன் எல்லா இடங்களிலும் வேட்பாளர்கள் போட்டியிடவில்லை? விலை போனோமா? விட்டுக்கொடுத்தோமா? அல்லது உள்ளூர் புரிந்துணர்வு (Local understanding) செய்வது அதாவது காட்டிக் கொடுப்பது, கையூட்டு வாங்குவது, பணம் வாங்குவது, பணம் பறிப்பது என்று செயல்பட்டார்களா?" என்று பேசினார்.

"எல்லா வார்டுகளிலும், ஊர்களிலும் ஆட்களை நிறுத்துவதற்கு பஞ்சமா? வேட்பாளரை நிறுத்த முடியவில்லை என்றால் எதற்கு மாவட்ட பதவி? எதற்கு ஒன்றிய பதவி? எதற்கு மாநில பதவி? எல்லா இடத்திலும் நிறுத்துவதற்கு ஆட்கள் இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கட்சி பதவி தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.

"இனி வருங்காலத்தில் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும். ஒரு தொகுதியில் ஒரு லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீடு வீடாக, திண்ணை திண்ணையாக சென்று ஒவ்வொரு வாக்காளரையும் அணுகி, நாம் தமிழ்நாட்டை ஆள வேண்டும், அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்று பிரசாரம் செய்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால், இந்த பதவிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்."

பாமக

"இல்லையென்றால் மாடு மேய்க்கும் சிறுவனான ஒரு படிக்காதவனுக்கு இந்த மாவட்ட பொறுப்புகளை கொடுத்துவிடுவேன். பூத்துக்கு 1,000 ஓட்டுகள் எனத் தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும். நீங்கள் வந்த வழி ஆண்ட பரம்பரை. உங்களது முன்னோர்கள் ஆண்டவர்கள், படை நடத்தி பார் ஆண்டவர்கள், மன்னர்களாக இருந்தவர்கள், அவர்களது வழி வழியாக வந்த சிங்க குட்டிகள்தான் நீங்கள். இன்றைக்கு எல்லாவற்றையும் இழந்து, செங்கோலை இழந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வராமல் இன்றைக்கு அடுத்தவர்களை நாம் துதி பாடிக்கொண்டிருகிறோம்."

"1949ல் திமுக ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவது தேர்தலில் ஆட்சியைப் பிடித்தனர். இன்று வரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த கட்சி 2016ல் தனியாக நிற்கும் போது வெறும் 23 லட்சம் வாக்குகளையே பெற்று இருக்கிறோம். அதற்கு தலைவர், நாம் 5.6% வாக்குகளைப் பெற்று 3வது பெரிய கட்சி எனச் சொல்கிறார். எனக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது," என்றார் ராமதாஸ்.

உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன். வயதானவர்கள் பேசத்தான் முடியும். இனி இந்த கட்சி இளைஞர்களை நம்பித்தான் உள்ளது என்று பேசினார் ராமதாஸ்.

ராமதாஸ்

தொடர்ந்து பேசிய அவர், "கடலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லி இருந்தால் அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து இருப்பேன். தமிழ்நாட்டில் 60 இடங்களில் சுலபமாக வெற்றி பெற்றால் அன்புமணி ராமதாஸ் முதல்வராக முடியும்," என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், "நாம் யாருக்கு போராடி இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தோமோ அவர்கள் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு மேல் முறையீடு செய்து சரியாகவே செய்கிறது. நல்ல வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக நம்பலாம்.

தமிழ்நாட்டில் அன்புமணி போல ஒரு திறமையானவர் யாரும் இல்லை. ஏன் மக்கள் ஆட்சியைக் கொடுக்க தயங்குகிறார்கள்? அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது உங்கள் கையில் உள்ளது. அன்புமணியை கோட்டையில் அமர வைப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மேடையில் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :