பரம்வீர் சிங்: காணாமல் போன முன்னாள் மும்பை போலீஸ் ஆணையர் மீண்டும் பொது வெளியில் தோன்றினார்

பட மூலாதாரம், ASHISH RAJE
பல மாதங்களாக காணாமல் போயிருந்த மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் பரம்வீர் சிங், மீண்டும் பொதுவெளியில் தோன்றினார்.
மகாரஷ்டிர மாநில உள்துறை அமைச்சராக இருந்த அணில் தேஷ்முக் வணிகர்களிடம் பணம் வசூலித்துக் கொடுக்க போலீசுக்கு இலக்கு நிர்ணயித்ததாக இவர் சுமத்திய குற்றச்சாட்டு மகாராஷ்டிர அரசியலில் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதையடுத்து அதிகாரமற்ற வேறு பதவிக்கு மாற்றப்பட்ட பரம்வீர்சிங் திடீரென காணாமல் போனார்.
59 வயதான பரம்வீர் சிங், நவம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை ஒரு காவல் நிலையத்துக்கு வந்தார்.
நவம்பர் 22ஆம் தேதி, கைது செய்யப்படுவதிலிருந்து அவரைப் பாதுகாப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கூறியது உச்சநீதிமன்றம். அதன் பிறகுதான் பரம்வீர் சிங் வெளியே வந்துள்ளார். மே 2021-க்குப் பிறகு பரம்வீர் சிங் பொதுவெளியில் காணப்படாமல் இருந்தார்.
மே மாதத்திலிருந்து அவர் எங்கு இருந்தார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை, ஆனால் மகாராஷ்டிர மாநில அரசின் நடவடிக்கைக்கு பயந்து, அவர் இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்தார் என அவரது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.
பரம்வீர் சிங் சண்டிகர் நகரத்தில் இருப்பதாகவும், அங்கு அவருக்கு ஒரு சொந்த குடும்ப வீடு இருப்பதாகவும், விரைவில் மும்பை திரும்புவார் என்றும் பல்வேறு செய்தி சேனல்கள் புதன்கிழமை செய்தி கூறின.
காவல்துறை அதிகாரி பரம்வீர் சிங் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், ஹோட்டல் அதிபர்கள், புக்கிகள் ஐந்து வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.
மகாராஷ்டிர அரசு இந்த வழக்குகள் தொடர்பாக பரம்வீரை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது. அக்குழு முன் ஆஜராக பரம்வீர் சிங் மறுத்துவிட்டார். ஆஜராவதற்கு பதிலாக அவரது வழக்குரைஞர்கள் மகாராஷ்டிர அரசின் விசாரணைக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
பரம்வீர் சிங் தரப்பில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர்கள், விசாரணையை மகாராஷ்டிர அரசிடமிருந்து, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றுமாறு கோரினர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, பரம்வீர் சிங் மற்றும் அனில் தேஷ்முக்குக்கு இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் சுவாரஸ்யமடைந்து வருவதாகக் கூறினர்.
முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகில் வெடிபொருளோடு ஒரு எஸ்.யூ.வி வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் மும்பை நகர காவல்துறை ஆணையர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த எஸ்.யூ.வி காரின் உரிமையாளரின் உடல் கடலில் கரை ஒதுங்கிய போது விவகாரம் மேலும் சிக்கலானது.
அதன் பிறகு மும்பை காவல்துறை குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை கைது செய்தது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை. சில தினங்களுக்குப் பிறகு பரம்வீர் சிங் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மகாராஷ்டிராவின் உள்ளூர் காவல் படைக்கு மாற்றப்பட்டார். அப்படைக்கு போதுமான நிதி ஆதாரங்கள் வழங்கப்படுவதில்லை, மேலும் அப்படை காவல் துறைக்கு உதவும் ஒரு படை என்பது குறிப்பிடத்தக்கது.
பரம்வீர் சிங்கின் தலைமையின் கீழ் பணியாற்றிய அதிகாரியின் மிகப்பெரிய தவறால்தான் அவருக்கு பணிமாற்றம் வழங்கப்பட்டதாக கூறினார் அப்போதைய மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்.
பரம்வீர் சிங் தன் புதிய பணியில் இணைவதற்கு முன், அனில் தேஷ்முக் பணம் கேட்டு மிரட்டியதாகவும், ஊழலில் ஈடுபட்டதாகவும் அரசுக்கு கடிதம் எழுதினார். தான் ஊழலில் ஈடுபடவில்லை என்று கூறிய போதும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார் அனில்.
மே மாதம் பரம்வீர் சிங் மருத்துவ விடுப்பு எடுத்தார், மேலும் இரு முறை தன் விடுப்பை நீட்டித்தார். அதன் பிறகு அவரைக் காணவில்லை, அவரது குடும்பத்தினருக்குக் கூட அவர் எங்கு இருந்தார் என்கிற விவரங்கள் தெரியவில்லை என்பது போலத் தோன்றியது.
பிற செய்திகள்:
- 'இலங்கையில் மனித உரிமை மீறல்கள்' - பயிற்சியை நிறுத்த ஸ்காட்லாந்து போலீஸ் முடிவு
- 50 பிறழ்வுகளோடு உலகை அச்சுறுத்தும் B.1.1.529 கொரோனா திரிபு - ஆபத்துகள் என்ன?
- கலைந்து போகும் காதல்: அண்டரண்டப் பறவைகளிடம் அதிகரிக்கும் 'மணமுறிவு'
- வீரப்பன் அண்ணன் மாதையனை விடுதலை செய்ய 34 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் சிக்கல்
- பறக்கும் மர்மப் பொருள்கள் வேற்றுக்கிரக வேலையா? ஆராய குழு அமைத்த அமெரிக்க ராணுவம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












