மும்பை காவல்துறை முன்னாள் கமிஷனர் பரம்வீர் சிங் எங்கே? நீடிக்கும் மர்மம்

பரம்வீர் சிங்

பட மூலாதாரம், Ashish Raje

படக்குறிப்பு, மே மாத தொடக்கத்தில் இருந்து பரம்வீர் சிங்கை காணவில்லை
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் & மயங்க் பகவத்
    • பதவி, பிபிசி நியூஸ்

அக்டோபர் 1 ஆம் தேதி, இந்திய அதிகாரிகள் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டனர். நாட்டின் வணிகத் தலைநகர் என்று வருணிக்கப்படும் மும்பையின் முன்னாள் காவல்துறைத் தலைவரைக் காணவில்லை என்பதுதான் அது.

துணிச்சல் மிகுந்தவர் என்று அறியப்படும் பரம்வீர் சிங், ஏறக்குறைய இரண்டாடுகளுக்கு முன்பு 45,000 பேர் கொண்ட மும்பை காவல்துறையின் தலைமை பொறுப்பிற்கு உயர்த்தப்பட்டார்.

இப்போது 59 வயதாகும் பரம்வீர் சிங்கை, அவரது அலுவலகம், மும்பையில் உள்ள அவரது அடுக்குமாடிக்குடியிருப்பு அல்லது 1,600 கிமீ (994 மைல்கள்) தொலைவில் இருக்கும் சண்டிகரில் உள்ள அவரது பூர்வீக வீடு என்று எங்குமே காணவில்லை.

காவல்துறை தங்களில் ஒருவரைக் கண்டுபிடிக்கும் வேட்டையைத் தொடங்கி இருக்கும் நிலையில், அவருடன் மும்பையில் வசித்த மனைவி மற்றும் மகள், வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் மற்றும் அவரது வழக்குரைஞர்கள், அவர் இருக்கும் இடம் தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர்.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே கேட்பாரில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி. வகை காரில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்.

அந்தக் காரினை அங்கு நிறுதியது யார் என்ற சிக்கலான விவகாரத்திலிருந்து இவை அனைத்தும் தொடங்கியது. அடுத்த சில நாள்களில், வாகனத்தின் உரிமையாளர் என்று சொல்லப்படுபவரின் சடலம் மும்பை கடற்கரையில் கரை ஒதுங்கியது. அவர் கொலை செய்யப்பட்டு , உடல் தண்ணீரில் வீசப்பட்டதாக காவல்துறை பின்னர் கண்டுபிடித்தது.

இறந்தவருக்குத் தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டபோது விஷயம் மேலும் குழப்பமானது. அம்பானி வீட்டுக்கு வெளியே வெடி பொருளுடன் காரை நிறுத்தும் திட்டம், வண்டி உரிமையாளரைக் கொல்லும் திட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அதி உயர் குற்றப்பிரிவின் உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளரான சச்சின் வேஸ் இருந்ததாக இந்த வழக்கைப் புலன்விசாரணை செய்யும் அதிகாரிகள் நினைக்கிறார்கள். வேஸ் இந்தக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மார்ச் மாதம் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்ட பரம்வீர் சிங், மஹாராஷ்டிராவின் ஹோம் கார்டு படையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது காவல்துறைக்கு உதவியாக இருக்கும் அதிக நிதி வளம் இல்லாத ஒரு பிரிவாகும். சிங், 'ஈர்ப்பற்ற துறைக்கு தள்ளப்பட்டிருப்பதாக', இந்திய ஊடகங்கள் வர்ணித்தன.

பரம்வீர், தேஷ்முக்

பட மூலாதாரம், Ashish Raje

படக்குறிப்பு, பரம்வீர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் (இடது), ஒருவர் மீது ஓருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

"இது வழக்கமான இடமாற்றம் அல்ல. மும்பை காவல்துறையின் தலைவர் அவர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கடுமையான தவறுகள் செய்துள்ளனர். இந்த தவறுகள் தீவிரமானவை. ஆகவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்," என்று மாநிலத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறினார். ஆனால் அந்த தவறுகள் என்ன என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

நகரின் மையத்தில் உள்ள ஆங்கிலோ-கோதிக் பாரம்பரிய கட்டிடத்தில் அமைந்துள்ள தனது முந்தைய பணியிடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சாதாரண அலுவலகத்தில் மார்ச் நடுப்பகுதியில் பரம்வீர் சிங் தனது புதிய பொறுப்பில் சேர்ந்தார்.

அதன் பிறகு சில நாட்களுக்குளேயே அவர், தேஷ்முக் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை.

அனில் தேஷ்முக், நகரின் பார் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வசூலிக்குமாறு வேஸுக்கு உத்தரவிட்டதாக, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பிய கடிதத்தில் பரம்வீர் சிங் குற்றம் சாட்டினார்.

தேஷ்முக் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால் ஏப்ரல் தொடக்கத்தில் அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்திய அரசின் நிதி விசாரணை அமைப்பு, தேஷ்முக்கை விசாரிக்கத் தொடங்கியது அவர் ஐந்து முறை விசாரணைக்காக அழைக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

"என் மீது குற்றம் சாட்டியவர் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டார்," என்று பரம்வீர் சிங்கைக் குறிப்பிட்டு, தேஷ்முக் கூறினார்.

மே மாதம் சிங், மருத்துவ விடுப்பில் சென்றார். அதன் பிறகு தனது விடுப்பை இரண்டு முறை நீட்டித்தார்.

பின்னர் அவர் காணாமல் போனார்.

செல்வந்தர்கள் வாழும் நகரின் மலபார் ஹில்ஸ் பகுதியில் ஒரு உயரமான கட்டிடத்தில் உள்ள சிங்கின் இல்லத்தில், அவரது மனைவியும் மகளும் அவர் இருக்கும் இடத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. அவரது வழக்கறிஞர் அனுகுல் சேத்தை பிபிசி அணுகியபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதிகாரி வெளிநாட்டிற்கு "ஓடிவிட்டார்" என்று செய்தி நிறுவனங்கள் மூச்சுவிடாமல் தங்கள் ஊகங்களை வெளியிட்டன. ஓர் ஊடகம் அவர் ரஷ்யாவில் இருப்பதாக கூறியது; மற்றொன்று அவர் பாதுகாப்பாக பெல்ஜியத்தில் உள்ளார் என்றது.

மும்பையில் பரம்வீர் சிங்குக்கு அவரது துறை வழங்கியுள்ள அதிகாரபூர்வ அடுக்குமாடி குடியிருப்பு.

பட மூலாதாரம், Ashish Raje

படக்குறிப்பு, மும்பையில் பரம்வீர் சிங்குக்கு அவரது துறை வழங்கியுள்ள அதிகாரபூர்வ அடுக்குமாடி குடியிருப்பு.

"நாங்கள் அவரைத் தேடி வருகிறோம். ஓர் அரசு அதிகாரியாக இருக்கும் அவர் அரசு அனுமதியின்றி வெளிநாடு செல்ல முடியாது. அவர் சென்றிருந்தால் அது நல்லதல்ல" என்று புதிதாக பதவியேற்றுள்ள உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மகாராஷ்டிர அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. ரியல் எஸ்டேட்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் புக்கிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், 'மிரட்டி பணம் பறித்தல்' தொடர்பான நான்கு கிரிமினல் வழக்குகள் பரம்வீர் சிங் மீது தற்போது தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தேஷ்முக் மீது இன்னும் குற்றச்சாட்டு வனையப்படவில்லை. நவம்பர் 12 வரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு அழைத்தபோது, பரம்வீர் சிங் வர மறுத்ததால் பிரச்சனை மேலும் தீவிரமானது. கூடவே, இந்த விசாரணை நடவடிக்கையை எதிர்த்து தனது வழக்குரைஞர்கள் மூலம் அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பரம்வீர் சிங் விசாரணைக் குழுவை தொடர்புகொண்டது அவர் சட்டத்தை விட்டு தப்பி ஓடவில்லை என்பதை காட்டுவதாக அவரது வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து இதுவரை அதிக விஷயங்கள் வெளியில் தெரியவில்லை. வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் தொடர்பான வழக்கிற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? சிங்கை பதவியில் இருந்து நீக்குவதற்கு தேஷ்முக்கைத் தூண்டியது எது? அமைச்சர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சிங் ஏன் காணாமல் போனார்? இந்த வழக்கை விசாரிக்கும் குழுவின் முன்னிலையில் சிங் ஏன் ஆஜராகவில்லை?

இதுவரை இவற்றுக்கு பதில்கள் இல்லை.

சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்ற சிங்கின் தந்தை ஒரு அரசு அதிகாரி. அவரது தாய் ஓர் இல்லத்தரசி. மற்றவர்களுடன் நன்கு கலந்து பழகும் அதிகாரியாக அவர் அறியப்பட்டார். நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அவர் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் உள்ளவர்.

அவரது நான்கு பதிற்றாண்டு கால போலீஸ் வாழ்க்கையில், கிராமப்புற மாவட்டங்களில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் நகர்ப்புற சட்ட விரோத கும்பல்களுக்கும் அவர் சவாலாக இருந்தார். 1990 களில் மும்பையில் உள்ள தலைமறைவு கும்பல்களை அழிக்கும் வேலையில் அதிகாரிகள் குழுவுடன் சிங், ஈடுபட்டார். அந்த நேரத்தில் மும்பை, குழு மோதல்கள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கடத்தல்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.

முகேஷ் அம்பானி வீடு

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது

தொழிலதிபர்கள் , திரைப்பட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பணம் கேட்டு மிரட்டும் கும்பல்களை களையெடுக்க, "என்கவுன்டர் போலீஸ்காரர்களுடன்" பணியாற்றியதன் மூலம் அவர் பிரபலமடைந்தார். பரம்வீர் சிங் மற்றும் மற்றொரு மூத்த அதிகாரி "நகரத்திலிருந்த தலைமறைவு கும்பல்களை அழிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டார்கள்" என்றும் அந்த வேலைக்காக இருவரும் "மூன்று உயர் திறன் என்கவுண்டர் படைகளை அமைத்தனர்" என்றும் நகரத்தில் நடக்கும் குற்றங்களை விவரிக்கும் பத்திரிகையாளரான எஸ். ஹூசைன் சேய்தி எழுதியுள்ளார்.

பரம்வீர் சிங் அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார். "நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். நாட்டை விட்டு வெளியேறவில்லை" என்று ஆகஸ்ட் மாதம் தன்னுடன் தொலைபேசியில் பேசிய ஒரு செய்தியாளரிடம் பரம்வீர் சிங் கூறியதாக சொல்லப்படுகிறது.

எனினும் அவர் எங்கே இருக்கிறார் என்றும், ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவருடைய காவல்துறைக்கே தெரியும் என்று தோன்றவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :