நரேந்திர மோதியின் பிம்பத்துக்கும் வேளாண் சீர்திருத்தத்துக்கும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்ன?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், ஃஜூபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோதி திரும்பப் பெற்றதை போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஒருபுறம் கொண்டாடுகிறார்கள். மறுபுறம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சீர்திருத்த ஆதரவு பொருளாதார வல்லுநர்கள் அவரது முடிவால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
"இந்த முடிவால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். வருத்தப்படுகிறேன். ஏமாற்றம் அடைந்துள்ளேன். இது பஞ்சாப் விவசாயிகளுக்கு வெற்றி அல்ல. இது அவர்களுக்கும், நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள தோல்வி," என்று சீர்திருத்த ஆதரவு பொருளாதார நிபுணர் குர்சரண் தாஸ் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், "இதில் அரசியல் வெற்றி பெற்று, பொருளாதாரம் தோற்றுவிட்டது. விவசாயிகள் விட்டுக்கொடுக்க மறுக்கின்றனர். இந்த நிலையில், உத்திரபிரதேசத்தில் தேர்தல் வருவதால் அரசு பயந்துபோய் இந்த முடிவை எடுத்துள்ளது," என்றார்.
இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கோரும் வெளிநாடுகளில் இருப்பவர்களும், பிரதமரின் இந்த முடிவு விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி என்று நம்புகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கை விவசாயத் துறையின் சீர்திருத்தங்களில் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
"இந்தியாவில் நிலம் மற்றும் உழைப்பில் முன்னேற்றத்தைக்காண விரும்புகிறோம். விவசாயத் துறையில் மேலும் சீர்திருத்தங்களை பார்க்க விரும்புகிறோம், பொருளாதார மீட்சி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முடிவு மோதி அரசு மீதான நம்பிக்கையை சேதப்படுத்தக்கூடும்," என்று ஹாலந்தில் உள்ள Wageningen பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் அலெக்சாண்டர் ஹேசல் பிபிசியிடம் தெரிவித்தார்.
இப்போது வேளாண் துறையில் சீர்திருத்தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்று 'இந்தியா அன்பௌண்ட்' என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் குர்சரண் தாஸ் கூறுகிறார். "இது பிரதமர் மோதியின் மிகப்பெரிய தோல்வி. அவருடைய சீர்திருத்தவாத பிம்பம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது பலர் அவரை பலவீனமான பிரதமராக பார்க்கத்தொடங்குவார்கள்," என்கிறார் அவர்.
பிரதமர் மோதி செய்தியை சரியாகச் சொல்லத் தவறிவிட்டாரா?
இப்போது இந்த நாட்டில் விவசாயத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது கடினமாகிவிட்டது என்று குர்சரண் தாஸ் கருதுகிறார்."விவசாயிகளுக்கு சரியான செய்தியை வழங்க பிரதமர் தவறி விட்டார். நரேந்திர மோதி உலகின் மிகப்பெரிய பேச்சாளராக இருக்கும்போதிலும்கூட, விவசாயிகளிடம் தன் கருத்தை கொண்டுசேர்க்க அவரால் இயலவில்லை," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சீர்திருத்தங்கள் பற்றி சரியான முறையில் விளக்கப்படவேண்டும். இது கடினமான பணி மற்றும் இதற்கு நேரம் எடுக்கும் என்று குர்சரண் தாஸ் குறிப்பிட்டார். "மக்களுக்கு விளக்க வேண்டும். அது எளிதல்ல. மக்களிடம் புரிதலை ஏற்படுத்த மோதி தவறிவிட்டார்," என்று அவர் மேலும் கூறினார். இந்தச் சட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு புரியவைப்பதில் தான் தோல்வியடைந்துவிட்டதாக, வெள்ளிக்கிழமை காலை உரையில் பிரதமரே ஒப்புக்கொண்டார். ஆனால், விவசாயிகளும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சரை மேற்கோள் காட்டிய குர்சரண் தாஸ், "சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகளை எடுக்க 20 சதவிகித நேரத்தையும், அந்த சீர்திருத்தத்தை மக்களுக்கு புரியவைக்க 80 சதவிகித நேரத்தையும் எடுத்துக்கொள்கிறேன் என்று அவர் எப்போதும் கூறுவார். நாம் அதை செய்யவில்லை," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், @gurcharandas
"புதிய சட்டங்கள் விவசாயத் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வரும் என்றும், இது நவீனமயமாக்கல் மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவும் என்றும் இந்திய அரசு கூறிவந்தது. இதனால் இந்தியாவில் போட்டித்திறன் அதிகரித்து, அதன் நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கும். சீர்திருத்தங்கள் முதலீட்டை ஈர்க்கும். கூடவே தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு உதவும் என்றும் அரசு கூறியது. ஆனால் இந்த சட்டங்களை செயல்படுத்துவதால் விவசாய சந்தை, சிறு விவசாயிகளின் கைகளில் இருந்து பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சில தொழிலதிபர்களின் கைகளுக்கு சென்றிருக்கும்,"என்று ஜெனீவா புவிசார் அரசியல் ஆய்வுக்கழகத்தின் (GIGS) இயக்குனர் அலெக்சாண்டர் லாம்பெர்ட் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மூன்று சர்ச்சைக்குரிய விவசாய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பல சீர்திருத்தவாதிகள் அரசின் நடவடிக்கையை வரவேற்றனர். இந்த சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்பு அரசு, விவசாயிகள் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று பல சீர்திருத்த ஆதரவாளர்கள் கருதினர். இந்த சட்டங்கள் திடீரென அறிமுகப்படுத்தப்பட்ட விதத்தை அவர்களில் பலர் ஆதரிக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கை வேளாண் துறையை பெரிய தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று இந்த எல்லா விமர்சனங்களிலும், சுட்டிக்காட்டப்பட்டது.

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES
இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். உணவு தானியங்களை தனியாருக்கு விற்பதற்கு ஏதுவாக, பல தசாப்தங்களாக செயல்பட்டுவரும் மொத்த விற்பனைச் சந்தை முறையை அகற்ற அரசு முயற்சிக்கிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டம் பெரிய தொழில் நிறுவனங்களின் கைகளில் அதிக அதிகாரத்தை அளிக்கும் என்றும் அரிசி, கோதுமை போன்ற முக்கிய பயிர்களுக்கு அளிக்கப்பட்டும் குறைந்தபட்ச விலை உத்தரவாதத்தை ஆபத்தில் தள்ளக்க்கூடும் என்பதும் விவசாயிகளின் வாதம்.
பயிர்களுக்கான அதிக போட்டி விவசாயிகளுக்கு சிறந்த விலையை அளிக்கும் என்றும் இந்தியாவை மேலும் அதிக தற்சார்பு கொண்ட நாடாக மாற்றும் என்றும் சட்டத்தை எதிர்ப்பவர்களை புரிந்துகொள்ளச்செய்ய அரசு முயற்சித்தது.
குறைந்தபட்ச ஆதரவு விலை அதாவது MSP ஐ சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் இதனால் தங்களுக்கு MSP உத்தரவாதம் கிடைக்கும் என்றும் அரசுக்கும் விவசாயிகளின் தலைவர்களுக்கும் இடையே நடந்த பலசுற்று பேச்சுவார்த்தைகளின் போது, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரசு இதைச்செய்யாத காரணத்தால் இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.
MSP எப்படி செயல்படுகிறது?
பல ஆண்டுகளாக இந்திய வேளாண்த் துறையில் சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளதாகவும், பிரதமர் மோதி கொண்டு வந்த மூன்று சட்டங்கள் விவசாயத் துறையில் சீர்திருத்தங்களை நோக்கிய ஒரு படி என்றும் பேராசிரியர் அலெக்சாண்டர் ஹேசல், வாதிடுகிறார். MSP என்பது பழமையான ஒன்று, அதை எவ்வளவு காலம் அளிக்க முடியும் என்றும் அவர் வினவினார். "எம்எஸ்பியை தொடர்வதாக அரசு உறுதியளித்துள்ளது, ஆனால் வேளாண் சந்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். எம்எஸ்பி ஒரு மோசமான செயல்முறை என்று நான் கருதுகிறேன்," என்றார் அவர்.

பட மூலாதாரம், PTI
இந்தச் சட்டங்களுக்கு ஆதரவான வல்லுனர்கள் MSPயை ஒரு நோயாகக் கருதுகிறார்கள். "எம்எஸ்பி அமைப்பில் சிக்கிய பஞ்சாப் ஒரு நோயில் சிக்கியுள்ளது. ஏனெனில் அது ஒரு வகையான பாதுகாப்பை அளிக்கிறது. தான் விளைவிக்கும் அரிசி அல்லது கோதுமை அனைத்தையும் அரசு வாங்கிவிடும் என்று விவசாயி நினைக்கிறார். நாட்டுக்கு இவ்வளவு தானியங்கள் தேவையா இல்லையா என்பது கேள்வி. சேமிப்பு கிடங்குகளில் தானியங்கள் அழுகிப்போகிறது. எலிகள் தானியங்களை தின்கின்றன," என்று குர்சரண் தாஸ் சொல்கிறார்.
எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் அமைப்பான ஐக்கிய கிசான் மோர்ச்சா, விவசாயிகளுக்கு MSP மூலம் நிதிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று தொடர்ந்து கூறுகிறது. ஆனால் சீர்திருத்தங்களை ஆதரிப்பவரான குர்சரண் தாஸ் ,"பஞ்சாப் விவசாயிகள் கடின உழைப்பாளிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். பிற மாநில விவசாயிகள் பழங்கள், மசாலாப் பொருட்கள், மூலிகைகள், காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிடுகிறார்கள். அவர்களுக்கு லாபம் அதிகம். அவற்றில் MSP எதுவும் இல்லை. இப்படி இருக்கும்போது பஞ்சாபின் விவசாயி இதில் ஏன் சிக்கியுள்ளார்?"என்று கேள்வி எழுப்பினார்.
சீர்திருத்தத்திற்கு ஆதரவாக உள்ள குர்சரண் தாஸ் மற்றும் பல பொருளாதார வல்லுநர்களும், இந்த மூன்று விவசாய சட்டங்களையும் சிறப்பானதாக கருதுகின்றனர். இந்தச் சட்டங்களை அமல்படுத்துமாறு மாநிலங்களிடம் சொல்லாததுதான் மோதி அரசு செய்த தவறு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
"பல மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்தியிருக்கும், குறிப்பாக பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள். பிரச்சனை பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் மட்டுமே உள்ளது. 2005-06 ஆம் ஆண்டில், மதிப்பு கூட்டு வரியை அரசு கொண்டுவந்தபோது பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதை செயல்படுத்த நினைக்கும் மாநிலங்கள் செயல்படுத்தட்டும், அதைச் செய்ய விரும்பாதவர்கள் செய்ய வேண்டாம் என்று அப்போது அரசு கூறியது. அடுத்த 18 மாதங்களில் எல்லா மாநிலங்களும் அதைச் செயல்படுத்தின, ஏனெனில் அதன் பலனை மக்கள் பார்த்தார்கள்,"என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP VIA GETTY IMAGES
மோதி அரசு விவசாயத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும், ஆனால் விவசாயிகளுடன் பேசிய பிறகு என்று வலியுறுத்துகிறார் பேராசிரியர் அலெக்சாண்டர் ஹேசல். "மோதி தனது உரையில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றி பேசியதை நான் படித்தேன். அதற்காக அவர் ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்தார். அதில் விவசாயிகளை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல நடவடிக்கை, சீர்திருத்தத்தை நோக்கி மீண்டும் ஒருமுறை செல்வதற்கான முதல் படியாக இதை நாம் சொல்லலாம்," என்று அவர் கூறினார்.
"இந்திய நாடாளுமன்றம் வெறும் முத்திரை குத்தும் அமைப்பு அல்ல. இதைக்காட்ட மோதி அரசும் அதன் குழுவும், எதிர் கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பினருடனும் உறுதியான உரையாடலில் ஈடுபட வேண்டும். உலகின் மிகப் பெரிய நாட்டில் உணவுப் பாதுகாப்பு நிலைமை ஏற்பட வழிவகை காணப்பட வேண்டும். வேளாண் வணிகம் செய்யும் பெரும் நிறுவனங்களும், உணவு மற்றும் நிதித் துறை நிறுவனங்களும், வேளாண் கொள்கைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், சிறு விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்வதும் அவசியமாகிறது,"என்று ஜெனீவா புவிசார் அரசியல் ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் லாம்பெர்ட் கூறினார்.
பிற செய்திகள்:
- இலங்கை தமிழர் வரலாறு: புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
- இரண்டாம் உலகப் போரில் இறந்த ஆஸ்திரேலியர்: 80 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் தெரிந்தது
- கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பாலத்தீனர் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மூவர் காயம்
- தென் பெண்ணை வெள்ளத்தால் 2,683 வீடுகள், 5,610 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு
- சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது தொடர்பாக சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












