“வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதற்கு காரணம் பஞ்சாப், உ.பி மாநில தேர்தல்கள்தான்”: பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images
விவசாயச் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டதை ஒட்டி மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனுடன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் நடத்திய நேரலை உரையாடலின் எழுத்து வடிவம் இது.
பஞ்சாப், உத்தரப் பிரதேசத் தேர்தல் நெருக்கத்தில் இல்லையென்றால் இந்தப் போராட்டத்திற்கு (வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம்) அரசு செவி கொடுத்திருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த இரு மாநிலத் தேர்தல்கள்தான் இந்த நடவடிக்கைக்கு முக்கியமான காரணம். பஞ்சாபில் இந்தப் பிரச்னை மிக முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், உத்தரப்பிரதேசத்திலும் இது எதிரொலிக்கும் என்பது இப்போது தெரிந்திருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவிற்கு மிகவும் ஆதரவாக இருப்பது ஜெயந்த் சவுத்ரியின் லோக் தளம்தான். இந்த லோக் தளம் கட்சியின் அடிப்படையே விவசாயிகள்தான். ஆகவே, ஜாட்கள் மற்றும் லோக் தளம் கட்சி ஆகியவற்றால் உத்தரப்பிரதேசத்திலும் இந்த விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது புரிந்திருக்கிறது. இந்த இரண்டு பெரிய மாநிலங்களில் பின்னடைவைச் சந்திக்க தயாராக இல்லை என்பதால் இந்தச் சட்டத்தை அவர்கள் திரும்பப் பெறுகிறார்கள்.
அடிப்படையில் இந்தச் சட்டங்களே அரசியல் சாஸனத்திற்கு எதிரானவை. மக்கள் போராடித்தான் இவற்றை நீக்க வேண்டுமென்பதில்லை. இவற்றை நீதிமன்றங்களே நீக்கியிருக்க வேண்டும். மாநில அரசின் கீழ் உள்ள இந்த விவகாரங்களில் மத்திய அரசு சட்டத்தை இயற்றியது. இதுவே அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது. ஆனால், நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில், போராடிய மக்கள் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். "எங்கள் உரிமைகள் குறித்து நீங்கள் முடிவெடுக்காதீர்கள்" என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது. அதற்காகத்தான் அதற்கென ஒரு துறையை உருவாக்கி, சட்டமுன் வரைவுகளையெல்லாம் உருவாக்க ஆரம்பித்தார்கள். அதுவும் மாநில அரசின் துறைதான். இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, மத்திய அரசின் தலையீட்டை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தும். இந்த ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரம் மத்தியில் குவிவதற்கு எதிராக நடந்த முதல் நடவடிக்கை இதுதான்.
எப்போதுமே இரண்டாவது ஆட்சிக் காலம் என்பது சிரமமானது. முதல் ஆட்சிக் காலத்தில் உருவான பல பிம்பங்கள் இதில் உடையும். இது ஐ.மு.கூவுக்கு மட்டுமல்ல தே.ஜ.கவுக்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. தே.ஜ.கூவின் முதல் ஆட்சிக் காலத்தில், இவர்களுக்கு சாணக்கியர்கள் என்ற பிம்பம் கிடைத்தது. என்ன செய்தாவது ஆட்சியை அமைத்துவிடுவார்கள் என தோற்றம் இருந்தது. ஆனால், அது உண்மையில்லை என்பதை மகாராஷ்டிரம் காண்பித்தது. அங்கு பா.ஜ.கவை ஒதுக்கிவிட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்தார்கள்.
இப்போது மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதை திரும்பப்பெற வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய காலகட்டத்திற்கு பா.ஜ.க. வந்திருக்கிறது. இவர்கள் கொண்டுவந்த எந்தச் சட்டத்தையும் இவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சிஏஏவைச் செயல்படுத்த முடியவில்லை. என்.ஆர்.சியைச் செயல்படுத்த முடியவில்லை. இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் விலக்கிக்கொள்கிறார்கள்.
இவர்களால் செயல்படுத்த முடிந்த விஷயங்களும் சிக்கலானதாகத்தான் முடிந்தன. முதலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை. அது ஒரு தோல்விகரமான நடவடிக்கை. ஜிஎஸ்டி அமலாக்கம் - அதுவும் தோல்வி. அதாவது, இவர்கள் எதையாவது செயல்படுத்தினால் அது தோல்வியில் முடிகிறது. செயல்படுத்தாவிட்டால் நன்மையாக இருக்கிறது. ஆகவே முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் உருவான மாயை இப்போது விலகிக்கொண்டிருப்பதைத்தான் சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இப்போது பா.ஜ.கவிற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவை பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறதா என்று கேட்கக்கூடாது. A இல்லையென்றால் Bதான் ஒரே வாய்ப்பு என்று அர்த்தமல்ல. மக்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். Cஐ மக்கள் தேர்வுசெய்யலாம். Dஐத் தேர்வுசெய்யலாம்.
மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்பாக ஊடகங்கள் தந்த செய்திகளின்படி பார்த்தால் மம்தாவுக்கு அருகில் பா.ஜ.க. இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மம்தாவுக்கும் பா.ஜ.கவும் இடையிலான இடைவெளி என்பது மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி என்பதைப் புரியவைத்துவிட்டது. பஞ்சாபைப் பொறுத்தவரை, இது காங்கிரசிற்குப் பயன்படும். உத்தரப்பிரதேசத்தில் ஜெயந்த் சவுத்ரியும் அகிலேஷும் இதைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
மக்கள் விரும்பவில்லையென உணர்ந்து பா.ஜ.க. அரசு இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டதாகவும் இது பா.ஜ.கவுக்கு சாதகமானதாகவும் இருக்குமென அக்கட்சியின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், இவர்களுடைய அரசியல் என்பது தங்களைத் தைரியசாலிகள் என மார்தட்டிக்கொள்ளும் அரசியல். நாங்கள் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று சொல்லும் அரசியல். அப்படியிருக்கும்போது நிதர்சனத்தை உணர்ந்து இதைச் செய்தோம் என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
சமீபத்தில் இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வியையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதும் இப்போது இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதும் மிக முக்கியமான அரசியல் செய்தியைச் சொல்கிறது. அதாவது, தே.ஜ.கூவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆதரவு தொடர்ந்து சரிந்துவருகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. 2016க்குப் பிறகு நடந்த பல விஷயங்களுக்கு மக்கள் இப்போதுதான் பதிலளிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
இப்போதுதான் பண மதிப்பழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை சரியில்லை என்பது மக்களுக்குப் புரிகிறது. வளர்ச்சி என்பது நடக்கவில்லையென்பது புரிகிறது. இதை மக்கள் உணர்ந்து வெளிப்படுத்த இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












