அணைப் பாதுகாப்பு சட்டம் - தமிழ்நாடு அரசு அணைகள் மீதான உரிமையை இழக்கிறதா?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அணைப் பாதுகாப்பு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணைப் பாதுகாப்பு மசோதா டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்கிற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் மசோதா என திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே சமயம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
''அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மசோதா அவசியமானது. அணைகள் தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது'' என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார். அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டு அணையில் ஏற்படும் பாதிப்புகளால் உருவாகும் பேரிடர்களைத் தடுக்க தேவையான நிறுவன பொறிமுறைகளை உருவாக்கி பாதுகாப்பான முறையில் செயல்படுத்த இந்தச் சட்டம் தேவை என அதன் முகப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி தேசிய அளவிலும் மாநில அளவிலும் அணைப் பாதுகாப்புக்கான குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் மாநில அரசுகள் 'மாநில அணை பாதுகாப்பு அமைப்பு' ஒன்றை உருவாக்க வேண்டும். தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் ஒன்றும் மத்திய அரசால் உருவாக்கப்படுகிறது.
இந்த ஆணையத்தின் கீழ் தான் இந்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் இதர குழுக்களும் அமைப்புகளும் செயல்படும். அணைகளைப் பராமிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையமே வழங்கும். மேலும் இரு வேறு மாநிலங்களின் அணைப் பாதுகாப்பு அமைப்புகள் இடையே எழும் சிக்கல்களையும் இந்த அமைப்புதான் தீர்த்து வைக்கும். இதன் மூலம் அணைகளின் மீது உள்ள மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
'மத்திய அரசிடம் சென்று கைகட்டி நிற்க வேண்டும்' - திமுக

பட மூலாதாரம், Sansad tv
திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இந்தச் சட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், "அணை, நீர் மேலாண்மை போன்றவை அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநில அரசின் நேரடி அதிகாரத்தின் கீழ் வருபவை. மத்திய அரசு ஏன் அதில் சட்டம் இயற்ற வேண்டும். திமுக இந்தச் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாக எதிர்க்கவில்லை. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி மறுபரிசீலனை செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் முதலில் கோரிக்கை வைத்தோம். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. "
"இந்தச் சட்டத்தின் தற்போதைய வடிவம் முழுவதுமாக மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதால்தான் திமுக எதிர்க்கிறது. இந்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் மாநில குழுவின் உறுப்பினர்களையும் மத்திய அரசுதான் நியமிக்கும். மத்திய குழுவிலும் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்காது. மத்திய குழுவும், ஆணையமும் கூடுதல் செயலாளர் தலைமையில் செயல்பட உள்ளது. கூடுதல் செயலாளருக்கு அணை தொடர்பான விவகாரங்களில் போதிய தெளிவு இருக்காது, டெல்லியில் இருந்து கொண்டு அவர்களால் என்ன செய்துவிட முடியும். சின்ன விஷயங்களுக்கு கூட இனி மாநில அரசு மத்திய அரசிடம் சென்று கைகட்டி நிற்க வேண்டிய நிலைதான் உருவாகும்` என்றார்.
40-க்கும் மேற்பட்ட பெரிய அணைகளில் விபத்து - பாஜக

பட மூலாதாரம், NARAYANAN TIRUPPATHI FACEBOOK
பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இந்தச் சட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், "1979-ம் ஆண்டு குஜராத்தில் மச்சு அணை உடைந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பெரிய அணைகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாகவே அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு வலுவான சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது. அதன் அடிப்படையில்தான் பாஜக இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது," என்றார்.
"இப்போதும் மாநில அரசுகள் தான் அணைகளை பராமரித்து கையாளப்போகின்றன. அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை மட்டுமே இந்த புதிய ஆணையம் வழங்கும். முல்லைப் பெரியாறு போன்ற இரு மாநிலங்கள் இடையே உருவாகும் சிக்கல்களைத் தீர்க்க இது உதவியாக இருக்கும். இதனால் மாநிலத்தின் உரிமைகள் பறிபோகாது, மாறாக தமிழகத்திற்கு இதனால் நன்மைகள்தான் அதிகம். எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான தெளிவான காரணங்களை முன்வைக்க மறுக்கின்றன. இதில் அரசியல் செய்யாமல் இதனால் கிடைக்கக்கூடிய பலன்களைத்தான் பார்க்க வேண்டும்," என்றார் நாராயணன் திருப்பதி.
உண்மையான நோக்கம் என்ன?

பட மூலாதாரம், Su venkatesan mp
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்தச் சட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், "அணைப் பாதுகாப்புதான் மத்திய அரசின் உண்மையான நோக்கம் என்றால் அதற்கு ஏற்கனவே பல நீதிமன்ற மற்றும் தீர்ப்பாயங்களின் தீர்ப்புகள் உள்ளன. அதை முறையாக செயல்படுத்தினாலே போதுமானது. ஆனால் அதைச் செய்யாமல் அணைப் பாதுகாப்பு என்கிற பெயரில் மாநிலத்தின் உரிமையை பறிக்கும் செயலே இது."
"முன்னர் அணை தொடர்பான விவகாரங்களில் சம்மந்தப்பட்ட இரண்டு மாநிலங்களே சமூகமாக தீர்வு கண்டு வந்த நிலையில் தற்போது மூன்றாவது நபராக மத்திய அரசு தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. இதனால் தீர்வை விட சிக்கல்கள்தான் உருவாகும். முல்லைப் பெரியாறு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு அணைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும்" என்றார்.
பிற செய்திகள்:
- சில இனக் குழுக்களுக்கு மட்டும் கொரோனாவால் அதிக ஆபத்து - அதிர்ச்சி அறிக்கை
- 'மத நிந்தனை குற்றச்சாட்டு' - பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர்
- தடுப்பூசி போடாமல் ஏமாற்ற கையில் போலி தோலுடன் வந்த இத்தாலி சுகாதார ஊழியர்
- ஒமிக்ரான் திரிபு பற்றி 58 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படம் வெளியானதா?
- 'ஒமிக்ரான் குறித்து அச்சப்படக் கூடாது' - உலக சுகாதார அமைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












