தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின், செல்லூர் ராஜு மோதிக் கொண்ட பென்னிகுயிக் விவகாரம் - யார் இவர்?

பென்னிகுயிக்

பட மூலாதாரம், PWD, TAMIL NADU

படக்குறிப்பு, தேனியில் உள்ள பென்னிகுயிக் நினைவு கண்டபம்

மதுரையில் ஜான் பென்னிகுயிக் (John Pennycuic) இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுவதாக அதிமுக மீண்டும் குற்றம்சாட்டிய நிலையில் இந்த விவகாரம் இன்றைய சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. என்ன நடந்தது சட்டப்பேரவையில்? இவர்கள் குறிப்பிடும் பென்னிகுயிக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு சென்னையில் அண்ணா நூலகம் அமைக்கப்பட்டதுபோல் மதுரையில் கலைஞர் பெயரில் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் 70 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நூலகம் அமைக்க பல இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், மதுரையிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தை தேர்வு செய்தனர். இதை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், அந்த கட்டடம் பென்னிகுயிக்கின் இல்லம் என்றும் அதை இடித்து விட்டு கருணாநிதிக்கு நூலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். இதனால், இந்த விவகாரம் சர்ச்சையானது.

இந்த விவகாரம் தொடர்பாக செல்லூர் ராஜு பேரவையில் பேசியபோது பதிலளித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நூலகம் அமையவுள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்ததாக கூறுவது தவறு என்று பதிலளித்தார்.

ஸ்டாலின் ஆவேசம்

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், M.K. STALIN

படக்குறிப்பு, கோப்புப்படம்

அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், "பென்னிகுயிக் இல்லத்தை திமுக அரசு கலைஞர் நூலமாக மாற்றுவதாக முன்னாள் அமைச்சர் கூறுகிறார். பென்னிகுயிக் இல்லத்தை இடித்து விட்டு கலைஞர் நூலகம் கட்டப்படவில்லை. ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுத்து மாற்ற தயாராக இருக்கிறது. சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர், இரண்டு முறை பேரவை உறுப்பினராக இருந்தவர், இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை வெளியிடக்கூடாது. அதுவும் பேரவையில் இதுபோன்ற தவறான தகவல்கள் பதிவாகக் கூடாது என்பதாலேயே இந்த விளக்கத்தை தருகிறேன்," என்று கூறியுள்ளார்.

மதுரை இல்லத்தில் வாழ்ந்தாரா பென்னிகுயிக்?

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, பாமக மற்றும் சில விவசாய அமைப்புகள், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில், "மதுரையில் 70 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 2 லட்சம் சதுர அடியில் 8 மாடிக் கட்டடமாக இது அமைய உள்ளது. இதற்காக மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர் குடியிருப்பு வளாகம் போதுமான வசதியுடன் இருப்பதால் நூலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது," என கூறப்பட்டிருந்தது.

மேலும், "இங்குள்ள குடியிருப்பில் முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்ததாகக் கூறப்பட்டது. 15.1.1841 அன்று பிறந்து 9.3.1911 அன்று பென்னிகுயிக் மறைந்தார். ஆனால், ஆவணங்களைப் பரிசீலித்துப் பார்த்தபோது நூலகத்துக்குத் தேர்வாகியுள்ள கட்டடமானது, 1912 ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு 1913 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது பொதுக் கட்டடப் பதிவேடு எண் 159/1-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கட்டடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை," என மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்.

இதன் பிறகும் பென்னிகுயிக் மதுரை இல்லத்தில் வாழ்ந்ததாக அரசியல் கட்சிகள் கூறி வந்த நிலையில், சட்டப்பேரவையில் இதற்கான விளக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.

யார் இந்த பென்னிகுயிக்?

கர்னல் ஜான் பென்னிகுயிக்

பட மூலாதாரம், EDAPPADI K. PALANISWAMI FACEBOOK PAGE

படக்குறிப்பு, கர்னல் ஜான் பென்னிகுயிக்

தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர்தான் கர்னல் ஜான் பென்னிகுயிக்.

1841ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பிரிட்டனில் பிறந்த இவர், 1895ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று சென்னை மாகாண அரசின் பொதுப்பணித்துறையில் பொறியாளராக நியமிக்கப்பட்டார். அடிப்படையில் இவர் ராணுவ பணியில் இருந்தவர்.

பிரிந்து கிடந்த இந்திய சமஸ்தானங்களை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன்பு சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்ததால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதைப்பார்த்த பென்னிகுயிக் மிகவும் வருத்தம் அடைந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ரூ. 75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் ஆளுநர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுயிக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குழு இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.

அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவற்றை பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் அணை கட்டுமானம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

சொத்தை விற்ற பிரிட்டிஷ் குடும்பம்

பென்னிகுயிக் நினைவு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முல்லை பெரியாறு அணையின் அந்தக்கால படங்கள்

பட மூலாதாரம், PWD TAMIL NADU

அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்தது. ஆனாலும், கர்னல் பென்னிகுயிக் தமது தாயகம் சென்று தன் குடும்பச் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

பிரிட்டனில் பெரும் செல்வந்தர்கள் வாழும் பகுதியில், மாளிகையில் வாழ்ந்தவர்கள் பென்னிகுயிக்கின் குடும்பம்.

முல்லைப் பெரியாறு அணைக்காக செய்த பொருட்செலவுகளால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளான அவர்கள், கடைசிகாலத்தில் அரசாங்கம் அளித்த தொகுப்பு வீடுகளில் குடியேறி வாழ்ந்தனர்.

பென்னிகுயிக்

பட மூலாதாரம், JUNIOR PENNYCUICK

படக்குறிப்பு, பிரிட்டனின் சர்ரியில் உள்ள பென்னிகுயிக் கல்லறை

பென்னிகுயிக் 1911இல் காலமான போது, அவருடைய ஐந்து மகள்களில் மூத்த மகளுக்கு வயது 30. அவருடைய ஒரே மகனுக்கு வயது 11. ஏழ்மை நிலையில் சுற்றத்தார் யாரும் உதவாததால் அவருடைய மூன்று மகள்களும் திருமணமாகாமலேயே காலமானார்கள். ஒரு மகள் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து ஜெர்மானியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே நிரந்தரமாக குடியேறினார். ஒரே மகன் ஜான் பென்னிகுயிக் (ஜூனியர்) பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

முல்லை பெரியாறு அணை

பட மூலாதாரம், SOCIALMEDIA

படக்குறிப்பு, முல்லை பெரியாறு அணை

பெரியாறு அணையை பென்னிகுயிக் வெற்றிகரமாக கட்டி முடித்தபோது, அவருக்கு அப்போதைய சென்னை மாகாண அரசு பொதுப்பணித்துறை செயலாளர் பதவியை கொடுத்தது.

பின்னர் சிறிது காலம் கூப்பர் ஹில்லில் உள்ள ராயல் பொறியியல் கல்லூரியின் கடைசி தலைவராகவும், சென்னை பல்கலைக்கழக பேராசிரியராகவும் அவர் பணியாற்றினார். 1898இல் சென்னை மாகாண பேரவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதார வாரிய தலைவராக பதவி வகித்தார்.

1899 ஆம்ஆண்டு, பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க ஆஸ்திரேலிய அரசு பென்னிகுயிக்கின் ஆலோசனையை பெற்றது.

தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுயிக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுயிக் படம் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட பென்னிகுயிக் நினைவிடம்

தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுயிக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுயிக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அமைக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :