முழு கொள்ளளவை எட்டிய முல்லைப் பெரியாறு அணை - அறிய வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், TWITTER
1. பெரியாறு அணை குமுளியிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. அணையும் அணையின் நீர்ப் பிடிப் பரப்பும் கேரளாவில் உள்ளன. ஆனால், அணை தமிழகத்திற்குச் சொந்தமானது.
2. முல்லைப் பெரியாறு அணை 1886ல் துவங்கி, 1895ல் கர்னல் பென்னிகுக் என்ற ஆங்கிலேயப் பொறியாளரால் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் முழு கொள்ளளவு 10.5 டிஎம்சி (1 டிஎம்சி 100 கோடி கன அடி). இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 881 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
3. முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் என்பது 152 அடியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 155 கன அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்க முடியும்.
4. 1976ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே 50 கி.மீ. தொலைவில் இடுக்கி அணை மின் உற்பத்திக்காகக் கட்டப்பட்டது. இதன் முழுக் கொள்ளளவு முல்லைப் பெரியாறு அணையைப் போல 7 மடங்கு. அதாவது 70 டி.எம்.சி.
5. 1979ல் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய கேரளா, அணையை பலப்படுத்தும்வரை நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படி கூறியது. அதன்படி அப்போதிலிருந்து 136 அடி வரையிலேயே தண்ணீர் தேக்கப்பட்டது.
6. அணையை பலப்படுத்தும் பணிகள் 1981ல் துவங்கி 1994ல் முடிவடைந்தன. இருந்தபோதும் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்ததால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. 2006 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நீர்மட்டம் 142 அடிக்கு உயர்த்தப்பட்டது. பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது.

பட மூலாதாரம், FACEBOOK
7. ஆனால், கேரள அரசு தன் மாநிலத்தில் கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து, மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை நிர்ணயிக்கும் உரிமை தமக்கு உள்ளதாகக் கூறியது.
8. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் முடிவில் மே 2014ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் கேரள அரசின் சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனத் தீர்ப்பளித்தது. அதே ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி 142 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கப்பட்டது. அதற்குப் பிறகு அதே ஆண்டு டிசம்பரிலும் 142 அடியைத் தொட்டது அணை.
9. அணையின் நீர்த்தேக்கப் பகுதியான 8,591 ஏக்கருக்கு குத்தகைப் பணமாக தமிழக அரசு ஆண்டுதோறும் 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை வழங்குகிறது. ஆனால், அணையில் 136 அடி உயர்த்திற்கு நீர் தேக்கப்படும்பட்சத்தில், வெறும் 4,677 ஏக்கர் பகுதி மட்டுமே நீரில் மூழ்கும்.
10. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வரையிலான ஐந்து மாவட்டங்களுக்கு பாசனக் கால்வாய்களின் மூலம் நீர் திறக்கப்படுகிறது.
11. முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு நீரைத் தேக்கும்பட்சத்தில் ஒரு சிறிய குகைப்பகுதி வழியாக வைகை அணைக்கு விநாடிக்கு 2,200 கன அடி நீரைத் திறக்க முடியும். 142 அடி அளவுக்கு நீரைத்தேக்கும் பட்சத்தில் இரைச்சல் பாலம் மூலம் மேலும் 700 கன அடி நீரை வைகை அணைக்குத் திருப்ப முடியும்.

பட மூலாதாரம், TWITTER
12. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தொட்டது.
13. பெரியாறு அணைக்கு கடந்த சில நாட்களாக பெருமளவில் நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 142 அடிக்கு நீரைத் தேக்கினால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் வரும் நீர் அனைத்தையும் வெளியேற்ற முடியாமல் நீர்மட்டம் 142 அடியையும் தாண்டி உயரக்கூடும் என்கிறது கேரள அரசு.
14. அணையின் நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியைத் தாண்டியுள்ள நிலையில், பெரியாறு அணையின் நீர்பட்டத்தை 139 அடிக்கு குறைக்க வேண்டும்; அப்போதுதான் நீர்வரத்து வெகுவாக அதிகரித்தாலும் 142 அடிக்குள் நீரைத் தேக்க முடியும் என கேரள முதல்வர் பிணராயி விஜயன் தமிழக அரசுக்குக் கோரியுள்ளார்.
15. 71 அடி உயரமுள்ள வைகை அணை தற்போது 64 அடியைத் தாண்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












