முல்லை பெரியாறு அணையில் அதிக நீரை வெளியேற்றுங்கள்: எடப்பாடிக்கு பினராயி கடிதம்

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பெய்யும் பெருமழை, அதன் விளைவாக உருவான வரலாறு காணாத வெள்ளம் கேரள மாநிலத்தில் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள தமிழகம் நிர்வகிக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த 142 அடியை புதன்கிழமை எட்டியது.
ஆனால், தொடரும் வெள்ளச் சூழ்நிலையையும், அதிக நீர் வரத்தையும் கருத்தில் கொண்டு அணையின் நீர் மட்டத்தை 139 அடியில் பராமரிக்க வேண்டும் என்றும், அதற்காக நீர் வரத்தை விட அதிகமான அளவில் நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
ஒரே நாளில் எவ்வளவு நீர் மட்டம் உயர்ந்தது?
அந்த கடிதத்தில் "ஆகஸ்ட் 14 காலை 6 மணிக்கு 136 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ஆகஸ்டு 15 பிற்பகல் 2.40க்கு 140 அடியை அடைந்தது. நீர் வளத்துறை தமிழக அரசின் பொதுப் பணித்துறையோடும், மத்திய நீர் ஆணையத்துடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
இந்நிலையில் குகை வழியில் வெளியேறும் நீர் இல்லாமல் விநாடிக்கு 4,490 கன அடி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அந்த நேரத்தில் அணைக்கு விநாடிக்கு 21,690 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
கனமழை தொடர்ந்து பெய்தாலும், நீர்ப் போக்கிகள் வழியாக தண்ணீர் வெளியேற்றுவது பல நேரங்களில் குறைக்கப்பட்டது. தகவல்கள் சரிவர பகிர்ந்துகொள்ளப்படவில்லை. நீர் வரத்து முழுவதையும் வெளியேற்றி அணை நீர் மட்டம் 140ஐ கடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேரள தரப்பில் பல முறை கோரிக்கை விடுத்தும், நீர் வெளியேற்றுவது தவறாக கையாளப்பட்டது," என்று கூறியுள்ளார் பினராயி.
நீர் வரத்தை மதிப்பிடுவதில் என்ன பிரச்சினை?
மேலும் அவர் கூறுகையில் "தமிழ்நாட்டின் களப் பொறியாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் அவ்வப்போது விருப்பம்போல நீர் வெளியேற்றுவது கூட்டியும், குறைத்தும் நடந்து வந்தது. அணை நீர் மட்டத்தை 142 அடியை நோக்கி உயர்த்துவதே நோக்கமாக இருந்தது.
நீர்வரத்து அதீதமாக இருக்கும் நிலையில் இது துரதிருஷ்டவசமானது. அணை நீர் மட்டம் 140 அடியைக் கடக்க அனுமதித்திருக்கக்கூடாது. 139 அடியில் இருந்தே கட்டுப்படுத்தப்பட்ட நீர் வெளியேற்றம் நிகழ்ந்திருக்கவேண்டும். 142 அடிக்கு மேல் கட்டுப்படுத்த முடியாத திடீர் நீர் வெளியேற்றத்தையும், உடைசலையும், வெள்ள அபாயத்தையும் தவிர்க்கும் வகையில் இதைச் செய்ய வேண்டும்.


தற்போது அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையிலும் நீர் வரத்தை விட மிகக் குறைவான அளவே நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் என்ன ஆகுமென்றால், முழு நீர் வரத்தையும் இனி வெளியேற்றினாலும், உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடி என்ற அளவு மீறப்படும்.

தங்களது டிஜிடல் நீர்மானிகள் பழுதடைந்துவிட்டதாகவும், எனவே நீர் மட்டத்தை கச்சிதமாக அளக்க முடியாத நிலை இருப்பதாகவும், ஆட்களே அளவீடுகளை செய்வதாகவும் தமிழகப் பொறியாளர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவீடுகள் தவறாகிவிடும் என்பதால், இந்த வெள்ளச் சூழ்நிலையில் இது பொருத்தமற்றது" என்று தெரிவித்துள்ளார் கேரள முதல்வர்.


"நீர்ப்பிடிப்புப் பகுதியில் இன்னும் ஒரு வாரத்துக்கு தொடர் மழையும், பெரிய அளவில் நீர் வரத்தும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தாங்கள் தலையிட்டு நீர் வரத்தைவிட நீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க செய்து, படிப்படியாக அணையின் நீர் மட்டத்தை பாதுகாப்பான 139 அடிக்கு கொண்டுவரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பினராயி விஜயன்.
வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி மூச்சு முட்டும் கேரளம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














