கேரள வெள்ளம்: "இறுதிச்சடங்கு செய்யக்கூட உடல் கிடைக்கவில்லை" - பெற்றோரை இழந்த பெண்ணின் சோகம் #groundreport

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
''அம்மா, அப்பா இருவரையுமே நிலச்சரிவில் இழந்துவிட்டேன், இறுதிச்சடங்கு கூட செய்யமுடியவில்லை'' வெடித்து அழுகிறார் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலி(46).
1924ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட பயங்கரமான இயற்கை பேரிடர் இது என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். அதன் உண்மை ஒவ்வொரு மீட்பு மையக்களில் உள்ள மக்களின் முகத்தில் தெரிகிறது.
500க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ள இடுக்கி வெள்ளநிவாரண முகாமில் இழப்புகளைச் சந்தித்த பலரின் மத்தியில் சாலியை சந்தித்தோம்.
நிலச்சரிவில் இறந்த 13 நபர்களில் குஞ்சக்குழி பகுதியைச் சேர்ந்த சாலியின் தாய் ஏலிக்குட்டி(60), தந்தை ஆகஸ்தி(65) ஆகியோரும் அடங்குவர். விவசாயிகளான இவர்கள், பெரியார் நதிநீரைக் கொண்டு தென்னை மரங்களுக்கு நீர்பாய்ச்சிய காட்சிகள் தன்னுடைய கண்முன் விரிவதாகக் கூறுகிறார் சாலி.
மழையின் மொழி
''ஒவ்வொரு ஆண்டும் மழை கொட்டும், நிலச்சரிவு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு தூங்கிக்கொண்டிருந்த என் பெற்றோர் இறந்துவிட்டனர் என்பதை இன்னும் கூட நம்பமுடியவில்லை. அவர்களின் உடல்கூட கிடைக்கவில்லை,'' என்கிறார் சாலி.
மலைப்பிரதேசமான இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சாலி, சிறுவயதில் இருந்தே மழை பேசும் மொழியின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிந்தவர்தான்.

''மழைக் காலத்தில் முதலில் ஊர் இருட்டாகி தூறல் வரும் பின், அடுத்த நாட்களில் நல்ல மழைவரும், ஆனால் எங்கள் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இருக்காது. அடுத்த சில தினங்களில் மழை கொட்டும், அந்த பருவத்தின் பெருமழை அது. வீடுகளுக்குள் இருப்போம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நிலச்சரிவு. எங்கள் குடும்பம் ஒருபோதும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டதில்லை.மழைக்காலம் முடியும்போது மீண்டும் ஒரு தூறலுடன் போகும். இந்த ஆண்டும் அதுபோலவே நடக்கும் என்று நினைத்தேன்,'' என்கிறார் சாலி.
தற்போது இடுக்கி மாவட்டத்தில் வெள்ளநிவாரண முகாமில் தங்கியுள்ள சாலிக்கு ஒருமுறை தனது பெற்றோர் இருந்த இடத்தையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தோன்றுகிறது. விடாத மழையும், நிலச்சரிவும் மீண்டும் ஆபத்து ஏற்படும் என்ற அறிவிப்பும் எங்கும் போகமுடியாதவாறு அவருக்கு மனஉளைச்சலை தருகிறது.
கண்ணீரை வரவழைத்த மழை

பெற்றோர் இறப்பதற்கு முந்தைய இரவு அவர்களோடு தொலைபேசியில் பேசியதாகவும், அவர்கள் தன்னை அச்சப்படவேண்டாம் என்று நம்பிக்கை கூறியதாகவும் சொல்கிறார் சாலி. ''அவர்கள் இருந்த வீடு இருந்த சுவடு கூட இல்லை. அண்டை வீட்டார் சொல்லித்தான் அவர்கள் இறந்தது எனக்கு தெரியும். சுவர் விழுந்து, இருவரும் அதில் சிக்கியதால், வெளியே வரமுடியவில்லை. வெள்ளம் வந்து இருவரையும் இழுத்துச்சென்றுவிட்டது. எங்கள் குடும்பத்துக்கு கோரமான முடிவு இது,''என்று அழும் சாலியை அவரது உறவினர்கள் சாந்தப்படுத்தினர்.
சாலியின் கணவர் இதயநோயாளி என்பதால் பெற்றோரின் ஆறுதல் மட்டுமே சாலிக்கு பேருதவியாக இருந்தது. மகன் பிபின் மற்றும் மகள் ஸ்னேஹா இருவரும் தற்போதுதான் படிப்பை முடித்துள்ளார்கள். ''என் பிள்ளைகள் இனி என்னை பார்த்துக்கொள்வார்கள். என் பெற்றோருக்கு நான் உதவும் தருணம் வந்துவிட்டது என்று நம்பினேன். இருவருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்ற எண்ணம் என்னை வாட்டுகிறது,'' என்கிறார் சாலி.
சிறு வயதில் இருந்து மழைத்துளிகளை ரசித்த சாலிக்கு இனி வரும் மழைக்காலங்கள் கண்ணீரை வரவழைக்கும் என்று தவிக்கிறார். ''நாங்கள் வாழ்ந்து பழகிய மழை இன்று எங்கள் வாழ்கையில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டது,'' என்கிறார் சாலி.
இடுக்கி மலை விவசாயி விக்ரமன்(65) பேசும்போது இந்த ஆண்டு ஏற்பட்டது போன்ற பேரிடர் எப்போதும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்கிறார். ''பலரும் வீடு, உடைமைகள் என இழந்து நிற்கிறோம். சாலியின் நிலை மோசமானது. நாங்கள் அவரை தேற்றிவருகிறோம். இதற்கு முன்னர் 1974ல் இடுக்கியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால் இதுபோல பலர் இறக்கவில்லை,'' என்று நினைவுகூருகிறார்.
வெள்ள நிவாரண முகாமில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொண்டு உணவு அருந்துகிறார்கள். அவ்வப்போது அழுகை சத்தம் கேட்கிறது, சிலர் யாரிடமும் பேசாமல் படுத்துவிடுகிரார்கள். முகாமில் உள்ள சுமார் எழுபது குழந்தைகள் மட்டும் அவ்வப்போது வெளியில் வந்து மழை தூறும்போது விளையாடுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













