அதிமுக உருவானதே கருணாநிதியால்தான் - நடிகர் ரஜினிகாந்த்
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினமணி: 'அதிமுக உருவானதே கருணாநிதியால்தான் - ரஜினிகாந்த்'

பட மூலாதாரம், Getty Images
கருணாநிதி நினைவிட விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தால், நானே களத்தில் இறங்கிப் போராடியிருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், "தமிழகத்தில் 50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தைக் கட்டிக் காத்தவர் கருணாநிதி. அவர் இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கருணாநிதியால் தொண்டர்களாக அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். முழுநேர அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர். அவரால் தலைவராக ஆனவர்கள் பல நூறு பேர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆண்டு விழாவுக்கு எம்.ஜி.ஆர். புகைப்படத்தை வைக்கிறார்கள். அதற்குப் பக்கத்தில் கருணாநிதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதிமுக உருவானதே கருணாநிதியால்தான்." என்று பேசியதாக வவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: 'வாழ்வதற்கு வசதியான பட்டியலில் திருச்சிக்கு 12 வது இடம்'
வாழ்வதற்கு வசதியான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த திருச்சி 12 வது இடத்தை பிடித்துள்ளது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். நகர போக்குவரத்து, கழிவு நீர் மேம்பாடு, திடக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட 78 விஷயங்களை அய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.



பட மூலாதாரம், இந்து தமிழ்

தினத்தந்தி: 'ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு'
நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், "தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்கனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு அமர்வில் மனு தாக்கல் செய்து, அந்த மனுவின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அப்படி அந்த மனுவின் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், மற்றொரு கோர்ட்டு இதனை விசாரிப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை.
மேலும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை தடை செய்ததற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மதுரை ஐகோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வரமுடியாது. இதுபற்றி தமிழக அரசு தரப்பில் எடுத்துக் கூறியும், தேசிய பசுமை தீர்ப்பாயம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இது தவறானது ஆகும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'பனை நடுவோம்'
அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் என்றாலே ஃபிளக்ஸ் பேனர்கள், பிரியாணி விருந்துகள் என்றாகிவிட்ட காலத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் பனை மரக்கன்றுகள் நடும் இயக்கமாக நடத்தி கவனம் ஈர்க்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் என்கிறது இந்து தமிழ் தலையங்கம்.

பட மூலாதாரம், Getty Images
"இந்தியாவிலேயே பனை மரங்கள் மிகுந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. மேலும், தமிழ் நிலத்தின் ஆதி அடையாளங்களில் ஒன்றாகவும் பனை திகழ்கிறது. விதை, கிழங்கு, ஓலை, ஈர்க்கு, மட்டை, நார், சாறு, காய், பழம், மரத்தண்டு என்று தன்னுடைய ஒவ்வொரு பாகத்திலும் பயனை வைத்திருக்கும் பனைக்கு நம்முடைய உணவு, மருந்துக் கலாசாரத்திலும் முக்கியமான பங்கிருக்கிறது. நுங்கு, வெல்லம், கற்கண்டு ஆகியவை இன்றும் மக்களிடம் நேரடிப் பயன்பாட்டில் இருக்கின்றன. கூரை, விசிறி, துடைப்பம், கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயன்பாடுகளில் அதன் பங்கு குறைந்த வண்ணம் இருக்கிறது. வேளாண் சமூகத்துக்கு இயல்பான ஒரு வருவாய்த் துணையாக இருந்தாலும், தென்னை அளவுக்குப் பனையின் முக்கியத்துவம் நம் சமூகத்தில் உயரவில்லை. விளைவாக, நிறைய இடங்களில் பனை மரங்கள் அழிக்கப்பட்டுவருவதையும் நாம் காண முடிகிறது.
இப்படியான சூழலில் திருமாவளவன் தொடங்கியிருக்கும் பனை நடும் இயக்கம் வெறுமனே மரம் வளர்ப்புப் பணி என்பதாகச் சுருங்கிவிடாமல், மக்களிடம் பனை தொடர்பான விழிப்புணர்வு இயக்கமாகவும் விரிகிறது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பனை விதைகளை எப்படிச் சேகரிப்பது, அதை நடுவது எப்படி என்று தமிழகம் முழுவதும் உள்ள விசிக பொறுப்பாளர்களை அழைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தியிருப்பதோடு, பனை நடும் பணி நடக்கும் இடங்களில் இதுகுறித்து மக்களிடம் திருமாவளவன் விளக்கியும் பேசுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகிறது. தொண்டர்களோடு தொண்டராகத் தானே முன்னின்று விதைகளைச் சேகரிக்கிறார் திருமாவளவன். பனை மரத்திலிருந்து பழுத்து வீழும் விதைகள் சேகரிக்கப்பட்டு, நீர்நிலைகளின் கரைகளையொட்டியும் ஊன்றப்படுகின்றன." என்று விவரிக்கிறது இந்து தமிழ் தலையங்கம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












