கலைஞரின் உண்மை விசுவாசிகள் என் பக்கம்தான்: மு.க.அழகிரி

அழகிரி

பட மூலாதாரம், Getty Images

கலைஞரின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம்தான் இருப்பதாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு திங்கட்கிழமை காலையில் வருகைதந்த மு.க. அழகிரி, தன் குடும்பத்தினருடன் அங்கே அஞ்சலி செலுத்தினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க, அழகிரி, தன் ஆதங்கத்தை கலைஞரிடம் சொல்வதற்காகவே அங்கு வந்ததாகக் கூறினார்.

தான் சொல்வதை கலைஞர் தொலைக்காட்சியில் வெளியிட மாட்டார்கள் என்று பேசத் துவங்கிய அழகிரி, "எங்க அப்பாகிட்ட என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டிருக்கிறேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது தெரியாது. என் தலைவர் கலைஞரின் விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லாம், என் பக்கம்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விசுவாசிகளும் என்னுடைய பக்கம் இருக்கிறார்கள். காலம் இதற்குப் பதில் சொல்லும் என்பதோடு முடித்துக்கொள்கிறேன்" என்றார்.

உங்களுடைய ஆதங்கம் குடும்பம் சம்பந்தப்பட்டதா, அல்லது கட்சி சம்பந்தப்பட்டதா என்று கேட்டபோது, "கட்சி சம்பந்தப்பட்டது" என்று கூறிய அழகிரி, செவ்வாய்க்கிழமை நடக்கும் செயற்குழு பற்றித் தெரியாது என்றும் மீண்டும் தி.மு.கவில் இணைவேனா என்பது தெரியாது என்றும் கூறினார்.

"முன்னதாக ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது போல திமுகவில் எவ்வித பிளவும் ஏற்படக்கூடாது என்பதில் கருணாநிதி குடும்பத்தினர் மிகவும் கவனத்துடன் உள்ளனர். இதனால் திமுகவில் மீண்டும் அழகிரி சேர்க்கப்படவுள்ளார். அதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளார்" என்பன போன்ற செய்திகள் செய்தித்தாள்களில் வந்திருந்தன.

தி.மு.கவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்த மு.க. அழகிரி, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக 2014ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :