உலகப்பார்வை : 'எகிப்து: 'மம்மி' செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிப்பு
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.
மம்மி செய்வது எப்படி?

பட மூலாதாரம், DR STEPHEN BUCKLEY/ UNIVERSITY OF Y
பண்டைய எகிப்தைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட மனித உடலான 'மம்மி' ஒன்றை ஆராய்ச்சி செய்ததில், உடல்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளன.
கி.மு. 3500 - 3700 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் எள்ளில் இருந்து எடுக்கப்பட்டதாக கருதப்படும் எண்ணெய், கோரை புற்களின் வேர்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, வேல மரப் பிசின் மற்றும் பைன் மரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கருதப்படும் பிசின் ஆகியன உடல்களை மம்மிகள் ஆக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முக மாற்று அறுவைசிகிச்சை

பட மூலாதாரம், FAMILY/MARTIN SCHOELLER
தமக்கு 18 வயதாக இருந்தபோது துப்பாக்கியால் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற கேட்டி ஸ்டபில்ஃபீல்டு எனும், அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சியின்போது தனது முகத்தின் பல உறுப்புகளை இழந்த அவருக்கு, ஆண்ட்ரியா ஷ்னைடர் எனும் 31 வயது பெண்ணின் முகம் பொருத்தப்பட்டுள்ளது.
2017இல் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. கேட்டிக்கு இப்போது 22 வயது ஆகிறது.

இத்தாலிபிராந்தியத்தில் அவசரநிலை

பட மூலாதாரம், EPA
இத்தாலியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜெனோ நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததால், அந்நகரம் அமைந்துள்ள லேகுரியா பிராந்தியத்தில் 12 மாத கால அவசரநிலையை இத்தாலியின் பிரதமர் ஜோசப்பே கோண்டே அறிவித்துள்ளார்.
நாட்டின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சமாளிக்க நாட்டின் மத்திய நிதி கையிருப்பில் இருந்து 5 மில்லியன் யூரோ நிதி முதல் கட்டமாக அளிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 பேருக்கு மரண தண்டனை

பட மூலாதாரம், Getty Images
லிபியா தலைநகர் திரிபோலியில் 2011இல் நடந்த பேரணியில் பங்கேற்றவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில், ஆயுதக் குழுக்களை சேர்ந்த 45 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்னல் மும்மார் கடாஃபி ஆட்சி அகற்றப்பட்டபின் அங்கு ஒரே சமயத்தில் அதிகமானவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனை இதுதான் என ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறுகிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












