94 ஆண்டுகளுக்குபின் பேரிடரை சந்தித்த கேரளா: மாநிலமெங்கும் நிவாரண முகாம்கள் அமைப்பு
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
'கடவுளின் சொந்த தேசம்'(God's own country) என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கேரளா, 94 ஆண்டுகளுக்கு பிறகு கோரமான வெள்ள பேரிடரைச் சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கேரளாவின் 14 மாவட்டங்களும் முழுவதும் பாதிக்கப்பட்டு, 67 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக புதன்கிழமை (15ஆகஸ்ட்) அன்று 25பேர் பலியாகியுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
எல்லா மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் செயல்படத்தொடங்கியுள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து (14) மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலைகளில் சேதாரம், பல இடங்களில் போக்குவரத்து,மின்சாரம் துடிக்கப்பட்டு , கேரளாவின் பல பகுதிகள் தீவுகள் போல தோன்றுகின்றன. இதுவரை கடுமையான வெள்ளத்தைச் சந்திக்காத கொச்சின்,பாலக்காடு,வயநாடு போன்ற இடங்களில் முதல்முறையாக வெள்ளம் கரைபுரண்டு நகரம் மற்றும் கிராமங்களை சூழ்ந்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய மீட்பு படையினர் கொச்சின் பகுதியில் உள்ள கம்பெனிபாடி பகுதியில் இதுவரை வெள்ளத்தை சந்திக்காத மக்கள் சிலர் தங்கள் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தாலும் வெளியேற மனமில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.

''கம்பெனிபாடியில் சுமார் 200 குடும்பங்களை வெளியேற்றவேண்டும். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வெள்ளம் வடிந்துவிடும். நாங்கள் பிறகு வருகிறோம் என்கிறார்கள். நிலைமை மோசமாகியுள்ளது என்பதை உணர்த்தினாலும் சிலர் தங்களது உடைமைகளை விட்டுவர மறுக்கின்றனர்,'' என ஜோஸ் என்ற மீட்புப்பணியாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கேரளவில் முக்கியமாக கொண்டாப்படும் ஓணம் பண்டிகை ஆகஸ்ட்15ல் தொடங்கினாலும், பெரும்பாலான ஊர்களில் அதற்கான சுவடே இல்லை. கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் திருவிழா கொண்டாடத்தை ரத்து செய்துவிட்டு,நிவாரணப் பணிகளுக்கு நிதியை செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

கொச்சி சர்வதேச விமான நிலையமும் 18ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள 27அணைகளும் முழுவதுமாக திறக்கப்பட்டதால், வீடுகள்,தென்னை,பாக்கு,தேயிலை,ரப்பர் என எல்லா விளைநிலங்களிலும் வெள்ளம் தனது தடத்தைப் பதித்துச் சென்றது. 26 ஆண்டுகளுக்கு பிறகு, இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு, பெரியார் நதி முழுவீச்சில் முன்னர் பாய்ந்த இடங்களில் தற்போது பயணிக்கிறது.

இடுக்கி மாவட்டத்தில் நீரில் மூழ்கிய ஒரு தென்னைமர தோப்புக்கு சொந்தக்காரான விக்ரமன்(65) பேசும்போது தனது தென்னந்தோப்பு இருந்த சுவடுகூட தற்போது இல்லை என்கிறார்.
''இதுவரை நாங்கள் விவாசயம் செய்துவந்தோம். தற்போது அகதியைப்போல உணர்கிறோம். எங்களின் நிலங்கள் எங்கு உள்ளன என்று தெரியாது. எங்கள் ஊர் முழுவதும் வெள்ளக்காடாக கட்சியளிக்கிறது. எங்களின் தேவைகளை இந்த ஆண்டு விளைச்சலைக் கொண்டு சமாளிக்க எண்ணியிருந்தோம். அது தற்போது கானல் நீராகிவிட்டது'' என்று அவர் தெரிவித்தார்.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, 300க்கும் மேற்பட்ட வெள்ளநிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால், முகாம்களில் இருந்து வெளியேற யாரும் விரும்பவில்லை.
வெளியூர்களில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிவரும் லாரிகள் கேரளாவுக்கு வருவதில் சிரமம் உள்ளது.

வெளிமாநில லாரிகள் வந்துசேரும் முக்கிய சாலையான கண்டைனர் சாலை முழுவதுமாக மூழ்கியுள்ளது என்பதால் பல லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. ''இடுக்கி அணையில் உள்ள நீர் கண்டைனர் சாலைக்கு அருகில் உள்ள ஏரிகளுக்கு வந்து கடலில் சேரும். இங்குள்ள கடைகள் முழுவதுமாக மூழ்கிவிட்டன. லாரிகளை நிறுத்திவிட்டு எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,'' என்கிறார் வணிகர் சுந்தரம்.
இது கொச்சி விமான நிலையமா? பெருக்கெடுக்கும் ஆறா? பதறவைக்கும் காட்சி
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













