ஆப்கானிஸ்தானில் போதைப் பொருள்: தாலிபன்கள் அபின் உற்பத்தியை தடை செய்வார்களா? உண்மை நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உண்மை கண்டறியும் குழு
- பதவி, பிபிசி நியூஸ்
ஆப்கானிஸ்தானில் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அபின் தயாரிப்பதற்குத் தேவையான பாப்பிச் செடிகளின் சாகுபடி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சட்டவிரோத போதை மருந்துகளின் விற்பனை தடுக்கப்பட்டதாகவும் தாலிபன் கூறுகிறது.
ஆனால் தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 2001 -ல் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் எவ்வளவு அபின் உற்பத்தி செய்யப்படுகிறது?
அபின் பாப்பி செடிகளைப் பதப்படுத்தி ஹெராயின் உட்பட பல போதை மருந்துகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
போதை மற்றும் அது தொடர்பான குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவல் அமைப்பின்படி (UNODC), உலகிலேயே அதிக அளவு அபின் உற்பத்தி செய்யப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
அதன் அபின் உற்பத்தி உலகின் மொத்தப் பயன்பாட்டில் 80% க்கும் அதிகமாக உள்ளது.
2018 இல் UNODC-இன் மதிப்பீட்டின்படி அபின் உற்பத்தி ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தில் 11% அளவுக்குப் பங்களித்துள்ளது.
அபின் பற்றி தாலிபன் கூறியிருப்பது என்ன?
"நாங்கள் ஆட்சியில்இருந்தபோது எந்தவிதமான போதைமருந்தும் தயாரிக்கப்படவில்லை" என்று காபூலை தாலிபன்களை கைப்பற்றிய பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் கூறினார்.
"அபின் சாகுபடியை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம்" என்றும் இனி போதைப்பொருள் கடத்தல் இருக்காது என்றும் அவர் கூறினார்.
தாலிபன்களின் ஆட்சியில் போதைப் பொருள் நிலை என்ன?
முதலில், தாலிபன் ஆட்சியில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக உயர்ந்தது. 1998-ஆம் ஆண்டில் சுமார் 41,000 ஹெக்டேர் இருந்து, 2000-ஆவது ஆண்டில் 64,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அபின் பாப்பிச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது.
இது பெரும்பாலும் தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் பயிரிடப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது மட்டும் உலகின் சட்டவிரோத அபினின் 39% ஆகும்.

ஆனால் 2000-ஆம் ஆண்டு ஜூலையில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அபின் பாப்பி சாகுபடியைத் தடை செய்தனர்.
தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாப்பி சாகுபடி முற்றிலுமாக தடை செய்யப்படுவதில் முழு வெற்றி கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் அவை 2001-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது.
தாலிபன்கள் அபின் பாப்பி விவசாயத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலகளவில் 2001 மற்றும் 2002 ல் அபின் மற்றும் ஹெராயின் பிடிபடுவது கணிசமாகக் குறைந்தது.
ஆயினும், அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது.
இதற்கு முன் இருந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக இருந்தது. ஆனால் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்தான் இது அதிகம்.
உதாரணமாக, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 2018 ஆம் ஆண்டில் பாப்பி சாகுபடிக்கு அதிக அளவிலான நிலம் பயன்படுத்தப்பட்டது.
பாப்பி செடிகளில் இருந்து தாலிபன்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறார்கள்?
ஐ.நா.வின் கணக்கெடுப்பின்படி அபின் பயிரிடுவது ஆப்கானிஸ்தானில் வேலைவாய்ப்புக்கான மிக முக்கியமான ஆதாரமாகும். 2019-ஆம் தேதி மதிப்பீட்டின்படி இந்தத் தொழில் மூலம் 1.2 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.
தாலிபன்கள் அபின் பாப்பி விவசாயம் மீது வரி விதிக்கிறார்கள். இதன் மூலம் கணிசமான பணம் கிடைக்கிறது. இது தவிர மறைமுகமாக அபின் கடத்துவதன் வழியாகவும் லாபம் ஈட்டுகிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது. அபின் பாப்பி பயிரிடுவோர் தாலிபன்களுக்கு 10 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்.
அபினை ஹெராயினாக மாற்றும் ஆய்வகங்களிலிருந்தும், சட்டவிரோத மருந்துகளை கடத்தும் வியாபாரிகளிடமிருந்தும் தாலிபன்கள் வரி வசூல் செய்கிறார்கள்.
சட்டவிரோத போதைப்பொருள் பொருளாதாரத்தில் தாலிபன்களுக்கு 100 மில்லியன் டாலர் முதல் 400 மில்லியன் டாலர் வரை கிடைப்பதாக மதிப்பிடப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தாலிபன்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருவாயில் போதை மருந்து வர்த்தகத்தின் பங்கு சுமார் 60 சதவிகிதம் என்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கக் கண்காணிப்பு அமைப்பான "சிகர்" கூறுகிறது.
போதை மருந்துகள் எங்கே போய்ச் சேருகின்றன?
ஐரோப்பிய சந்தையில் கிடைக்கும் 95 சதவிகித ஹெராயின், ஆப்கானிஸ்தானில் வளர்க்கப்படும் அபின் மூலம் தயாரிக்கப்படுவதே.
இருப்பினும், அமெரிக்காவின் ஹெராயின் விநியோகத்தில் 1% மட்டுமே ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது என்று அந்த நாடு கூறுகிறது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஹெராயின் பெரும்பாலும் மெக்சிகோவிலிருந்து வருகிறது.
கடந்த இரு தசாப்தங்களாக அபின், ஹெராயின் பொருள்கள் கைப்பற்றப்படும் அளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கின்றன. ஆயினும் ஆப்கானிஸ்தானில் அபின் பாப்பி சாகுபடி இந்தக் கால கட்டத்தில் மேல்நோக்கிய வளர்ச்சியையே கண்டிருக்கிறது.
போதைப்பொருள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் போன்றவை ஆப்கானிஸ்தானின் அபின் பாப்பி சாகுபடியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிறது அமெரிக்காவின் சிகார் (Sigar) அமைப்பு.
உதாரணத்துக்கு 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை கைப்பற்றப்பட்ட அபினின் அளவு 2019 ஆம் ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்ட அபினில் வெறும் 8 சதவிகிதம்தான் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

பிற செய்திகள்:
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
- பாலியல் காணொளி சர்ச்சை; கட்சிப் பதவியில் இருந்து விலகினார் கே.டி. ராகவன்
- அதிகமாக சாப்பிட தோன்றுகிறதா? மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்
- 'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












