நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சியாளர்கள் என்று கருதி பொதுமக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.
இதில், பொதுமக்கள் 11 பேர் வரை கொல்லப்பட்டதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் 13 பேர் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நடந்தபோது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே மோதல் உண்டானது. அதில் பொதுமக்கள் ஏழு பேர் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ளது மோன் மாவட்டம். இங்குள்ள ஒடிங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை இரவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
என்.எஸ்.சி.என் (கே) மற்றும் உல்ஃபா ஆகிய கிளர்ச்சிக்குழுக்கள் மோன் மாவட்டத்தில் பலம் பொருந்தியவர்களாக உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.அப்போது, பணி முடித்துவிட்டு வேனில் வந்த சுரங்க தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று நாகலாந்து காவல் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான டி.ஆர்.ஜெலியாங் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறுகிறார்.
என்.எஸ்.சி.என் (கே) அமைப்பின் யங் ஆங் பிரிவினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடைப்படையில் இந்திய ராணுவம் சோதனை நடத்தி வந்தபோது, பொதுமக்கள் வந்த வாகனம் மீது ராணுவத்தினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார் என்கிறது பிடிஐ செய்தி.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நெய்ப்யூ ரியோ, உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதுகாப்பு படையினரும் இதில் கொல்லப்பட்டுள்ளதாக துணை ராணுவப் படையான அசாம் ரைஃபில்ஸ் தெரிவித்துள்ளது என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.
இந்திய ராணுவம், இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்றும் இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் பி.டி.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பாதுகாப்பு படையினர் பலரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு அமைத்துள்ள உயர்மட்ட விசாரணைக்குழு, முழுமையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'தகவல் தொடர்பு முடக்கம்'
பிபிசியிடம் பேசிய கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பின் தலைவர் கெகாங்சிம் யிம்யுங்கர், "இதுவரை பொதுமக்கள் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பலரை காணவில்லை என சொல்லப்படுகிறது. சரியான தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என்றார்.
நிகழ்விடத்தில் எவ்வித தகவல் தொடர்பும் இல்லை. எஸ்.எம்.எஸ் மற்றும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு இச்சம்பவத்தை விமர்சித்துள்ளது. முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னரே, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுப்போம் என பிபிசியிடம் கெகாங்சிம் தெரிவித்தார்.
'அரசு விளக்கம் அளிக்க வேண்டும்'

பட மூலாதாரம், Getty Images
நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அரசு உண்மையான விளக்கம் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது எனவும், மத்திய அரசு உண்மையான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் தங்களது சொந்த நிலத்தில் பாதுகாப்பாக இல்லாத நிலையில், உள்துறை அமைச்சகம் என்ன செய்துகொண்டிருக்கிறது," என பதிவிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதின் ஓவைசி ஆகியோரும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளதாக, பிபிசி இந்தி பிரிவைச் சேர்ந்த செய்தியாளர் பினாகி தாஸ் கூறியுள்ளார்.
ஏடிஜிபி சந்தீப் தாம்கட்கே மேற்பார்வையில், இக்குழு விசாரணை மேற்கொள்ளும் என மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இக்குழுவில், எல்.ஜமீர் ஐபிஎஸ், எம்.ரூபா ஐபிஎஸ், மனோஜ் குமார் ஐபிஎஸ், நாகாலாந்து காவல் பிரிவைச் சேர்ந்த கில்லாங் வாலிங், ரைலோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு மாதத்திற்குள் இக்குழு விசாரணையை முடிக்கும் எனவும், தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தின் தலைநகர் கோஹிமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணிகளில் ஈடுபட்டனர். கோஹிமாவில் இன்னும் பதற்றம் நீடிக்கிறது எனவும், மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் செய்தியாளர் ஹெச்.ஏ.ஹாங்னாவ் கோன்யாக் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
- அணைப் பாதுகாப்பு சட்டம் - அணைகள் மீதான உரிமையை தமிழ்நாடு அரசு இழக்கிறதா?
- அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்?
- ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி: அரிய ரத்தம் உறைதலுக்கு காரணம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
- 'கொரோனா தடுப்பூசியால் எய்ட்ஸ்' என்று கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரேசில் அதிபர்
- இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்: நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












