கொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன?

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் உள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டுமே வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் இந்த மூன்று மாதங்களில் மட்டுமே கோயில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன அந்த காலகட்டங்களில் இந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது குறிப்பாக கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்கள் ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.
தினசரி ஒரு கலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஒரு நாள் நாடகம் என்றும் மற்றொரு நாள் தேவராட்டம், ஒயிலாட்டம் எனவும் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். தேர் வீதியுலாவின்போது, பறையிசை முதற்கொண்டு, நாகசுரம், தவில் என பாரம்பரிய இசைக் கலைஞர்களின் இசையும் திருவிழாவை சிறப்பிப்பதுடன், இசைக்கலைஞர்களை வாழ்வாதாரமும் சிறப்பிக்கப்படும்.
மூன்று மாதங்களுக்கு மட்டுமே வருவாய்
திருவிழா நடக்கும் மூன்று மாத காலங்களிலும், நாடகம், மற்றும் நாட்டுப்புறக் கலைகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்த கலைகளுர்களுக்கு தினசரி ஏதாவது ஒரு கிராமத்தில் வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும்.
அந்த 3 மாதம் தொடர்ச்சியாக கிடைக்கும் வருவாயை வைத்துக் கொண்டும், திருவிழாக்கள் முடிந்த பிறகு, கல் உடைக்கும் தொழில், கட்டட வேலை என கிடைத்து வேலை செய்து காலத்தை ஓட்டும் இந்த கலைஞர்களுக்கு கனவெல்லாம் அரிதாரம் பூசுவதே.
மூன்று மாதம்தானே வேலை கிடைக்கிறது என விட்டுவிடாமல், இந்த கலைத் தொழிலை விட்டுவிடாமல் செய்வதால்தான் இன்றளவுக்கும் நாடக, நாட்டுப்புற கலைகள் குறித்து இளைய தலைமுறை அறிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சரியாக ஏப்ரல் மாதத்தில் திருவிழா நடைபெறும் சமயத்தில் இந்த கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதால் உடனடியாக மாநிலம் முழுவதும் கோயில் திருவிழாக்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் அப்பொழுது வேலை வாய்ப்புகளை இழந்தனர். உடனடியாக அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அப்பொழுது அவர்களுக்கு தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைஞர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

மீண்டும் தொடரும் அச்சம்
இந்நிலையில், இந்த ஆண்டிலும் தங்களுடைய கலைகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என அச்சப்படுகின்றனர் இந்த கலைஞர்கள்.
கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் தமிழகம் முழுவதும் கோயில் திருவிழா நடத்துவதற்கு நிகழாண்டிலும் தமிழக அரசு தடை விதித்துள்ளது இதன் காரணத்தால் இந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களிலும் கோயில் திருவிழாக்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே தங்களுடைய வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாக உள்ளதாக கூறுகின்றனர் இந்த நாட்டுப்புற மற்றும் நாடகக் கலையை நம்பியுள்ள கலைஞர்கள்.
"கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தலாம்"
கரூர் நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்த அண்ணாதுரை கூறுகையில், "தமிழக அரசு நினைத்தால் எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும், கொரோனா விழிப்புணர்வுக்கு அரசு பல்வேறு வழிமுறைகளை செய்து வருகிறது. எங்களது, நாடக நாட்டுப் புற கலைஞர்களைக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினால் எங்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்," என்றார்.

"நாடகத்தில் ராஜபார்ட் வேடமிடுபவருக்கு நாள் ஒன்றுக்கு 1,500 ரூபாய் வரையும், பபூன் போன்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய், ஆர்மோனியம் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு 750 ரூபாய் வரை கிடைக்கும். இந்த 3 மாதத்தில் தினசரி ஏதாவது ஒரு இடத்தில் வாய்ப்பு கிடைக்கும். மூன்று மாதத்தில் கிடைக்கும் ஊதியத்தை வைத்து மேலும் சில மாதங்களுக்கு காலத்தை ஓட்டுவோம். அப்புறம். கிடைக்கிற வேலைகளுக்கு செல்வார்கள். இதுதான் எங்களது வாழ்க்கை," என்றார் கலைமாமணி விருது பெற்ற நாடக நடிகை கரூரைச் சேர்ந்த இந்திராணி.

கரூர் அருகேயுள்ள கெஜிலியகெம்பம்பட்டியைச் சேர்ந்த தேவராட்ட கலைஞர் தங்கராசு கூறுகையில், "நாயக்கர் சமுதாய மக்களிடம் இந்த தேவராட்டம் மிகவும் பிரபலம். எனக்கு 50 வயதாகிறது. 15 வயதிலிருந்து தேவராட்டம், ஒயிலாட்டம் ஆடி வருகிறேன். இந்த 3 மாதம்தான் வேலை. அதன்பிறகு, கல் உடைக்கும் வேலை, கட்டட வேலை என கிடைத்த வேலைக்கு செல்வோம்," என்றார்.
இந்த ஆண்டிலும் தங்கள் கலைகளுக்கு எந்த வேலையும் கிடைக்காது என்ற கவலையில் பேசுகின்றனர் நாடக, நாட்டுப்புற கலைஞர்கள்.
வயல் விளைந்து... ஊர் செழித்ததைக் கொண்டாட திருவிழா. திருவிழாவில் மக்களை சந்தோசப்படுத்த கலைஞர்கள். சிந்திக்க வைத்த, சிரிக்க வைத்த, சிந்தனையை தூண்டிய கலைஞர்கள் வாழ்க்கையை சினிமா, டிவி என்று சூறையாடிய காரணிகள் வரிசையில் இப்போது கொரோனாவும் சேர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













