சீன பொருளாதாரம்: கொரோனாவுக்கு பிறகு 18.3 சதவீதம் வளர்ச்சி - நிபுணர்கள் சொல்லும் காரணம் என்ன?

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

2021-ம் ஆண்டின் முதல் காலாண்டை, கடந்த 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும் போது, சீன பொருளாதாரம் 18.3 சதவீதம் என மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

சீனா, 1992-ம் ஆண்டு முதல் காலாண்டு வாரியாக ஜிடிபி தரவுகளைப் பராமரிக்கத் தொடங்கியது. அன்றிலிருந்து சீன பொருளாதாரம் கண்ட மிகப் பெரிய காலாண்டு வளர்ச்சி இது தான்.

18.3 சதவீதம் மிகப் பெரிய வளர்ச்சி என்றாலும், ராய்டர்ஸ் கருத்துக் கணிப்பில் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த 19 சதவீதத்தை விட, சீன பொருளாதாரம் குறைவாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சீன பொருளதாரம் 6.8 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

2021-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான தரவுகளை வெளியிட்ட சீனாவின் தேசிய புள்ளிவிவரப் பணியகம் "சீன பொருளாதாரம் நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறது" எனக் கூறியுள்ளது.

இருப்பினும் "கொரோனா வைரஸ் இப்போதும் உலகம் முழுக்க தொடர்ந்து பரவிக் கொண்டு தான் இருக்கிறது. சர்வதேச அளவில் ஒரு நிலையற்ற தன்மையும், உறுதியற்ற தன்மையும் நிலவுகின்றன" எனக் கூறியுள்ளது.

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

புள்ளியியல் துறை வெளியிட்ட மற்ற தரவுகளும், சீன பொருளாதாரம் தொடர்ந்து சீரடைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. எனினும் இந்த முறை மிக வலுவான வளர்ச்சி கண்டமைக்கு, இந்த ஆண்டின் தரவுகளை, கடந்த ஆண்டின் மிக பலவீனமான எண்களோடு ஒப்பிட்டதும் காரணம்.

கடந்த மார்ச் 2021-க்கான தொழில் துறை உற்பத்தி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 14.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சில்லறை விற்பனை 34.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

"முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாதாந்திரக் குறியீடுகளான தொழில் துறை உற்பத்தி, நுகர்வு, முதலீடு என எல்லாமே வரிசையாக மார்ச் மாதத்தில் அதிகரித்திருக்கிறது" என ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ் என்கிற ஆலோசனை நிறுவனத்தின், ஆராய்ச்சி பிரிவின் ஆசிய பொருளாதாரத் தலைவர் லூயிஸ் குய்ஜ் கூறியுள்ளார்.

சீன அரசின் நிதி சார்ந்த மற்றும் கொள்கை ரீதியிலான உதவிகள் குறையும் போது பல துறைகளின் வளர்ச்சி வேகம் குறையும் என சில பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தற்போது வெளியாகி இருக்கும் ஜிடிபி தரவுகள் பல துறைகளில் வளர்ச்சி கண்டிருப்பதாகக் கூறுகிறது. இந்த முதல் காலாண்டு தரவில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் தான் இதில் அதிக பங்கு வகிக்கின்றன. வருங்காலத்தில் இந்த வளர்ச்சி குறையலாம் என 'தி எகனாமிஸ்ட்' இதழின் புலனாய்வுத் துறைப் பிரிவின், சீனாவுக்கான முதன்மைப் பொருளாதார நிபுணர் யூ சு கூறியுள்ளார்.

"உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இந்த ஆண்டின் மீதமுள்ள காலங்களில், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு தொழில் துறை செயல்பாடுகள் இப்போது போல ஒரு வலுவான வளர்ச்சியக் காட்ட முடியாமல் போகலாம்" எனவும் குறிப்பிட்டிருக்கிறார் யூ சு.

சீனா மிகக் கடுமையான கொரோனா விதிமுறைகளை விதித்தது மற்றும் வியாபாரிகளுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கியது போன்ற நடவடிக்கைகளால், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தொடர்ந்து நிலையாக சீன பொருளாதாரம் ஏற்றம் கண்டு வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் சீன பொருளாதாரம் மோசமாக செயல்படத் தொடங்கிய போதும், அவ்வாண்டின் முடிவில் சீன பொருளாதாரம் மட்டுமே வளர்ச்சியைக் காட்டியது குறிப்பிடத்தக்கது. 2020-ம் ஆண்டில் சீன பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டது. இது கடந்த பல தசாப்த காலத்தில் இல்லாத அளவுக்கு சீனாவின் மிகக் குறைந்த வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: