க்யூபாவில் பதவி விலகும் ராவுல் காஸ்ட்ரோ: முடிவுக்கு வந்த 60 ஆண்டுகால சகாப்தம்: அடுத்தது என்ன?

ராவுல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

க்யூபாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். இதன்மூலம் அறுபது ஆண்டுகாலம் தனது குடும்பம் தக்கவைத்திருந்த பொறுப்பை அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

தற்போது ராவுல் காஸ்ட்ரோவுக்கு 89 வயது.

கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைமை பொறுப்பை "உத்வேகமும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான துடிப்பும் கொண்ட" இளைய சமூதாயத்தினரிடம் கொடுக்க விரும்புவதாக ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

ராவுல் காஸ்ட்ரோவின் சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோ க்யூபாவின் அதிபராக 1959ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். எனவே 60 ஆண்டுகாலமாக க்யூபாவின் அதிபர் பொறுப்பில் இருந்து வந்தனர் காஸ்ட்ரோ சகோதரர்கள்.

ஒரு சகாப்தத்தின் முடிவு

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு பிறகு ராவுல் காஸ்ட்ரோ கட்சியின் பொதுச் செயலாளராக 2011ஆம் ஆண்டிலிருந்து பொறுப்பில் உள்ளார்.

1959ஆம் ஆண்டு க்யூபாவின் அரசை வீழ்த்திய புரட்சிக்கு தலைமை தாங்கியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அந்த புரட்சியில் ராவுல் காஸ்ட்ரோ கமாண்டராக செயல்பட்டவர்.

2006ஆம் ஆண்டு உடல் நலம் குன்றும் வரை நாட்டின் அதிபர் பொறுப்பில் இருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதன்பின் அதிபர் பொறுப்பை 2008ஆம் ஆண்டு தனது சகோதரரிடம் வழங்கினார். ஃபிடல் காஸ்ட்ரோ 2016ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

மெக்ஸிகோவுக்கு பயணம்

1953ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்த மான்கடா படைத்தள தாக்குதலில் தனது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உதவியாக இருந்தார் ராவுல் காஸ்ட்ரோ.

தனது மனைவி மற்றும் ’சே’ வுடன்

பட மூலாதாரம், ULLSTEIN BILD

படக்குறிப்பு, தனது மனைவி மற்றும் 'சே' வுடன்

இந்த தாக்குதலில் பங்குதாரியாக இருந்ததற்காக 13 வருடங்கள் சிறைதண்டனை பெற்றார். பின் மன்னிப்பு வழங்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறி மெக்ஸிகோவில் இருந்தார்.

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், பொது மன்னிப்பு வழங்கப்பட்டு 19 மாதங்களுக்கு பிறகு மே 1955இல் விடுதலை செய்யப்பட்டார்.

அதே ஆண்டு மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ, அங்கு தனது வருங்கால சக போராளி மற்றும் நண்பரான எர்னஸ்டோ 'சே' குவேராவை சந்தித்தார்.

சக புரட்சியாளர்களுடன் ராவுல் மற்றும் 'சே'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சக புரட்சியாளர்களுடன் ராவுல் மற்றும் 'சே’ (1959ஆம் ஆண்டு)

1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 12 பேரை சுமந்து செல்ல உருவாக்கப்பட்ட நீர் கசியும் சொகுசு படகில், 81 ஆயுதம் தாங்கிய சகாக்களோடு ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவுக்கு திரும்பி வந்தனர்.

இந்த குழு சியர்ரா மாஸ்டிரா மலைகளில் அடைக்கலமானது. இந்த தளத்தில் இருந்து கொண்டு ஹவானாவில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு எதிராக அவர் கொரில்லா தாக்குதல்களை மேற்கொண்டது.

1959 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, கிளாச்சியாளர் படை கியூபாவின் தலைநகரில் நுழைந்தது. அதிபர் பாடிஸ்டா பதவியை துறந்து ஓடவிட்டது.

ஃபிடல் மற்றும் ராவுல்

பட மூலாதாரம், Getty Images

ராவுல் காட்ஸ்ரோவின் ஆட்சியில் க்யூபா

ஃபிடல் மற்றும் ராவுல்

பட மூலாதாரம், Getty Images

ராவுலின் ஆட்சியில் க்யூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே அதிகாரமிக்க கட்சியாக இருப்பதை உறுதி செய்தார்.

2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுடனான உறவு மேம்பட முயற்சிகளை எடுத்தார். இதில் 2016ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் ஒன்று. இருப்பினும் டிரம்பின் காலத்தில் பதற்றம் மீண்டும் அதிகரித்தது டிரம்ப் க்யூபா மீது மீண்டும் தடைகளை விதித்தார்.

ஒபாமாவுடன்

பட மூலாதாரம், Getty Images

அடுத்து என்ன?

பல தசாப்தங்களில் இல்லாத அளவு தீவிரமான பொருளாதார நெருக்கடியில் நாடு இருக்கும் சமயத்தில் நாட்டின் ஆளும் கட்சியின் தலைமை மாறுகிறது.

கொரோனா பெருந்தொற்று, நிதிச்சீரமைப்பு, டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடைகள் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 11 சதவீத அளவிற்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: