இந்தியாவில் கொரோனா: ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று, தீரும் படுக்கை, ஆக்சிஜன், பிரசாரத்தை ரத்து செய்த ராகுல்

தில்லியில்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் இன்று காலை வெளியான தகவல்படி முந்தைய 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மொத்தம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 1.47 கோடியாக அதிகரித்துள்ளது. சரியான எண்ணிக்கை: 1,47,88,109.

குணமாகாமல் நோய்த் தொற்றோடு உள்ளவர்கள் எண்ணிக்கை: 18,01,316.

மொத்தம் இறந்தவர்கள்: 1,77,150

இந்தியாவில் மொத்தம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்: 12,26,22,590.

நிகழ்ச்சிகளை ரத்து செய்த ராகுல்

இதற்கிடையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் தாம் பங்கேற்கவிருந்த எல்லா பிரசார நிகழ்வுகளையும் ரத்து செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

இது போன்ற நேரத்தில் இத்தகைய பிரசாரக் கூட்டங்களால் நாடும், மக்களும் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை அரசியல் கட்சிகள் உணரவேண்டும் என்று டிவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார் ராகுல்.

வாரணாசியில் கோவிட் நிலைமை குறித்து பிரதமர் ஆய்வு

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி

தமது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தொற்று நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஓர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

வாரணாசியில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று சனிக்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதிலும் 27,357 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், வாரணாசி நகரில் மட்டும் 1,664 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில் உள்பட வாரணாசியில் உள்ள மூன்று முக்கியக் கோயில்களுக்கும், ஓட்டல்களுக்கும் செல்வதற்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்து, அதில் தனக்கு கோவிட் இல்லை என்று வந்த சான்றிதழை காட்டவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் 3 நாள்களுக்குள் பரிசோதனை செய்து தரப்பட்டதாக இருக்கவேண்டும் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: