இந்திய வகை கொரோனா: தடுப்பூசிக்கு கட்டுப்படாதா? பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வகை மிகவும் வேகமாகப் பரவக்கூடியதா, தடுப்பூசிகளில் இருந்து தப்பிவிடும் ஆற்றல் கொண்டதா என்பது குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
எனினும் இந்தியாவில் பரவும் கொரோனா "கவலைக்குரிய வகை" என்பதற்குப் போதுமான தரவுகள் இல்லை என மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வெளிநாட்டுப் பயணத்துடன் தொடர்பில்லாத சில தொற்றுகளின் தோற்றுவாய் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக பிரிட்டன் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவிக்கிறார்.
இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் சேர்த்து சுமார் 70 இந்திய வகைக் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவை பயணத் தடைப் பட்டியலில் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து இப்போதே முடிவு செய்ய இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை கணக்குப்படி பிரிட்டனில் புதிதாக 1,882 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 3.28 கோடி பேருக்கு தடுப்பூசி பேர் தங்களது முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். 99 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணை போடப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் தேசிய சுகாதாரத்துறையின் பரிசோதனை மற்றும் தேடல் பிரிவின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஹாப்கின்ஸ், ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சியில் பேசினார்.
"இந்திய வகைக் கொரோனா தொற்று சிலரிடம் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். அவை பயணத்தின் மூலம் வந்தவையல்ல. அவை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதை அறிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார் ஹாப்கின்ஸ்.
"தீவிரமாகப் பரவக்கூடியதா, தடுப்பூசியில் இருந்து தப்பிவிடக்கூடியதா என்பவை எல்லாம் தெரிந்தால்தான் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு அது உறுதியாகத் தெரியாது."

பட மூலாதாரம், EPA
இந்திய வகைக் கொரோனா தொற்றுடைய 73 பேர் இங்கிலாந்திலும் 4 பேர் ஸ்காட்லாந்திலும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்திய வகை குறித்த விவரங்களை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்று பெருந்தொற்று நிபுணர் மைக் டைல்டெஸ்லே வலியுறுத்துகிறார்.
"இந்திய வகைக் கொரோனாவில் கவலைதரும் அம்சமாகத் தோன்றக்கூடியது, அதன் இரட்டைத் திரிபு. வேகமாகப் பரவக்கூடியதுடன், தடுப்பூசிகளுக்கு போதிய பலனில்லாமல் செய்துவிடும்."
"அப்படி 'இருக்கலாம்' என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான ஆதாரங்களைப் பெற முயற்சித்து வருகிறோம்"
இந்தியாவை பிரிட்டனின் பயணத் தடைப்பட்டியலில் வைக்க வேண்டுமா என்று கேட்டதற்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் எஸ்டிஸ், "இந்தியாவில் இருந்து வருவோர் பயணத்துக்கு முன்னரே சோதனை செய்து கொள்வதன் அடிப்படையிலேயே பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்." என்றார்.
"அதனால் நாட்டுககுள் வருவோருக்கு மிகத் தீவிரமான பரிசோதனைகளும், தடுப்பு முறைகளும் இருக்கின்றன."
இந்த நடைமுறை அவ்வப்போது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது என்னும் அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை அரசு கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் 25-ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் திட்டமிட்டபடி நடக்கும் நம்புவதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டு கொரோனா வகைகளை பிரிட்டனுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என லேபர் கட்சியின் உள்துறை நிழல் அமைச்சர் நிக் தாமஸ்-சைமன்ஸ் குற்றம்சாட்டினார்.
"கவலைதரக்கூடிய தென்னாப்பிரிக்க, இந்திய கொரோனா வகைகள் பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன" என்றார்.
"பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். மக்களின் தியாகத்துக்குப் பிறகு வாழ்வுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கையை தடுப்பூசிகள் அளித்திருக்கின்றன" என்றார்.
விடுதிகளில் தனிப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசு மிக மெதுவாக நடந்துகொள்வதாக லேபர் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் விமர்சித்தது. தடைப்பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், அனைத்து நாடுகளில் இருந்து வருவோரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
"தனிமைப்படுத்தும் திட்டம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கானோரை நாட்டுக்குள் அனுமதித்த அரசின் மோசமான கொள்கையின் விளைவுகளைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்றார் தாமஸ்-சைமன்ஸ்.
இந்திய வகையைத் தவிர பிற கொரோனா வகைகள் குறித்தும் பேசிய ஹாப்கின்ஸ், "தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவும் கொரோனா வகையைத் தடுப்பதில் போதிய திறன் இல்லை" என்றார்.
"இருப்பினும் நோய் தீவிரமடைவதையும், இறப்புகளையும் தடுப்பூசிகள் தடுக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்" என்றார் ஹாப்கின்ஸ்.
பிற செய்திகள்:
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
- புதிய கொரோனா கட்டுப்பாடு: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு
- நடிகர் விவேக்: சினிமாவுக்கு பாதை அமைத்த, மதுரை அமெரிக்கன் கல்லூரி குறும்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












