"அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து 'சங்கி', 'பி டீம்' என்பதா?": கமல்ஹாசன் பதிலடி

பட மூலாதாரம், Getty Images
(பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! இந்திய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.)
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து 'சங்கி', 'பி' டீம்' என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவதுதான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை காலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து 'சங்கி', 'பி' டீம்' என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?" என்று கூறியிருக்கிறார்.
மேலும், "தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை கமல் வெளியிட்டார். சூரப்பா மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிய நிலையில், தமிழக அரசு அது தொடர்பாக விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்தப் பின்னணியில்தான் அவருக்கு ஆதரவாக கமல் வீடியோவை வெளியிட்டார்.
இந்த வீடியோ தொடர்பாக, சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே தற்போது கமல் 'ட்வீட்' செய்திருக்கிறார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், CMO TAMILNADU FACEBOOK PAGE
தமிழ்நாட்டில் சாதிவாரியாக முழுமையான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கான ஆணையத்தை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்றை அமைக்கப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டிசம்பர் ஒன்றாம் தேதி அறிவித்தார்.
தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பல்வேறு காலகட்டங்களில் கோரிவரும் நிலையில், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன்கள் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டு தொடர்பான வழக்கை எதிர்கொள்வதற்காகவும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படப்போவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
ஆகவே, தற்போதைய நிலவரப்படி முழுமையான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை முடிவுசெய்து அப்புள்ளி விவரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருமென்றும் அரசு தெரிவித்துள்ளது.
வெனிசுவேலா தேர்தல்: எதிர்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை

பட மூலாதாரம், Reuters
தேசிய அவை என்று அழைக்கப்படும் வெனிசுவேலா நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த அவை 277 உறுப்பினர்களைக் கொண்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
வெனிசுவேலா நாட்டில் இருக்கும் பெரும்பாலான எதிர்க் கட்சிகள் இந்த தேர்தலை, ஒரு மோசடி என்று கூறிப் புறக்கணித்தன.
அமெரிக்கா உள்பட 50 நாடுகள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஹுவான் குவைடோவைத்தான் முறையான தலைவராக அங்கீகரித்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ, வெனிசுவேலா நாட்டில் நேற்று நடந்த தேர்தலை ஒரு மோசடி மற்றும் போலியானது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
வெனிசுவேலாவின் முறையற்ற அதிபரான நிகோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சி அறிவிக்க இருக்கும் தேர்தல் முடிவுகள், வெனிசுவேலா நாட்டு மக்களின் மனதை பிரதிபலிப்பதாக இருக்காது என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் பாம்பேயோ.
இந்த தேர்தல் வெனிசுவேலா நாட்டின் புதிய மீட்சியின் தொடக்கமாக இருக்கும் என, நேற்று தன் வாக்கைப் பதிவு செய்த பின் கூறினார் மதுரோ.
இந்த நேரத்துக்காகக் காத்திருக்கும் பொறுமையும், அறிவும் எங்களுக்கு இருந்தது என்றார் அவர்.
அதோடு, வெனிசுவேலா நாட்டின் மீது விதித்து இருக்கும் பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு, ஜோ பைடனிடம் வலியுறுத்த, வெனிசுவேலா நாட்டில் இருக்கும் எதிர்க் கட்சியினர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார் மதுரோ.
பிற செய்திகள்:
- இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












