இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மோதல் அதிமுக அலுவலகத்தில் வெடித்தது: "நீங்கள் எடுத்த முடிவுகளால்தான் தோல்வி"

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில், அ.தி.மு.க 65 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம், 125 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இதையடுத்து, `அ.தி.மு.கவில் எதிர்க்கட்சித் தலைவர் யார்?' என்ற கேள்வி எழுந்தது.
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் இருந்து அதிக எம்.எல்.ஏக்கள் கிடைத்ததால், எதிர்க்கட்சித் தலைவராக இ.பி.எஸ்ஸே அமர்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் பேசி வந்தனர்.
ஆனால், `எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வர வேண்டும்' என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அதேநேரம், வெளியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக கோஷம் எழுப்பினர். ` எப்போதுமே நாங்கள்தானே விட்டுக் கொடுத்துப் போகிறோம். இந்தமுறையும் விட்டுக் கொடுக்க வேண்டுமா?' என ஓ.பி.எஸ் தரப்பினர் சத்தம் போட்டுள்ளனர். இதற்கு இ.பி.எஸ் ஆதரவாளர்களும் பதில் கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதே மோதல் கட்சி அலுவலத்துக்குள்ளும் நடைபெற்றதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், `` எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க ஓ.பி.எஸ் தயாராக இல்லை. ஆனால், கொங்கு மண்டல எம்.எல்.ஏக்களோ, `மாநிலம் முழுக்க இ.பி.எஸ் பிரசாரம் செய்ததால்தான் 65 தொகுதிகளில் நம்மால் வெல்ல முடிந்தது. கொங்கு மண்டலத்திலும் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றோம். எனவே, இ.பி.எஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வர வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.
இதற்குப் பதில் கொடுத்த ஓ.பி.எஸ் தரப்பினர், ` தேர்தலில் நீங்கள் எடுத்த முடிவால்தான் தோல்வி ஏற்பட்டது. வன்னியர் இடஒதுக்கீடு கொடுத்ததால்தான் தென்மண்டலத்தில் தோல்வி ஏற்பட்டது. முதல்வர் வேட்பாளராக உங்களை முன்மொழிந்தோம். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக எங்களை முன்னிறுத்த நீங்கள் சம்மதிக்கத்தான் வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலர் ஓ.பி.எஸ் பக்கம் ஆதரவாக இருந்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் சிலர், ` தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் உங்களைத் (ஓ.பி.எஸ்) தவிர வேறு யாருமே வெற்றி பெறவில்லையே. நீங்கள் எப்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேட்கலாம்?' எனக் கேட்டுள்ளனர். இதற்கு ஓ.பி.எஸ் தரப்பினர் சத்தம் போட்டுள்ளனர். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நீடித்ததால் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துவிட்டனர். அதில் சுமூக முடிவை எட்ட வேண்டும் என்றால், இருவரில் யாராவது ஒருவர் சமாதானம் ஆனால்தான் உண்டு" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
`` மூன்றரை மணிநேரம் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடந்தும் எதுவும் முடிவாகவில்லை. `என்னை அறிவியுங்கள்' என எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுக்கிறார். ஓ.பி.எஸ்ஸும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். `சட்டமன்றத் தேர்தலில் தென்மண்டலத்தில் ஓ.பி.எஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டதற்குக் காரணமே எடப்பாடி தரப்பினர்தான்' என்பதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர்.
குறிப்பாக, வன்னியர் இடஒதுக்கீடு, தே.மு.தி.கவை கழட்டிவிட்டது என எடப்பாடியின் தன்னிச்சையான செயல்பாடுகளால் கட்சிக்குத் தோல்வி ஏற்பட்டதாகவும் ஓ.பி.எஸ் கருதுகிறார். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மோதல் வலுத்ததால், ` நீங்கள் எல்லாம் பொறுமையாக இருங்கள். நாங்கள் பேசி முடிவெடுக்கிறோம்' என இருவரும் கூறிவிட்டனர். இதில், கட்சியின் நலனுக்காக ஓ.பி.எஸ் விட்டுக் கொடுப்பாரா அல்லது இ.பி.எஸ் விட்டுக் கொடுப்பாரா என்பது திங்கள்கிழமை காலை தெரிந்துவிடும்" என்கிறார்.
`எதிர்க்கட்சித் தலைவர் பதவி மோதல் முடிவுக்கு வருமா?' என பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தலைமையில் பேசி முடிவு செய்வார்கள். இரு தரப்பிலும் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக இப்போதைக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்கிறார்.
பிற செய்திகள் :
- கொரோனா அலை: தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு, டாஸ்மாக், அம்மா உணவகம் நிலை என்ன?
- மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், பால் விலை குறைப்பு
- தலைமைச் செயலாளர் இறையன்பு: முதல்வரின் செயலாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்
- கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்களிக்க அமெரிக்கா ஆதரவு
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








