வண்டலூர் உயிரியல் பூங்கா: பெண் சிங்கம் இறப்புக்கு காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா தொற்று காரணமாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 வயதான பெண் சிங்கம் உயிரிழந்து விட்டது. மேலும், 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `எந்த வகையில் வைரஸ் தாக்கியிருக்கக் கூடும் என்பதில் குழப்பம் நிலவுவதால், ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்பியுள்ளோம்' என்கின்றனர் பூங்கா அதிகாரிகள். என்ன நடந்தது?
சென்னை வண்டலூரியில் 602 ஹெக்டேர் பரப்பளவில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பூங்காவில் 160 இனங்களைச் சேர்ந்த 1,500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சென்னைக்கு அருகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தளமாக வண்டலூர் இருப்பதால் ஆண்டுக்கு 23 லட்சம் பேர் வரை விலங்குகளைப் பார்வையிடுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவிக்கிறது. இது தவிர, விலங்குகளை நேரலையில் பார்ப்பதற்கான இணைய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக பூங்கா மூடப்பட்டிருப்பதால் விலங்குகளையும் பறவைகளையும் ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி கொரோனா தொற்றால் நீலா என்கின்ற ஒன்பது வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. தொடர்ந்து 11 சிங்கங்களுக்கு நடந்த பரிசோதனையில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 2 சிங்கங்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உயிரியல் பூங்கா நிர்வாகம், சிங்கங்களை பராமரித்து வந்த நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல் பரவியது.
`ஊழியர்கள் மூலமாக சிங்கங்களுக்குத் தொற்று பரவியிருக்கலாம்' என்ற கோணத்தில் அதிகாரிகளும் மருத்துவர்களும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
நேரில் ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்!

பட மூலாதாரம், MK Stalin, Facebook
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதன்பின்னர், விலங்குகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
பெண் சிங்கம் உயிரிழந்ததைத் தொடர்ந்து முழு கவச உடையை அணிந்த பிறகே ஊழியர்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், ஜூன் 6 ஆம் தேதி உயிரியல் பூங்காவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ` சிங்கங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு செய்தேன். தொற்று ஏற்பட்ட சிங்கங்கள் முழு நலன் பெறுவதற்கும் பரவலைத் தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஹைதராபாத்திலும் 8 சிங்கங்கள்!
இதேபோல், ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கோவிட் தொற்றுக்கு ஆளான 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அவை இயல்பாக நடமாடி, உணவு உண்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், `சிங்கங்களைத் தாக்கியது மாறுபட்ட வகை கொரோனா அல்ல' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து உயிரியல் பூங்காங்களுக்கும் வழிகாட்டுதல்கள், தடுப்பு நடவடிக்கைகளை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழங்கியுள்ளது. கொரோனா தொற்றானது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவுவதைத் தடுக்க தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் உள்பட விலங்குகள் நடமாடும் பகுதிகளையெல்லாம் மூடுவதற்கும் இந்திய வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
`` மனிதர்களுடன் பழகுவதால்தான் விலங்குகளுக்கு கொரோனா தொற்று வருவதாகச் சொல்கின்றனர். மனிதர்களுக்கு சிகிச்சையளிப்பதைப் போல விலங்குகளுக்கும் சிகிச்சை முறைகளைத் தொடர்வது மிகவும் கடினமானது. மனிதர்களுக்கு வாய் மற்றும் மூக்கில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்க முடியும். ஆனால், சிங்கம், புலி போன்றவற்றுக்கு இவ்வாறு எடுப்பது மிகவும் சிரமம். ஆனால், வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுத்துள்ளனர். இதில், இறந்து போன நீலா என்ற பெண் சிங்கத்தை பரிசோதனை செய்ததில் `கோவிட் பாசிட்டிவ்' என வந்துள்ளது. மேலும், 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்கிறார் மூத்த கால்நடை மருத்துவர் பன்னீர்செல்வம்.
இவர் டெல்லி வனவிலங்கு சரணாலயத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கங்களுக்கு எப்படிப் பரவியது?

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில தகவல்களை அவர் விவரித்தார்.
``வண்டலூர் பூங்காவில் 2 இடங்களில் சிங்கங்கள் உள்ளன. ஒன்று பொதுமக்கள் பார்க்கக்கூடிய பாதை. அதில் பாதிப்பு ஏற்பட்டதா என்பதற்கு அதிகாரபூர்வ தகவல் இல்லை. அடுத்ததாக சஃபாரி பகுதியில் எளிதாக சிங்கம் சுற்றி வரும். அங்கு இவைகள் கூட்டமாக இருக்கும். அதில்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனச் சொல்கிறார்கள். அதாவது ஒரு சிங்கத்திடம் இருந்து இன்னொரு சிங்கத்துக்கு பரவியிருக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனிதர்களிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும்.
ஹைதராபாத் மற்றும் குஜராத் வனவிலங்கு பூங்காவில் இதுபோன்று பரவியதாக தகவல் வந்தது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார்களா எனத் தெரியவில்லை. பொதுவாக, விலங்குகளுக்கு மிகவும் நெருக்கமாக பணிவிடை செய்யக் கூடியவர்களை முழுதாக பரிசோதனை செய்திருக்க வேண்டும். தற்போது சிங்கங்களுக்கான சிகிச்சையில் உரிய கவனம் செலுத்தி வருகின்றனர். வண்டலூரில் 2 சிங்கங்கள் சீரியஸாக உள்ளதாகக் கூறுகின்றனர். மற்றவை சிகிச்சைக்குப் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது" என்கிறார்.
விலங்குகளுக்கு செயற்கை ஆக்சிஜன்?

பட மூலாதாரம், Getty Images
`கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் அதை எவ்வாறு சரிசெய்வார்கள்?' என கேட்டோம்.
``பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர் தினசரி விலங்குகளை பார்வையிட வேண்டும் என்பது விதி. அதில் விலங்குகளின் இயல்பான சுவாசத்துக்கும் சிரமப்பட்டு சுவாசிப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். அதன்பிறகு மூக்கில் இருந்து தண்ணீர் போன்று எதாவது வருகிறதா எனக் கவனித்து தனிமைப்படுத்த வேண்டும். பொதுவாக உயிரியல் பூங்காக்களில் இதுபோன்ற பிரச்னைகள் வந்தால் இதை ஒரு சாதாரண விஷயமாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.
சில விலங்குகள் இரண்டு நாள் உணவு அருந்தாமல் இருக்கும். மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். இதனை சாதாரணமாக நினைத்துக் கொண்டு சிகிச்சையளிப்பதையும் குறை சொல்ல முடியாது. அதனை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகளைத் தொடங்குவோம். ஆனால், கொரோனா என எடுத்தவுடனே முடிவு செய்ய மாட்டார்கள். இதனால்தான் வண்டலூரில் பெண் சிங்கம் இறந்துபோகும் அளவுக்கு சிக்கல் ஏற்பட்டது. விலங்குகளுக்கு கொரோனா வந்தால் அதை தனிமைப்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளை அளிக்க வேண்டும்.
அதனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சற்று நேரம் செயற்கை ஆக்சிஜனை கொடுக்கலாம். மனிதர்களைப்போல விலங்குகளை முழுமையாக வெண்டிலேட்டரில் வைப்பது சற்று கடினமான விஷயம். தற்போதுள்ள நிலையில் பூங்கா நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பூங்காவில் சிம்பன்ஸிகளும் குரங்குகளும் நிறைய உள்ளன. இவைகளுக்கும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளது," என்கிறார்.
விலங்குகளுக்கான தடுப்பூசியில் அலட்சியமா?

பட மூலாதாரம், Getty Images
`விலங்குகளுக்கான கோவிட் தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. நமக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதா?' என்றோம்.`` ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் விலங்குகளுக்குத் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இதனை இறக்குமதி செய்வது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும், இந்தியாவுக்கு இந்த மருந்தைக் கொண்டு வருவதில் நிறைய தடைகள் உள்ளன. மத்திய உயிரியல் பூங்கா ஆணையம்தான் இதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். இதுவரையில் சர்வதேச அளவில் இருந்து விலங்குகளுக்கான தடுப்பூசியை இந்தியா இறக்குமதி செய்யவில்லை.
விலங்குகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கத்தான் முயற்சி மேற்கொள்கிறோமே தவிர, தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைளை எடுப்பதில்லை. இங்கு விலங்குகளுக்கான கோவிட் தடுப்பூசி மருந்தே இல்லை. `என்ன நடக்கப் போகிறது பார்ப்போம்' என்ற மனநிலையில்தான் உள்ளனர். ஒரு சிலர் பூனை மற்றும் நாய்களுக்கு தடுப்பூசி கொண்டு வந்துள்ளனர். அதுவும் எந்தளவுக்கு பலன் தருகிறது என யாரும் ஆய்வு நடத்தவில்லை" என்கிறார்.
மேலும், `` விலங்குகளுக்கு கொரோனா பரவுவதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு உயிரியல் பூங்காவில் இருந்தும் விலங்குகளை பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். அப்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சான்று இருந்தால்தான் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்க வேண்டும். சிங்கம், புலி, குரங்கு ஆகிய விலங்குகளில் கொரோனா எளிதில் பரவும். விலங்குகளுக்கான சிகிச்சையில் மட்டும் கவனம் செலுத்தாமல் தடுப்பூசியிலும் அக்கறை செலுத்த வேண்டும். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு எப்படி அக்கறை எடுத்து சிகிச்சை அளிக்கிறார்களோ அதே அக்கறையை விலங்குகளின் நலனிலும் காட்டப்பட வேண்டும்" என்கிறார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக, வனத்துறை அமைச்சர் இளித்துறை க.ராமச்சந்திரனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். ``ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்" என்றார்.
ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனாவா?

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து, `பூங்கா ஊழியர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மையா?' என வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் சதீஷிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``இல்லை. மூன்று பேருக்கு கொரோனா பரவியதாக வெளியான தகவல் தவறானது. அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. விலங்குகளைப் பராமரிக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் முறையாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை எதற்காக நாங்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தப் போகிறோம்?
கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சொல்லப்போனால், உயிரியல் பூங்காவில் உள்ள 350 ஊழியர்களில் 250 பேருக்கு முதல் சுற்று தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இரண்டு முறை பூங்காவிலேயே தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதற்கான உதவிகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செய்து கொடுத்தார்," என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` பூங்காவில் உள்ள விலங்குகளுக்கான பழங்கள் வந்தால் அதனை பொட்டாசியம் பர்மாங்கனேட்டில் முக்கி எடுத்துவிட்டு சுடுதண்ணீரில் நனைத்து சுத்தப்படுத்திவிட்டுத்தான் கொடுக்கிறோம்.
அசைவ உணவுகளை சுத்தப்படுத்த எங்களிடம் அல்ட்ரா வயலட் சுத்திகரிப்புக்கான அறை (Ultra violet Sterilization) ஒன்று உள்ளது. அங்கு அவற்றைக் காட்டிவிட்டுத்தான் விலங்குகளுக்குக் கொண்டு செல்கிறோம். விலங்கு மற்றும் பறவைகளுக்கான உணவை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதை நாள்தோறும் உறுதி செய்கிறோம்," என்கிறார்.
அறிகுறியே இல்லாத கொரோனா
` விலங்குகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான யோசனைகள் ஏதேனும் அரசுக்கு உள்ளதா?' என்றோம். `` தற்போது வரையில் எங்குமே தடுப்பூசி முயற்சிகள் நடைபெறவில்லை. சாண்டியாகோ பூங்காவில் மட்டும் கொரில்லாவுக்கு தடுப்பூசி போட உள்ளதாகத் தகவல் வந்தது. வண்டலூரில் சிங்கங்களுக்கு வந்த கொரோனா திரிபு என்னவென்று தெரியவில்லை.
இது தொடர்பான மரபணு மூலக்கூறை (Genome sequencing) ஆராயும் முயற்சியில் இறங்கியுள்ளோம். மனிதர்களுக்கு வந்த கொரோனா தொற்றில் இருபதுக்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் உள்ளன. வண்டலூர் பூங்காவை போல ஜெய்ப்பூர், ஹைதராபாத் உள்ளிட்ட பூங்காக்களிலும் விலங்குகளுக்கு கொரோனா தொற்று வந்துள்ளன. ஸ்பெயின், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் வந்துள்ளன.
இங்கு வந்தது என்ன வகையான உருமாற்றம் என்பதைக் கண்டறிய அதன் மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பியுள்ளோம். வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. இவைகளுக்கு எதாவது ஒன்றின் வழியாகத்தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், இறந்து போன சிங்கத்துக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது" என்கிறார்.
இறைச்சி மூலம் பரவியதா?

பட மூலாதாரம், Getty Images
`ஊழியர்கள் மூலமாக பரவவில்லை என்றால் வேறு எப்படி வந்திருக்கும்?' என்றோம். `` அதுதான் தெரியவில்லை. விலங்குகளுக்கான இறைச்சி, பெரம்பூரில் உள்ள இறைச்சிக் கூடத்தில் இருந்து வருகிறது. அங்கு ஆடு, மாடுகளை வெட்டிய பிறகு நிறைய கைகள் மாறி இங்கு வருகின்றன. இங்கு வந்தாலும் அல்ட்ரா வயலட் ஸ்டெர்லைஷேசன் (UV sterlisation) செய்கிறோம். இந்த யு.வி முறையால் கொரோனா வைரஸ் அழியுமா எனச் சொல்ல முடியாது. எங்கள் ஊழியர்கள் வரையில்தான் எங்களால் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். உணவு மூலமாக பரவியதா என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். ஒரு விலங்கில் இருந்து இன்னொரு விலங்கு மூலமாகத்தான் பரவியிருக்கும் என நினைக்கிறோம்.
சிங்கங்களைத் தவிர வேறு எந்த விலங்குக்கும் பரவியிருக்குமா எனத் தெரியவில்லை. தற்போது புலி, சிறுத்தைகளின் சளி மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறோம். தற்போது சிகிச்சையில் உள்ளவற்றில் 2 வயதான சிங்கங்கள் மட்டுமே குணமடைவதில் தாமதம் ஏற்படுகிறது. மற்றபடி, உணவை நல்லபடியாக எடுத்து வரும் சிங்கங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. இந்த வைரஸ் குறித்து பல விஷயங்கள் பிடிபடவில்லை. யாரால் வந்திருக்கும் எனவும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகச் சரியாக செய்து வருகிறோம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் ஏற்படுவதற்கு நீரிழிவு காரணமா?
- 400 கால்பந்து திடல்களின் அளவில் 8 கோடி டன் மண் கொண்டு செயற்கை தீவு: டென்மார்கில் நிறைவேறிய சட்டம்
- இந்தியாவில் யுரேனியம் விற்க கள்ளச்சந்தை? - கவலை எழுப்பும் பாகிஸ்தான்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
- ஒலியைவிட வேகமாக செல்லும் பயணிகள் விமானம்: அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டம்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












