வன விலங்கிடம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு

மிங்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிங்க்
    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, பிபிசி சூழலியல் நிருபர்

வன விலங்கு ஒன்றிடம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வனவிலங்குகளை பரவலாக கண்காணிப்பதற்கான தேவையை உருவாக்கியுள்ளது.

'மிங்க்' எனப்படும் ஒரு வகை எலி போன்ற உயிரினத்தை அதன் ரோமத்துக்காக பண்ணைகளில் வளர்க்கிறார்கள்.

அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் மிங்க் விலங்குகளுக்குத் தொற்று ஏற்பட்ட பண்ணையை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் வசிக்கும் மிங்க் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க விவசாயத்துறை கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், ரோமங்களுக்காக பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவந்த பல லட்சக்கணக்கான மிங்குகள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் கொல்லப்பட்டன.

வன விலங்கு கண்காணிப்பின்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல தரப்பட்ட விலங்குகளை சோதித்துப் பார்த்தபோது, வேறு எந்த விலங்குக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது என அந்தத் துறை குறிப்பிடுகிறது.

இது தொடர்பாக உலக வன விலங்கு சுகாதார அமைப்புக்கு தெரியப்படுத்தி இருப்பதாகக் கூறுகிறது அமெரிக்க விவசாயத் துறை. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மிங்க் பண்ணைகளைச் சுற்றி இருக்கும் வன விலங்குகள் மத்தியில், கொரோனா வைரஸ் பரவலாக பரவி இருக்கிறது என்பதற்கான ஆதாரம் இல்லை எனவும் அது குறிப்பிடுகிறது.

எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரமாகச் சுற்றித் திரியும் வன விலங்குகள் மத்தியில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் விலங்கு இது தான் என வேளாண் துறை, தொற்று நோய்களுக்கான சர்வதேச சங்கத்திடம் தெரிவித்திருக்கிறது

ஒரு மிங்க்-க்கு வந்த கொரோனா வைரஸ், மற்ற மிங்குகளுக்கு பரவலாம் என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ நிபுணர் மருத்துவர் டன் ஹார்டன்.

மேலும் "இது வன விலங்குகளைக் கண்காணிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அதிகரிக்கிறது" என்றும் அவர் கூறினார்.

மிங்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பண்ணை ஒன்றில் மிங்க்.

பொதுவாக மிங்குகள், பண்ணைகளிலிருந்து தப்பித்து வனத்தில் வாழும். பிரிட்டனில் பல ஆண்டுகளுக்கு முன்னால், ஃபர் பண்ணைகளிலிருந்து தப்பித்த மிங்குகள் எங்கோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் அவை பரவலாக பரவிக் கிடக்கின்றன. மிக அரிதாகவே மக்களுடன் தொடர்பில் வருகின்றன என்கிறார் மருத்துவர் ஹார்டன்.

அமெரிக்காவில், வன விலங்கு பூங்காக்களில் வாழும் புலிகள், சிங்கங்கள் மற்றும் பனிச் சிறுத்தைகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன் வீடுகளில் வாழும் பூனைகள் மற்றும் நாய்களில் கூட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :